|
"கப்டன் அலி'கப்பலில் வந்த
பொருட்கள் இடம்பெயர்ந்த
மக்களுக்கு வழங்க ஏற்பாடு. |
கப்படன் அலி கப்பலில் வந்த பொருட்களை
வவுனியா முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த
மக்களுக்கு வழங்குவதற்காக இலங்கைச்
செஞ்சிலுவைச் சங்கம்
பொறுப்பேற்கவுள்ளது.புலம்பெயர்
தமிழர்களின் உதவிப் பொருட்களை ஏற்றி
வந்த"கப்டன் அலி' கப்பலில் உள்ள
பொருட்களை ஏற்க இலங்கை செஞ்சிலுவைச்
சங்கம் உடன்பட்டதை அடுத்து,அதனைப்
பெற்று இலங்கைக்கு அனுப்பும் பணிகளில்
இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம்
ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
இந்திய வெளியுறவு அமைச்சு
கேட்டதற்கிணங்க இது தொடர்பாக தாம்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தை தொடர்பு
கொண்டதாகவும், அந்த பொருட்களை ஏற்க
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்
ஒப்புக்கொண்டதை அடுத்து அந்தப்
பொருட்களை தாம் பெற்று இலங்கைக்கு வேறு
கப்பலில் அனுப்ப நடவடிக்கைகளை எடுத்து
வருவதாகவும் இந்திய செஞ்சிலுவைச் சங்க
அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கான நடவடிக்கைகளை சென்னையில் உள்ள
தமது அலுவலகம் மேற்கொண்டுள்ளதாகவும்
அவர் தெரிவித்தார்.
......................................................................
|
கொழும்பில் மீண்டும் அகாசி
குனியோ தகாசி உட்பட
தூதுக்குழுவொன்று அகாசியை
வரவேற்றுள்ளது. |
ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி
மீண்டும் நேற்று திங்கட்கிழமை
இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
ஜப்பானியத் தூதுவர் குனியோ தகாசி
உட்பட தூதுக்குழுவொன்று அகாசியை
வரவேற்றுள்ளது.
இன்று கொழும்பில் சினமன்கிரான்ட்
ஹோட்டலில் ஆரம்பமாகும் இலங்கை
பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளவே
அகாசி வருகை தந்திருப்பதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
இந்த பொருளாதார மாநாட்டை இலங்கை
வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாநாடு ஜூலை 2 ஆம் திகதிவரை
இடம்பெறும்."புதிய சகாப்தத்தின் உதயம்...
வாய்ப்புகளும் சவால்களும்' என்ற
கருப்பொருளிலேயே இம்மாநாடு
இடம்பெறுகிறது.அகாசி மாநாட்டில்
முக்கிய உரையை நிகழ்த்தவுள்ளார்.
......................................................................
|
சிறுமி உட்பட 3 பெண்களின்
சடலங்கள் நுவரெலியா பகுதி
வீடொன்றிலிருந்து மீட்பு 3
வயதுச் சிறுவனைக் காணவில்லை. |
நுவரெலியா, அம்பேவல பட்டிப்பொல
பகுதியில் வீடொன்றிலிருந்து படுகொலை
செய்யப்பட்ட நிலையில் மூவரது சடலங்கள்
நேற்று திங்கட்கிழமை காலை
மீட்கப்பட்டுள்ளது.சிறுமி ஒருவர்
உட்பட 3 பெண்களது சடலங்களே
மீட்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார்
தெரிவித்தனர்.
பட்டிப்பொல ஜனப்பதிய என்ற கிராமத்தில்
இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும்
தெரிய வருவதாவது;
சந்திரதிலக என்பவர் மகியங்கனை
தெகியத்தகண்டியில் விவசாயம் செய்து
வருகிறார். இவரது மனைவி, பிள்ளைகள்
ஜனப்பதிய கிராமத்தில் வசித்து வந்தனர்.
