<%@ Language=JavaScript %> Welcome./\. Welcome. !
 

எங்கள் தேசம் இணையம்

 

www.engaltheaasam.com Welcome To Visit   

 
 

 

 

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.04 ஜுலை, 2009

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

எங்கள் தேசத்தின் இன்றைய முக்கிய செய்திகள்!!.04.07.2009

கிழக்கில் புலிகளின் ஆயுதங்கள் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் கண்டுபிடித்து வருகின்றனர்.

கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டு இரு வருடங்களாகி விட்டன. எனினும் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைப் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் கண்டுபிடித்து வருகின்றனர்.

குறிப்பாக இவ்வாரத்திலும் 5இற்கும் மேற்பட்ட இடங்களில் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் பாதுகாப்பு தரப்பினரால் மீட்கப்பட்டுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டம் மகிழங்கேணியில் ஆர்.பி.ஜி. மோட்டார் குண்டுகள்-05,60 எம்.எம். மோட்டார் குண்டுகள் - 05 ,ரி 81 ரக துப்பாக்கி - 01 உட்பட சில ஆயுதங்களும்,

பெண்டுகள்சேனையில் ரி-56 ரக துப்பாக்கிககள்-04, எல்.எம்.ஜி ரக துப்பாக்கி-01, ஜி-3 ரக துப்பாக்கி-01 ஆகியனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலன்னறுவை மாவட்டம் சொருவில காட்டுப் பகுதியில் நேற்று ரி-56 ரக துப்பாக்கி-01 ,அதற்கான மகசீன்கள் 180,ரவைகளுடன்-06,மிதி வெடிகள்-10,வெடிக்க வைக்கும் கருவிகள்-05,ரிமோட் கொன்ட்ரோல்-01,சி 4 வெடிப் பொருள்-2 கிலோ ஆகியன மறைவிடம் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வாகரை வெருகல் தீவில் சி 4 வெடிப்பொருள்-5.5 கிலோ குஞ்சான்களத்தில் 5 கிலோ எடையுடைய கிளேமோர் குண்டு ஆகியனவும் நேற்றைய தினம் இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

......................................................................

எயார் பிரான்ஸ் விமானம் நடுவானில் வெடித்து சிதறவில்லையென அறிக்கை தெரியவந்துள்ளது.

அட்லாண்டிக் சமுத்திரத்தில் விபத்துக்குள்ளான எயார் பிரான்ஸ் விமானம் நடுவானில் வெடித்துச் சிதறவில்லையென விசாரணை அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.கடந்த ஜூன் 1 ஆம் திகதியன்று எயார் பிரான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏ 330 ரக எயார் பஸ் விமானம் 216 பயணிகள் மற்றும் 12 விமான சிப்பந்திகளுடன் ரியோ டே ஜானிரோவிலிருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

இந்நிலையில், அந்த விமானம் அட்லாண்டிக் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அதில் பயணம் செய்த 228 பேருமே உயிரிழந்த நிலையில் சடங்களைத் தேடும் பணியை முடித்துக் கொள்வதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்புக் குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விமான விபத்துக் குறித்து விசாரணை நடத்திய பிரான்ஸ் விசாரணைக் குழு, விபத்துக்குள்ளான விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது நொறுங்கி விழவில்லை என்றும்,விபத்துக்கு வேறு ஏதோ காரணம் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளது.

......................................................................

இலங்கையின் கடன் விண்ணப்பம் சர்வதேச நாணய நிதிய நிறைவேற்று சபையின் அனுமதிக்காக காத்திருப்பு.

இலங்கையின் கடன் விண்ணப்பம் தொடர்பாக நிறைவேற்று சபையின் அங்கீகாரத்திற்காகக் காத்திருப்பதாக சர்வதேச நாணய நிதிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கடன் வழங்குவது தொடர்பாக பரிசீலனை மேற்கொள்ள நிறைவேற்று சபை திகதியொன்றைத் தீர்மானிக்கவுள்ளது.

