|
வணக்கம்!
இதயவீணையின் செய்திகள்!! 07.02.2010
செய்தியாசிரியர்: மேதினி
வாசித்தளிப்பவர்: கௌரி
முதலில் தலைப்புச் செய்திகள்!!!
.மொஸ்கோவிலுள்ள உலகப் பிரசித்திபெற்ற
ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகம்لل
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கௌரவ
கலாநிதி பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது.
.இலங்கையில் மேற்கொள்ளப்படும் உட்கட்டுமானப்
பணிகளை முன்னெடுப்பதற்காக சீன அரசாங்கம்
350 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.
.யாழ்.ஒல்லாந்தர் கோட்டையை நெதர்லாந்து
அரசின் உதவியுடன் புனரமைப்பதற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது
.அத்தியாவசிய சேவையில் ஈடுபடும்
சுகாதார ஊழியர்கள் அனைவரும் எதிர்காலத்தில்
தபால் மூலம் வாக்களிப்பதற்கான அங்கீகாரத்தை
அமைச்சரவை வழங்கியுள்ளது.
.வவுனியா நிவாரண முகாம்களில் தங்கியுள்ள
சிறுவர்களுக்கென 18நடமாடும் நூலகங்களைச்
செயற்படுத்துவதற்கு ஜப்பான்
தீர்மானித்துள்ளது.
மொஸ்கோவில் அமைந்துள்ள உலகப் பிரசித்திபெற்ற
ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கௌரவ
கலாநிதி பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது.
ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தின்
50வது ஆண்டு நிறைவையொட்டி மொஸ்கோ கிரம்லின்
மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவிற்கு உயரிய கௌரவம்
வழங்கப்பட்டுள்ளது.
-----------
இலங்கையில் யுத்தத்திற்கு பின்னர்
மேற்கொள்ளப்படும் உட்கட்டுமானப் பணிகளை
முன்னெடுப்பதற்கு சீனா 350மில்லியன்
அமெரிக்க டொலர்களை உதவியாக
வழங்கவுள்ளதாக சீன ஜனாதிபதி கூ ஜின்ரா
தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு
அனுப்பி வைத்துள்ள சுதந்திரதினச்
செய்தியில் இதனைத் தெரிவித்துள்ள சீன
ஜனாதிபதி இலங்கை மக்கள் சீனாவின்
சிறந்த பங்காளிகள் என்றும் அடுத்த
வருடங்களில் உறவுகளை மேலும்
வலுப்படுத்தவுள்ளதாகத்
தெரிவித்துள்ளதுடன் இலங்கையின்
வளர்ச்சிக்கு சகல விதமான
ஒத்துழைப்பையும் சீனா வழங்கும் என்றும்
தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் சேதமடைந்த வீதிகள்
மற்றும் போக்குவரத்துப் பாதைகளை
புனரமைப்பதற்காக 350மில்லியன்
அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாகத்
தெரிவித்த சீன ஜனாதிபதி கூ ஜின்ரா
ஏற்கனவே ஹம்பாந்தோட்ட துறைமுக
அபிவிருத்தி உட்பட பல்வேறு
அபிவிருத்தித் திட்டங்களுக்காக
6.1கோடி அமெரிக்க டொலர்களை
வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
---------------
பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியுடன் இணைந்து
போட்டியிடுவதென இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
மலையக மக்களின் எதிர்கால நலனையும்
அபிவிருத்தியையும் கருத்திற்கொண்டு
அரச தரப்புடன் இணைந்து
போட்டியிடுவதெனத் தீர்மானித்துள்ளதாக
காங்கிரஸின் தலைவரும் தேச நிர்மாண
தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான
முத்து சிவலிங்கம்; தெரிவித்துள்ளார்.
------------
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றுநாள்
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு
நேற்று ரஷ்யாவிற்குச்
சென்றடைந்துள்ளார்.