சந்திரதிலக ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு
வந்துள்ளார்.எனினும் வீடு
பூட்டியிருக்கவே அந்தக் கிராமத்தில்
உள்ள மைத்துனரின் வீட்டிற்குச் சென்று
தங்கிவிட்டு நேற்றுக் காலை அங்கு
வந்தபோதும் வீட்டுக் கதவுகள்
மூடப்பட்டிருந்தன.
இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டுக்கதவை
உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது,
மனைவியும் அவரது தாயும் மகளும்
இறந்துகிடந்தனர். இது குறித்து அவர்
உடனடியாகப் பொலிஸாருக்கு தெரிவிக்கவே
பொலிஸார் அங்கு வந்து சேர்ந்தனர்.
......................................................................
|
40 அடி பள்ளத்தில் தண்டவாளம்
மீது வீழ்ந்த வானை ரயிலும்
மோதித் தள்ளியது. |
நாற்பதடி பள்ளத்திலுள்ள ரயில்
தண்டவாளத்தில் வீழ்ந்த வான் ஒன்றை
ரயிலும் மோதித் தள்ளிய சம்பவமொன்று
நேற்று திங்கட்கிழமை நண்பகல்
அப்புத்தளையில் நடைபெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி மேலும்
தெரியவருவதாவது;
அப்புத்தளை, பன்சலை வீதியில் நேற்று
நண்பகல் 12.30 மணியளவில் வேகமாக வந்த
"டெலிக்கா' ரக வானொன்று வீதியை விட்டு
விலகி சுமார் 40,அடி பள்ளத்திலுள்ள
புகையிரதத் தண்டவாளத்தில்
வீழ்ந்துள்ளது.
இதையடுத்து அந்த வான் தீப்பற்றிய
அதேநேரம், நானுஓயாவிலிருந்து வந்த
சரக்கு ரயிலும் அந்த வானை மோதித்
தள்ளிச் சென்று தண்டவாளத்தை விட்டுத்
தூக்கி வீசியுள்ளது.
பள்ளத்தில் வீழ்ந்ததால் வான் சாரதி
காய மடைந்த நிலையில், வானை ரயில்
மோதியதால் வான் மேலும்
சேதமடைந்ததுடன்,வான் சாரதியும்
படுகாயமடைந்து பலத்த
எரிகாயங்களுக்குமுள்ளானார்.
இதையடுத்து அங்கு வந்தவர்கள் வான்
சாரதியை ஒருவாறு மீட்டு அப்புத்தளை
ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை
அப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
......................................................................
|
ஊடகங்களில் எந்தவொரு
வேட்பாளரும பிரசாரத்தில்
இராணுவ வெற்றியை
பயன்படுத்துவதற்கு தடை. |
தேர்தல் பிரசாரத்தில் இராணுவ
வெற்றிகளைப் பயன்படுத்துவதை அரசாங்கம்
தடைசெய்துள்ளது.
இது தொடர்பாக விசேட அறிவித்தலை தேசிய
பாதுகாப்புக்கான ஊடக நிலையப்
பணிப்பாளர் விடுத்திருக்கிறார்.
ஏற்கனவே, இது தொடர்பாக சுற்று
நிருபத்தை வெளியிட்டிருப்பதாகவும்
உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சுவரொட்டிகளில்,பதாகைகளில் அல்லது
இலத்திரனியல் ஊடகங்களில் எந்தவொரு
வேட்பாளரும் படையினரின் பிரதிமைகளை
பயன்படுத்துவது
சட்டவிரோதமானதாகும்.தேர்தல்
பிரசாரத்தில் அத்தகைய படங்களை
பயன்படுத்த விரும்பும் முன்னாள் படை
அதிகாரிகள் அதாவது தேர்தல்களில்
போட்டியிடும் முன்னாள் படை அதிகாரிகள்
எழுத்து மூலமான அனுமதியைப்
பெற்றிருக்க வேண்டுமென்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
......................................................................
|
வீட்டுக்கூரையில் கழுத்தில்
சுருக்கிட்ட தூக்கில் தொங்கிய
நிலையில் இளைஞனின் சடலம்
மீட்பு. |
வீட்டுக்கூரையில் கழுத்தில்
சுருக்கிட்ட நிலையில் தொங்கிய ஆணின்
சடலம் கலேவெல பொலிஸாரால் மீட்கப்பட்டது.