ஆனால், கலந்துரையாடல்கள் தொடர்கின்றன.ஆயினும் இந்நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான இறுதி முடிவு எடுத்தல் நிறைவேற்று சபையிலேயே தங்கியுள்ளது என்று சர்வதேச நாணய நிதியப் பேச்சாளர் கரோலின் அட்கின்சன் வாஷிங்டனில் நிருபர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

"இலங்கை தொடர்பாக தற்போதைய தருணத்தில் நிறைவேற்று சபைக் கூட்டம் தொடர்பான திகதியைத் தீர்மானிக்கவில்லை' என்றும் பேச்சாளர் கூறியுள்ளார்.

......................................................................

முன்னாள் சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வை உறுதிப்படுத்துமாறு பான் கீ மூன் வலியுறுத்தல்.

ஆயுதக்குழுக்களிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பராமரிப்பு பாதுகாப்பு மற்றும் அவர்களை சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் செயல்திட்டங்களை உறுதிப்படுத்துமாறு இலங்கையிடம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.இலங்கையின் ஆயுத மோதலும் சிறுவர்களும் என்பது பற்றிய அறிக்கையொன்றை பாதுகாப்பு சபைக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் 18 வயதுக்கு குறைந்த முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு பொருத்தமான உதவிகள் வழங்கப்பட வேண்டுமென கொழும்பை அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. மற்றும் ஏனைய தரப்பினரின் ஆதரவுடன் இலங்கை முன்னேற்றத்தை வென்றெடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக நியூயோர்க்கில் வியாழக் கிழமையன்று பான் கீ மூனின் பேச் சாளர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

......................................................................

"கப்டன் அலி' நிவாரணப்பொருட்களுடன் மற்றொரு கப்பல் சென்னையிலிருந்து திங்கள் கொழும்பு வரும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் வன்னித் தமிழ் மக்களுக்காக அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய வணங்காமண் கப்பலிலிருந்து இறக்கப்பட்ட பொருட்கள் நாளை மறுதினம் 6 ஆம் திகதி இலங்கைக்கு இன்னொரு கப்பலில் கொண்டு செல்லப்படவுள்ளது.ஐரோப்பிய வாழ் தமிழர்கள் சேர்ந்து வன்னியில் பரிதவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக உணவு, மருந்து, உடை உள்ளிட்டவற்றை சேகரித்து கப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலை அமர்த்தி அதற்கு வணங்காமண் என்று பெயரிட்டு வன்னிக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தக் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டது.இதையடுத்து சென்னைக்கு விரைந்த இக்கப்பல் சென்னை அருகே நிறுத்தப்பட்டது.

......................................................................

சொந்த நாட்டு மக்களையே முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ள அரசு வவுனியாவில் தமிழ் கூட்டமைப்பு எம்.பி.

ஜனநாயக ரீதியில் வன்முறையற்ற விதத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் குரல் கொடுக்கும். தமிழ் மக்களுக்கு உரிமை வழங்கப்படாதவரை இந்த நாட்டில் ஆட்சிபீடமேறியவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்ற செய்தியை கொழும்பு அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் நடைபெறப்போகும் குட்டித் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டப்போகின்றது.

இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பண்டாரிக்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது கூறினார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.எம்.ரதன், றோகன் மதிகரன் ஆகியோரை ஆதரித்து பண்டாரிக்குளத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர், உள்ளூராட்சிமன்ற தேர்தலின் பின்னர் பல அரசியல் மாற்றங்கள் நடைபெறுவதற்குரிய சாத்தியங்கள் உள்ள இத் தருணத்தில், நாம் பலத்துடன் இருக்கவேண்டும். யுத்த பிரதேசத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிக்கு வாருங்கள்,சகல வசதிகளும் செய்து கொடுப்போம் என கூறிய அரசு, சொந்த நாட்டு குடிமக்களையே முட்கம்பி போட்டு அடைத்து வைத்துள்ளது.உலகில் எங்கும் இல்லாத நிகழ்வு நடைபெற்றுள்ளது.