மொஸ்கோ சர்வதேச விமான நிலையத்தைச்
சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு பெரு
வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது
தடவையாகவும் ஜனாதிபதியாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னர்
முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக
ரஷ்யாவுக்கு விஐயம் செய்துள்ளதாகவும்
இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை
வலுப்படுத்தும் வகையில் நாளை ரஷ்ய
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை
நடாத்தவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 300மில்லியன் அமெரிக்க
டொலருக்கான இருதரப்புக் கடன்
உடன்படிக்கையொன்றிலும் ஜனாதிபதி
கைச்சாத்திடவுள்ளதுடன் இரு நாடுகளுக்கு
மிடையிலான இரு தரப்பு உடன்படிக்கைகள்
நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகக்
கைச்சாத்திடப்படவுள்ளதாகவும்
வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த
போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
-------------
சிறைச்சாலைகளிலுள்ள பெண்கள் தங்களது
சிறார்களுடன் தங்கியிருப்பதற்கு
ஏற்றவகையில் களுத்துறைப் பிரதேசத்தில்
புதிய சிறைச்சாலை ஒன்று
நிர்மாணிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை
திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளிலுள்ள மனோதத்துவ
பிரச்சனைகளில் இருந்து சிறார்களைப்
பாதுகாக்கும் நோக்கில் இத்தகைய ஏற்பாடு
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை
பேச்சாளர் கெனத் பெர்ணாண்டோ
தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித்
திட்டத்தின் கீழ் சிறைச்சாலை
ஆணையாளரின் பரிந்துரைக்கமைய இந்தச்
சிறைச்சாலை திறந்தவெளி சிறைக்கூடமாக
அமையும் எனத் தெரிவித்த சிறைச்சாலை
பேச்சாளர் அமைக்கப்படவுள்ள சிறைச்சாலை
கட்டடத் தொகுதியில் விளையாட்டு மைதானம்
மற்றும் உரிய கல்விகளை
மேற்கொள்வதற்கான வசதிகளும்
செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சிறைச்சாலைத் தொகுதி
எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதியில்
செயற்படும் என
எதிர்பார்க்கப்படுவதாகவும் சிறைச்சாலை
பேச்சாளர் கெனத் பெர்ணாண்டோ
தெரிவித்துள்ளார்.
------------
யாழ். ஒல்லாந்தர் கோட்டை சுமார்
300வருடங்கள் பழைமை வாய்ந்ததெனவும்
அதனை நெதர்லாந்து அரசின் உதவியுடன்
புனரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
ஒல்லாந்தர் கோட்டையயைப்
புனரமைப்பதற்கான பிரேரணையை கலாசார
மற்றும் தேசிய உரிமைகள் அமைச்சர்
மஹிந்த யாப்பா அபேவிக்ரம அமைச்சரவையில்
முன்வைத்திருந்தார்.
புனரமைப்பின் முதற்கட்டம் நெதர்லாந்து
அரசு வழங்கும் 62.1 மில்லியன் ரூபா
செலவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்
இத்திட்டத்தினை முடிக்க மேலும்
தேவைப்படும் 42.4 மில்லியன் ரூபா
தேசிய நிதியத்திலிருந்து பெறப்படும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------
டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த
கியுபாவிலிருந்து 30ஆயிரம் லீற்றர்
பீ.டி.ஐ. பெற்றீரியாவை இறக்குமதி
செய்ய அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
கியுபாவிலிலுந்து பீ.டி.ஐ.
பெற்றீரியாவை இறக்குமதி செய்வதற்கன
பிரேரணையை சுகாதார அமைச்சர் நிமல்
சிறிபால டி சில்வா அமைச்சரவையில்
முன்வைத்திருந்தார்.
இந்த வகைப் பெற்றீரியாவை பயன்படுத்தி
டெங்கு நோய்க் கிருமிகளைக்
கட்டுப்படுத்தும் முதல்கட்ட
நடவடிக்கைகளை கண்டி மாவட்டத்தில்
மேற்கொள்ளவதற்கும் அமைச்சரவையால்
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
----------------
வடக்கில் கிளிநொச்சி மற்றும்
முல்லைத்தீவு மாவட்டங்களில்
இடம்பெயர்ந்த மக்களை
மீளக்குடியமர்த்தும் பணிகள் மீண்டும்
ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள்
முடிவடையாமை மற்றும் அண்மையில்
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் என்பன
காரணமாக மீள்குடியேற்றப் பணிகள்
தாமதமடைந்திருந்ததாகத் தெரிவித்துள்ள
முல்லைத்தீவு அரசாங்க அதிபர்
மீளக்குடியமர்பவர்களுக்கு உடனடியாகத்
தேவைபடும் தற்காலிக வீடுகளை
அமைப்பதற்கான கூரைத்தகடுகளின்
கையிருப்பு முடிவடைந்ததன் காரணமாகவே
மீள்குடியேற்ற நடவடிக்கைகள்
தாமதமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத்
தேவையான கூரைத்தகடுகள் தேசத்தைக்
கட்டியெழுப்பும் அமைச்சினால்
கொழும்பில் இருந்து அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதையடுத்து
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தற்போது
மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும்
முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மேலும்
தெரிவித்துள்ளார்.
---------------
அத்தியாவசிய சேவையில் ஈடுபடும்
சுகாதார ஊழியர்கள் அனைவரும் இனிமேல்
தபால் மூலம் வாக்களிப்பதற்கான
அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.
சுகாதார ஊழியர்கள் வாக்களிப்பதற்கான
பிரேரணையை சுகாதார அமைச்சர் நிமல்
சிறிபால டி சில்வா அமைச்சரவையில்
முன்வைத்திருந்தார்.