கலேவெலதமுனுமுள்ள பகுதியில்
வீட்டுத்தோட்டத்திற்கு பூக்கள்
பறிக்கச் சென்ற பெண்ணொருவர், அங்கு
துர்நாற்றம் வீசவே வீட்டினுள் ஜன்னல்
வழியாகப் பார்த்துள்ளார். அங்கிருந்த
சடலத்தைக் கண்ட அவர் பொலிஸாருக்குக்
கொடுத்த தகவலையடுத்து சடலம்
மீட்கப்பட்டு மாத்தளை வைத்தியசாலைக்கு
அனுப்பப்பட்டது.
இறந்த டபிள்யூ. விக்கிரமசிங்க (வயது
26) என்பவர் உறவினர்களைப் பிரிந்து
தனிமையில் வாழ்ந்ததாகவும் வானொலி
திருத்துவதைத் தொழிலாகக் கொண்டிருந்த
இவர் சமீபகாலமாக மனவிரக்தியுற்ற
நிலையில் இருந்ததாகவும் சாட்சியங்கள்
தெரிவித்தன.
இதனையடுத்து,இவரது மரணம் தற்கொலையெனத்
தீர்ப்பளிக்கப்பட்டது. கலேவெல பொலிஸ்
கான்ஸ்டபிள் ரணசிங்க சாட்சியங்களை
நெறிப்படுத்தினார்.
......................................................................
|
10 துறைமுக,விமான சேவை
ஊழியருக்கு சீன அரசாங்கம்
புலமைப்பரிசில் வழங்க
தீர்மானித்துள்ளது.
|
துறைமுக சேவை மற்றும் விமான சேவைகளில்
ஈடுபடும் ஊழியர்களுக்கு அது தொடர்பான
மேலதிகப் பயிற்சிகளை வழங்குவதற்கான
புலமைப்பரிசில்களை வழங்க சீன அரசாங்கம்
தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், துறைமுக மற்றும்
விமான சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள்
10 பேருக்கு சீனா செல்லவும் அவர்கள்
பணியாற்றும் துறையில் மேலதிக கல்வியை
பெறுவதற்குமான சந்தர்ப்பம்
வழங்கப்படவுள்ளது. துறைமுக சேவை
ஊழியர்கள் 7 பேருக்கும் விமானசேவை
ஊழியர்கள் 3 பேருக்கும் இந்தப்
புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
துறைமுகம், விமான சேவைகள் அமைச்சில்
அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும்
சீனாவின் பிரதி போக்குவரத்து அமைச்சர்
கயோ கொங்வெங்கிற்கும் இடையில்
அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே
இவ்விடயம் குறித்து
கலந்துரையாடப்பட்டது.
மேலும், அம்பாந்தோட்டை துறைமுக
நிர்மாணப் பணிகளின் இரண்டாம் கட்ட
நடவடிக்கை தொடர்பிலும் இச்சந்திப்பின்
போது கலந்துரையாடப்பட்டது.
இத்துறைமுகப் பணிகளுக்காக உதவியாளர்களை
வழங்க சீன அரசாங்கம் தயாராகவுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
......................................................................
|
இரத்தினபுரியில் மண்சரிவில்
சிக்குண்ட வீட்டினுள்ளிருந்து
இருவர் மீட்கப்பட்டனர். |
இரத்தினபுரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை
முதல் தொடர்ந்தும் காற்றுடன் கூடிய
கடும் மழை பெய்து வருவதனால் மின்சாரம்
துண்டிக்கப்பட்டுள்ளதுடன்
குடியிருப்புகளுக்கும் சேதங்கள்
ஏற்பட்டுள்ளது.மண்சரிவுகள்
ஏற்பட்டுவருவதால் மக்கள் பெரும் ஆபத்தை
சந்தித்து வருகின்றனர்.