......................................................................

நீதிமன்ற அறிவுறுத்தலை அமுல்படுத்தாவிடின் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை நீதிமன்றத் தீர்ப்பை இந்த மாத இறுதிக்குள் அமுல்படுத்தாவிடின் பஸ் கட்டணங்களை தன்னிச்சையாக அதிகரிக்கப் போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.இது தொடர்பாக அச்சங்கம் நாரஹேன்பிட்டியிலுள்ள தலைமையகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் சங்கத் தலைவர் கெமுனு விஜயரட்ண கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

மாகாண போக்குவரத்து ஆணைக்குழுவின் நிர்வாகத்தையும் தலைமைத்துவத்தையும் சீரமைக்குமாறும் இலங்கை போக்குவரத்து சேவை பஸ் மற்றும் தனியார் பஸ்களை ஒன்றிணைத்த நேர அட்டவணையை அமுல்படுத்தும் படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பல மாதங்கள் கடந்தும் அந்தப் பணிப்புரைகள் அமுல்படுத்தப்படவில்லை.

இதனால், ஊழல் மோசடிகளும் ஒழுங்கற்ற இரவு நேர பஸ் சேவைகளும் காரணமாக இதனால், பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனரென பல பிரச்சினைகள். இந்நிலையில் நாம் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துமாறு கோருகின்றோம்.இதனை இம்மாதம் இறுதிக்கு முன் அமுல்படுத்துமாறு கோருகின்றோம். இல்லாவிட்டால் எதிர்வரும் முதலாம் திகதி தன்னிச்சையாக பஸ்கட்டணங்களை அதிகரிப்போம். இதனால், மக்களே சிரமப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

......................................................................

கிழக்கு பாடசாலை வெற்றிடங்களை நிரப்ப 332 விஞ்ஞான பட்டதாரிகளுக்கு நியமனம்.

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக 332 விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.கிழக்கு மாகாணத்திலுள்ள பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் மூலம் சிறந்த கல்வியினை மாணவர்களுக்கு வழங்க முடியும் என கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் உபுல் வீரவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி நியமனம் செய்யப்படவுள்ள 332 விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்களுள் 131 பேர் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்களமொழிப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

இவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் நியமனம் பெறும் பாடசாலையில் மூன்று வருடங்களும் மாகாணத்தில் 5 வருடங்களும் கடமையாற்றுவதுடன்,எதிர்காலத்தில் மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றம் இடம்பெறும்போது தாம் விரும்பிய மாகாணப் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லலாம் என செயலாளர் உபுல் வீரவர்தன மேலும் தெரிவித்தார்.

......................................................................

அகதி முகாம் மக்கள் வீடு திரும்பாத வரை தேசிய நல்லிணக்கம் ஏற்படமாட்டாது மனோ கணேசன் எம்.பி.கூறுகிறார்.

இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்கப்படாதவரைக்கும் அனாதரவான குழந்தைகளும் பெண்களும் வயோதிபர்களும் உள்ளடங்கலாக இலட்சக்கணக்கான மக்கள் அவர்களது சொந்த வீடுகளில் வாழும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாதவரைக்கும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நல்லிணக்கத்திற்கும் அபிவிருத்திக்குமான சர்வகட்சிக் கூட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது;

இந்தக் கூட்டத்தில் எமது கட்சிப் பிரதிநிதிகள் எமது பொதுச் செயலாளர் தலைமையில் கலந்து கொண்டனர். எமது கருத்துகள் அங்கே தெரிவிக்கப்பட்டன. எதிர்க்கட்சியினர் உட்பட அனைத்து கட்சியினரையும் அழைத்து நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடி இருப்பதை நாம் பாராட்டுகின்றோம். ஆனால் அரசாங்கத்தின் கருத்து நிலைப்பாடுகள் தொடர்பிலே எமக்கு தெளிவின்மை இருக்கின்றது.

