|
கடற்தொழிலில் 24 மணிநேரமும் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ள
நிலையில் யாழ் குடாநாட்டு கடற்தொழிலாளர்களுக்கு
தங்களது தொழில்துறைகளில் சுதந்திரமாகவும்
விரிவாகவும் ஈடுபட இன்னும் சிற்சில தடைகள்
இருப்பதை தான் உணர்ந்து கொண்டுள்ளதாகவும்
நாளடைவில் இவ்வாறான தடைகள் அனைத்தையும்
படிப்படியாக நீக்குவதற்கு தான் தொடர்ந்தும்
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்
எனவே கடற்தொழிலாளர்கள் தங்களது எதிர்காலம்
குறித்த நம்பிக்கையுடன் இருக்கலாம் என்றும்
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்
நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக
நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான
விஷேட செயலணியின் தலைவருமான டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (3) பாஷையூர் சென். அன்ரனிஸ்
றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி மண்டபத்தில்
நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில்
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட
அமைப்பாளர் சில்வேஸ்த்ரி எலன்ரின்
யூட் உதயன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற
இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்கள் தொடர்ந்து உரையாற்றும்போது
எமது மக்களுக்கு வழிகாட்டுவதாகக்
கூறிக் கொண்ட தலைமைத்துவங்கள் அனைத்தும்
இன்று எம்மக்களை பாரிய அழிவுக்குள்
கொண்டு வந்து விட்டிருக்கின்றன என்றும்
இந்த அழிவிலிருந்து நாம் உடனடியாக மீள
வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருப்பதால்
இணக்க அரசியலில் ஈடுபட்டு எமக்கான
மீட்சியை முதலில் நாம் உறுதி செய்து
கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்
சமூகம் தோற்றுப் போன சமூகமென ஒருசாரார்
கூற முனைகின்றனர் என்பதை சுட்டிக்
காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்கள், தமிழ் சமூகம் தோற்றுப் போன
சமூகம் அல்ல என்றும் தமக்குள் பலவந்தமாக
குடியிருந்த பயங்கரவாதத்தைத் தோற்கடித்த
நிலையில் தமிழ் சமூகம் தனது எதிர்கால
சுபீட்சத்திற்காக இன்று எழுந்து
நிற்கும் ஒரு சமூகமாகும் என்பதையும்
உணர்த்தினார். தான் அரசியலில் இருக்கும்
வரையில் தமிழ் சமூகம் ஒருபோதும் தோற்க
மாட்டாது என்பதை வலியுறுத்தியுள்ள அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா அவர்கள், எதிர்வரும்
யாழ் மாநகர சபையின் வெற்றியுடன் எமது
மக்களுக்கான சுபீட்சமான எதிர்காலம் படிப்படியாகக்
கட்டி எழுப்பப்படும் என்றும் நம்பிக்கைத்
தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



 |