இறக்குவானை நகர் உட்பட அதனை அண்மித்த
பிரதேசங்களில் நேற்று முன்தினம்
நண்பகலுடன் மின்சாரம்
துண்டிக்கப்பட்டதனால் மக்கள் பல்வேறு
அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் காவத்தை கெட்டேதென்ன
பகுதியில் வீடொன்று இடிந்து
விழுந்ததில் இருவர் மண்ணில்
புதையுண்டனர். பின்னர் அயலவர்களின்
உதவியுடன் மீட்கப்பட்ட இவர்கள்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் தொடர்ந்தும் மழை
பெய்து வருவதனால் மண்சரிவு
ஏற்படலாமெனவும், மக்களை அவதானமாக
இருக்குமாறும் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
......................................................................
|
மருந்துவில்லை தொண்டையில்
சிக்கியதால் 2 வயதுக் குழந்தை
பரிதாப மரணம். |
மருந்துவில்லை தொண்டையில் சிக்கியதால்
2 வயதுக் குழந்தையொன்று மூச்சுத் திணறி
உயிரிழந்த சம்பவம் நாவுல பகுதியில்
இடம்பெற்றுள்ளது.நாவுலதலாகொட
கிராமத்தைச் சேர்ந்த கிஹான் விதுஸங்க
பண்டார எனும் 2 வயதுக் குழந்தையே
இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இக் குழந்தையின் தாயான சுளலித்த மனோகரி
விஜேதுங்க தனது குழந்தையின் மரணம்
குறித்துத் தெரிவிக்கையில்;
குழந்தை தலைவலியால் தவித்தமையினால்
உடனடியாக தலைவலி மாத்திரையொன்றை
எடுத்து அதன் நான்கில் ஒரு பங்கை
உடைத்துக் குழந்தையின் நாவில் வைத்துத்
தண்ணீர் பருக்கினேன். இதனையடுத்து
குழந்தை பேச்சு மூச்சற்று தலையைத்
தொங்கப்போட்டது.குழந்தையின் தொண்டையில்
மாத்திரைத் துண்டு சிக்கியிருக்கலாம்
எனக் கருதி அதனை வெளியெடுக்க முதுகில்
மெதுவாகத் தட்டியும் பலனற்றுப் போகவே
கோன்கஹவெல அரசினர் வைத்தியசாலைக்குக்
குழந்தையை எடுத்துச் சென்றோம். ஆனால்,
வைத்தியசாலையை அடையும் போது குழந்தை
இறந்துவிட்டதாக வைத்தியர்கள்
தெரிவித்தனர் என்றார்.
இக் குழந்தையின் மரண விசாரணைகள்
தம்புள்ள வைத்தியசாலையில் நடைபெற்றது.
......................................................................
|
நுரைச்சோலை அனல்மின் திட்டம்
சீனாவுடன் உடன்படிக்கை நேற்று
திங்கட்கிழமை
கைச்சாத்திடப்பட்டன.
|
நுரைச்சோலை அனல் மின் திட்டத்தின்
இரண்டாவது, மூன்றாவது கட்டப் பணிகள்
891 மில்லியன் டொலர் சீன உதவியுடன்
விரைவில் ஆரம்பமாகவுள்ளது.இது
தொடர்பான உடன்படிக்கை இலங்கை, சீன
அரசாங்கங்களுக்கு இடையில் நேற்று
திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டன.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய
திட்டங்களில் நுரைச்சோலை அனல் மின்
திட்டமும் ஒன்றாகும். இத்திட்டம் 2013
இல் பூர்த்தியடையும். இதன் மூலம்
தேசிய சக்தி கட்டமைப்புக்கு 600
மெகாவட் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளக்
கூடியதாக இருக்கும்.
இந்தத் திட்டத்தை அமுல்படுத்த குறைந்த
வட்டியில் நீண்டகாலக் கடன் உதவியை சீன
அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு
வழங்குகிறது.
நுரைச்சோலை அனல் மின் திட்டத்தின்
முதற்கட்டப்பணி 2006 இல் ஆரம்பமானது.
இது 2010 இல் பூர்த்தியடையும் என்று
சக்தி வளத்துறை அமைச்சர் ஜோன்
செனவிரத்ன கூறியுள்ளார்.