......................................................................

குடும்பஸ்தர் சடலம் அடையாளம் காணப்பட்டது சந்தேகத்தின் பேரில் மூவர் கைதாகினர்.

அட்டன் வட்டவளை டெம்பஸ்டோன் தோட்டத்தில் கடந்த வியாழக்கிழமை மீட்கப்பட்ட சடலத்துக்குரியவர் இனங்காணப்பட்டுள்ளார்.கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் இந்தச் சடலம் பற்றி பிரதேச மக்கள் அட்டன் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். வட்டவளை டெம்பஸ்டோன்விக்டன் தோட்டப் பாதையின் கால்வாய் ஒன்றுக்கு அருகில் காணப்பட்ட இந்தச் சடலம் முகம் மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அட்டன் பொலிஸார் சடலத்தினை மீட்டு விசாரணை நடத்திய போது டெம்பஸ்டோன் தோட்டத்தில் சாரதியாகத் தொழில் புரிந்த கணேஷன் ஜெயசீலன் (வயது 30) என்பவரது சடலமே இதுவென குடும்பத்தவர்கள் இனங்கண்டுள்ளனர். தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 15 வருடகாலமாக டெம்பஸ்டோன் தோட்டத்தில் வாழ்ந்து வந்தார்.மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

கடந்த 29 ஆம் திகதி முதல் காணாமல் போன இவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்தக் கொலைச் சம்பவத்தோடு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அதே தோட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் மூவரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

......................................................................

மஹவெலகந்த கிராமத்தில் தொடர்ந்து குடிநீர்ப் பிரச்சினை மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பல்லேப்பொல மஹவெலகந்த கிராம மக்கள் குடிநீர்ப் பிரச்சினைக்குள்ளாகியுள்ளனர்.75 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்திலுள்ளவர்கள் குடிநீர் பெறுவதற்காக தினமும் இரண்டரை கிலோ மீற்றர் தூரத்திற்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும், 1977 ஆம் ஆண்டில் இக் கிராமத்தில் குடியேற்றப்பட்ட தமக்கு இதுவரை குடிநீர் வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குடி நீருக்காகப் பல வருட காலமாக பல்வேறு சிரமங்களை அனுபவித்து வரும் மஹவெலகந்த கிராம மக்களின் குடிநீர்ப் பிரச்சினை குறித்து பல்லேப்பொல பிரதேச சபைத் தலைவர் ஜகத் திஸாநாயக்க தெரிவிக்கையில்;

பிரஜா நீர் வளங்கள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இம்மக்களுக்கு குடிநீர் வசதிகள் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

......................................................................

முகத்துவாரம் பகுதியில் நேற்று அதிகாலை இளைஞர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

முகத்துவாரம் பகுதியில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.கொலைக் குற்றச்சாட்டுகள்,போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றுடன் தொடர்புடைய இளைஞரே இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இரு பாதாள உலகக் கோஷ்டியினருக்கிடையேயான மோதல் காரணமாகவே குறிப்பிட்ட இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

......................................................................

யாழ்.குடாநாட்டுக்கான சொகுசு பஸ்சேவை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் நடவடிக்கை.

சொகுசு பஸ் சேவையை நடத்துவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.ஏ9,பாதையூடாக இச்சொகுசு பஸ் சேவையை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக சொகுசு பஸ் ஒன்றினைக் கொள்வனவு செய்வதற்கு 50,இலட்சம் ரூபா தேவைப்படுவதாகவும் தனியார் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளது.

இவ்விடயம் குறித்து யாழ்.மாவட்ட தனியார் போக்குவரத்துச் சேவை தலைவர் கங்காதரன் தெரிவிக்கையில்;

யாழ்.மாவட்டத்தில் தற்பொழுது 450 பஸ்கள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுள்ளன.