நாட்டிலுள்ள சகல அரசாங்க
வைத்தியசாலைகளிலும் கடமையாற்றும் சகல
தரத்திலுள்ள ஊழியர்களுக்கும் இச்சலுகை
வழங்கப்படுமெனத்
தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதித்
தேர்தல் பொதுத் தேர்தல் மாகாண சபைத்
தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்றத்
தேர்தல்கள் ஆகியவற்றில் அவர்கள் தபால்
மூலம் வாக்களிக்கும் உரிமையைப்
பெற்றுள்ளார்கள் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------
2009மற்றும் 2010 ஆண்டு
பெரும்போகத்தில் நெல்லைக் கொள்வனவு
செய்வதற்காக406 கோடி ரூபாவை ஒதுக்கீடு
செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
1லட்சத்து 40ஆயிரம் மெற்றிக் தொன்
அரிசியை கொள்வனவு செய்வதற்கு நெல்
கொள்வனவுச் சபைக்கு அனுமதி
கிடைத்துள்ளதாகவும் இதற்கிணங்க சம்பா
நெல் ஒரு கிலோ 30ரூபா வீதமும் நாட்டு
நெல் ஒரு கிலோ 28ரூபா வீதமும் கொள்வனவு
செய்யப்படவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------
இலங்கை ராணுவத்தின் உத்தியோகபூர்வ
பேச்சாளராக பிரிகேடியர் பிரசாத்
சமரசிங்க மீண்டும்
நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய ராணுவப் பேச்சாளரர்
பிரிகேடியர் உதய நாணயக்கார பதவி
மாற்றம் பெற்றுச் செல்வதால் எதிர்வரும்
8ம் திகதி முதல் பிரசாத் சமரசிங்க
பதவியேற்கவுள்ளார்.
ஏற்கனவே ராணுவப் பேச்சாளராக
சேவையாற்றிய பிரசாத் சமரசிங்க மிக
முக்கியமான ராணுவ நடவடிக்கைகள் மற்றும்
மோதல்கள் இடம்பெற்ற வேளைகளில்
சிறப்பாக பணிபுரிந்துلل ஊடகங்களில்
மிக முக்கிய இடத்தைப்
பிடித்திருந்ததும்
குறிப்பிடத்தக்கதாகும்.
தேசிய சர்வதேச ஊடகவியலாளர்களுடன்
நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த
பிரசாத் சமரசிங்க ராணுவ நடவடிக்கைகள்
தொடர்பான செய்திகளை உடனுக்குடன்
தெரியப்படுத்தியதுடன் ஊடகவியலாளர்கள்
எந்த நேரமும் தொடர்பு கொள்ளக்கூடிய
பேச்சாளராகவும் விளங்கினார்.
---------------
வவுனியா நிவாரண முகாம்களில்
தங்கியுள்ள சிறுவர்களுக்கென
18நடமாடும் நூலகங்களைச்
செயற்படுத்துவதற்கு ஜப்பான்
தீர்மானித்துள்ளது.
நிவாரண முகாம்களிலுள்ள சிறுவர்களின்
கல்வி வளர்ச்சியினை நோக்காகக் கொண்டே
இச்செயற்திட்டத்தினை
முன்னெடுத்துள்ளதாக இலங்கைக்கான
ஜப்பானியத் தூதரகம் அறிவித்துள்ளது.
புத்தகங்களை வழங்கும் முதற்கட்ட
நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாகவும்
அன்றைய தினம் மனிக்பாம் முகாம்
சிறுவர்களுக்கான நூல்களை வட மாகாண
ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம்
கையளிப்பதற்கான ஏற்பாடுகளை
இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம்
மேற்கொண்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------
கடந்தகால யுத்த அனர்த்தங்களால்
சேதமடைந்த சாவகச்சேரி முஹைதீன் ஜும்மா
பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு ஜும்மா
தொழுகையுடன் திறக்கப்பட்டுள்ளது.
கண்டி நுவரெலியா ஆகிய இடங்களைச்
சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்களால்
அப்பள்ளிவாசல் கட்டிடம்
புனரமைக்கப்பட்டு ஜும்மா தொழுகையுடன்
திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும்
யாழ்.மாவட்டத்தில் சேதமடைந்த எட்டுப்
பள்ளிவாசல்களும் முஸ்லிம்
பிரமுகர்களால் புனரமைக்கவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சாவகச்சேரி கொடிகாமம் ஆகிய
இடங்களிலுள்ள பள்ளிவாசல்கள்
புனரமைக்கப்பட்டுள்ளதும்
குறிப்பிடத்தக்கதாகும்.
-----------------
யாழ்.போதனா வைத்தியசாலையில்
6.37மில்லியன் ரூபா செலவில்
நிர்மானிக்கப்பட்டுள்ள இருதய சிகிச்சை
ஆய்வுகூடம் நாளைய தினம் இலங்கைக்கான
கனேடிய தூதர் புறூஸ் லெபி திறந்து
வைக்கவுள்ளார்.
இந்த இருதய சிகிச்சை ஆய்வுகூடத்தை
நிர்மானிப்பதற்கான நிதியுதவியை கனேடிய
சர்வதேச அபிவிருத்தி நிறுவனமும்
சர்வதேச வைத்திய சுகாதார நிறுவனமும்
வழங்கியிருந்ததும்
குறிப்பிடத்தக்கதாகும். |