சூழல் பாதிப்பைத் தவிர்ப்பதற்காக
சர்வதேச தரத்திலேயே இந்த அனல் மின்
உற்பத்தி மேற்கொள்ளப்படும் என்றும்
அமைச்சர் கூறியுள்ளார். நிலக்கரி
மூலமான இந்த அனல் மின் உற்பத்தி மூலம்
98.2% சுற்றாடலுக்கு பாதிப்பு
ஏற்படாமல் இருக்கும் என்றும் 1.2%
மட்டுமே மாசடையும் அபாயம்
இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
......................................................................
|
உரமூட்டைகளை ஏற்றிச் சென்ற
லொறி பள்ளத்தில் வீழ்ந்ததில்
ஒருவர் பலி; ஒருவர் படுகாயம். |
உரமூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று
பாதையை விட்டு விலகி 20 அடி ஆழமான
பள்ளத்தில் விழுந்து
விபத்துக்குள்ளானதில் ஒருவர்
பலியானதுடன் இன்னொருவர்
படுகாயமடைந்துள்ளார்.பலாங்கொடைகல்தொட்ட
வீதியில் பயணித்த லொறியொன்றே
பெல்லன்கல எனுமிடத்தில் நேற்று
முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை
பள்ளத்தில் விழுந்துள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்
கல்தொட்ட வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை
பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த லொறி
கொழும்பிலிருந்து கல்தொட்டவிற்கு
உரமூட்டைகளை ஏற்றிச் செல்லும் போதே
பாதையை விட்டு விலகிப் பள்ளத்தில்
விழுந்ததாகத்
தெரிவிக்கப்படுகின்றது.இதில் பயணம்
செய்த உதவியாளரே உயிரிழந்துள்ள?ரெனவும்
தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
......................................................................
|
டெங்குக் காய்ச்சலினால்
தோட்டத் தொழிலாளி சிகிச்சை
பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.
|
டெங்குக் காய்ச்சலிற்கு வழங்கப்பட்ட
சிகிச்சை பலனளிக்காத நிலையில் தோட்டத்
தொழிலாளி ஒருவர்
உயிரிழந்துள்ளார்.எகலியகொடைப் பொலிஸ்
பிரிவைச் சேர்ந்த பட்டன்கல்ல,ரங்கேகம
எனும் தனியார் தோட்டத்தைச் சேர்ந்த
எம்.பார்வதி எனும் தொழிலாளியே
உயிரிழந்தவராவார்.
இவர் டெங்குக் காய்ச்சலினால்
பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 25,ஆம்
திகதி அவிசாவளை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார். இருப்பினும்
சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.
டெங்கு நோய் காரணமாக இப் பகுதியில்
இதுவரை 5,பேர் உயிரிழந்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
......................................................................
|
நாளை
புதன்கிழமை ஒருநாள் விஜயமாக
இலங்கை வங்கித் தலைவர்
யாழ்ப்பாணம் விஜயம். |
இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி,
காமினி விக்கிரமசிங்க நாளை புதன்கிழமை
ஒருநாள் விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு
விஜயம் செய்யவுள்ளார்.அவர்,இலங்கை
வங்கியால் யாழ். குடாநாட்டில்
அமுல்படுத்தப்படவிருக்கும் பாரிய
வங்கிக்கடன்திட்டத்தை
ஆரம்பித்துவைப்பதுடன், வங்கியின்
நடவடிக்கைகளையும் அண்மைக்கால
செயல்திட்டங்களையும் மதிப்பீடு
செய்வார்.
யாழ்ப்பாண வங்கியாளர்கள் சங்கம்
புதன்கிழமை பிற்பகல் 2,மணிக்கு நல்லூர்
எரோவிலா கருத்தரங்கு மண்டபத்தில்
ஏற்பாடு செய்துள்ள
கல்வியாளர்கள்,சமூகநோக்கர்கள்
சந்திப்பிலும் அவர் கலந்துகொள்வார்.