எதிர்காலத்தில் வடபகுதி மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் அதேவேளை,ஏ9 வீதியினூடாக போக்குவரத்தினை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

......................................................................

ஆனையிறவு ரயில் நிலையத்தை புனரமைக்க மாணவர்,ஆசிரியரிடம் நிதி சேகரிக்க முடிவு கல்வி அமைச்சின் செயலர் தெரிவிப்பு.

வடக்கின் வசந்தம் யாழ்.தேவி ரயில் சேவை விஸ்தரிப்பு திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது."நேசத்தின் தரிப்பிடம்' என்ற பேரில் கல்வியமைச்சு இதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் பிரகாரம் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் ஆனையிறவு ரயில் நிலையத்தைப் புனரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

வட மாகாணம் தவிர்ந்த நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவிகளைப் பெற கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்பிரகாரம் இம்மாதம் 7 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரையான இருவார காலத்துள் பாடசாலைகளிலிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளது.

மாணவர் ஒருவரிடமிருந்து குறைந்த பட்சம் 2 ரூபாவும், ஆசிரியர் ஒருவரிடமிருந்து குறைந்த பட்சம் 10,ரூபாவும் அன்பளிப்பாக பெற எதிர்பார்க்கப்பட்டுள்ளது.இதன் மூலம் புனரமைக்கப்படவுள்ள ஆனையிறவு ரயில் நிலையத்திற்கு நேசத்தின் தரிப்பிடம் என பெயர் சூட்டப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

......................................................................

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்ட சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டுள்ளார்.நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர்களுடனான விசேட சந்திப்பின் போதே அமைச்சர் டக்ளஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட கால கட்டத்தில் தமிழ் தலைமைத்துவங்கள் இதற்கு பாரிய எதிர்ப்புகளைத் தெரிவித்ததாகவும் அதற்கு பிந்திய காலங்களில் யாழ்.பல்கலைக்கழகம் நல்லதொரு திசையை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இடையில் அது குறுகிய சுயலாபங்களைக் கருதி தவறான வழியில் இட்டுச் செல்லப்பட்டது.

இன்றைய நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தை சரியான திசையை நோக்கி முன்னகர்த்துவதே எனது முக்கிய நோக்கம்.இப்பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பில் உயர்கல்வி அமைச்சருடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதுடன் வெகுவிரைவில் உயர்கல்வி அமைச்சரை இங்கு அழைத்து வந்து குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து கலந்துரையாடி தீர்வுகளை எட்டக் கூடிய வாய்ப்பினை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

......................................................................

களுகங்கையின் ஒரு பகுதியை ஏலம் விடுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

களுகங்கையின் ஒரு பகுதியை மாணிக்கக் கற்கள் அகழ்வதற்காக ஏல விற்பனை மூலம் வழங்க இரத்தினபுரி மாணிக்கக்கற்கள் மற்றும் ஆபரணங்களின் அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.இதற்கு ஆட்சேபனை தெரிவித்து இரத்தினபுரி மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்னால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

இதில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளையும் சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்ததுடன், கங்கையை யாருக்கும் ஏலம் விட முடியாது என்றும் சில கோடீஸ்வரர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த கங்கையின் சுமார் 1கி.மீ.தூரம் வரையிலான பகுதி மாணிக்கக்கற்கள் அகழ்விற்காக ஏலம் விட அதிகார சபை முயற்சி செய்து வருகின்றது.

இது கண்டிக்கத்தக்கதுடன் பாரிய சூழல் மாசடைவையும் ஏற்படுத்துமெனத் தெரிவித்தனர்.

எனினும், சுற்றாடல் துறை அமைச்சின் அனுமதியுடனேயே இந்தக் கங்கை ஏலம் விடப்படுவதாக தெரிவித்த மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் தலைவர் அசிந்த திலகரட்ண தெரிவிக்கின்றார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டு பின்னர் கலைந்து சென்றனர்.

......................................................................

காட்டு மிருகங்களினால் கடித்துக் குதறப்பட்ட ஆணொருவரின் சடலம் மீட்பு.

காட்டு மிருகங்களினால் கடித்துக் குதறப்பட்ட ஆணொருவரின் சடலமொன்றினை எல்ல பொலிஸார் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மீட்டுள்ளனர்.இச்சடலம் 35 வயது மதிக்கத்தக்க ஒருவருடையதென்றும் பிறிதொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு இராவனா எல்ல காட்டுப் பகுதியில் சடலம் போடப்பட்டிருக்கலாமென்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இராவனா எல்ல காட்டுப் பகுதியிலிருந்தே, இச் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது.இது தொடர்பாக எல்ல பொலிஸ் நிலைப் பொறுப்பதிகாரி டி.எம்.பி.பண்டார தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இச்சடலத்தை இனம்காணும் வகையில், பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளார்.

......................................................................

இரத்தினபுரி பகுதிகளில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி பகுதிகளில் வெள்ளம் வடிந்து வருகின்ற போதிலும் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இங்குள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயமிருந்த போதிலும் தற்போது வெள்ளம் வடிந்து வருகின்றது. அயகம பிரதேச செயலகப் பிரிவின் சில பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளதுடன் போக்குவரத்துத் தடைகளும் நீங்கியுள்ளன.

எனினும் இப்பகுதியில் மண்சரிவு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே கிராம சேவகர் பிரிவு ரீதியாகத் தேசிய கட்டிடவியல் ஆராய்ச்சி நிறுவனம், புவிச் சரிதவியல் திணைக்களம் ஆகியன நடத்திய ஆய்வுகளின் பிரகாரம் மண்சரிவு ஏற்படலாமென அடையாளப்படுத்தப்படுத்தியுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதால் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

......................................................................

சித்த மருத்துவ போதனா வைத்தியசாலை திருகோணமலையில் திங்கள் திறப்பு விழா.

திருகோணமலை, கோணேசபுரியில் சித்த வைத்திய போதனா வைத்தியசாலை திறப்பு விழா நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.இந்நிகழ்வில், சுதேச மருத்துவ அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பிரதம விருந்தினராகவும் தேசிய கட்டிட மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே கௌரவ அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

விசேட அதிதிகளாக திருகோணமலை மாவட்ட அரசாங்க பிரதிநிதி மேஜர் ஜெனரல் ரி.ரி.ரஞ்சித் டி சில்வா, கிழக்குப் பல்கலைக்கழக துணை வேந்தர் கலாநிதி என்.பத்மநாதன், திருகோணமலை பல்கலைக்கழக பீடாதிபதி என்.நாகேந்திரக்குமார்,சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் அசோகா பீரிஸ் மற்றும் ஆயுள்வேத ஆணையாளர் ரமணி குணவர்தன ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த சித்த போதனா வைத்தியசாலை மக்களினதும் சித்த மருத்துவ மாணவர்களினதும் நன்மை கருதி திறக்கப்படவுள்ளதாக திருகோணமலை வளாக சித்த மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் என்.வர்ணகுலேந்திரன் தெரிவித்துள்ளார்.

......................................................................

சம்பள மீளாய்வு தொடர்பான விபரங்களை பேச்சுகளில் ஈடுபடுவோர் வெளியிட வேண்டும் ம.ம.மு. செயலாளர் வேண்டுகோள்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தரப்புகள் வெளியிட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் விஜயகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனங்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் குறித்து முறையாக அறிவிக்கவில்லை.

இது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களுக்கிடையில் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, ஊவா மாகாணசபைத் தேர்தலைக் காரணம் காட்டி சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் காலதாமதமாக்கப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.

இவ்வாறானதொரு நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர் சார்பாக செயற்படுவதற்கு ஐ.தே.க.நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

<<முன்னைய பதிவுகள்>>

 

Last update: 20-06-2008. Desigin and Copyright Welcome. to Visit.Engaltheaasam.com ..!