அவர் இரண்டாம் திகதி லண்டன்
பயணமாகவுள்ளார். அங்கு புலம்
பெயர்ந்துவாழும் தமிழர்களுடன்
சந்திப்பொன்றை
நடாத்துவதுடன்,இலங்கையில் முதலீடுகளை
மேற்கொண்டால் வங்கி நிதி ஆதாரங்கள்
வழங்குமெனவும் தெரிவிக்கவுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில்
அபிவிருத்தித்திட்டங்கள் முனைப்புடன்
நடைபெற்றுவருவதால் அவரது விஜயம்
முக்கியத்துவம் பெறுவதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
......................................................................
|
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
பாராளுமன்ற உறுப்பினர்
கனகரட்ணம் எம்.பி.க்கு
தொடர்ந்து தடுப்புக்காவல். |
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம்
கனகரட்ணத்தை தொடர்ந்து தடுத்து வைத்து
விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வு
திணைக்களத்துக்கு கொழும்பு பிரதம
நீதிவான் நிசாங்க கப்புஆராச்சி அனுமதி
வழங்கியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு
உதவிகள் கிடைக்க ஒத்துழைத்தாரெனக்
கூறப்படுவது தொடர்பாக சந்தேகத்தின்
பேரில் கைது செய்யப்பட்டுள்ள கனகரட்ணம்
எம்.பி.யைத் தடுத்து வைத்து விசாரணை
செய்வதற்கு புலனாய்வுப் பிரிவினர்
அனுமதி கோரியதையடுத்தே இந்த அனுமதி
நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு
சென்று கண்காணித்த பின்னரே கொழும்பு
பிரதம நீதிவான் இந்த அனுமதியை
வழங்கினார்.
யுத்த சூனியப் பிரதேசத்திலிருந்து
கடந்த மே மாதம் இராணுவக்
கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை
தந்தபோதே இவர் பாதுகாப்புத்
தரப்பினரால் கைது செய்யப்பட்டு குற்றப்
புலனாய்வு திணைக்களத்திடம்
ஒப்படைக்கப்பட்டார்.
......................................................................
|
பதுளை மாத்தன்னை தோட்டத்தில்
ஆசிரியரைத் தாக்கி தங்கச்
சங்கிலி அபகரிப்பு. |
பதுளை மாத்தன்னை தோட்டத்தில் ஆசிரியை
ஒருவர் தாக்கப்பட்டு அவரின் தங்கச்
சங்கிலியும் அபகரிக்கப்பட்ட
சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.நேற்று
திங்கட்கிழமை காலை பாடசாலைக்குச்
சென்று கொண்டிருந்தவேளை ந.லிங்கேஸ்வரி
என்ற ஆசிரியையே
தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
முகமூடி அணிந்தவாறு வந்து ஆசிரியையைத்
தாக்கியவர் அவரின் கழுத்திலிருந்த 2
1/2 பவுண் தங்கச் சங்கிலியையும்
அபகரித்துச் சென்றதுடன் தலை முடியையும்
வெட்டியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான ஆசிரியை
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்றுவருவதுடன் அவரின்
உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மாத்தன்னை
தோட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து
சிவகுமார் என்ற இளைஞனை பொலிஸார் கைது
செய்துள்ளதுடன் ஆசிரியையை காயப்படுத்த
பாவிக்கப்பட்ட கத்தியையும்,
முகமூடியொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
......................................................................
|
இந்து சமுத்திர பிரதேசத்தின்
பிரான்ஸ் கூட்டுப்படைகளின்
தளபதியுடன் இராணுவத் தளபதி
சந்திப்பு. |
இந்து சமுத்திர பிரதேசத்தின் பிரான்ஸ்
கூட்டுப்படைகளின் தளபதி வைஸ் அட்மிரல்
ஜெராட் லலின் இராணுவத் தளபதி ஜெனரல்
சரத் பொன்சேகாவை சந்தித்து
கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு
கொழும்பு இராணுவத் தலைமையகத்தில்
நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
இச்சந்திப்பில் பிரான்ஸ் தூதுவர்
மைக்கல் லுமாக்ஸும் கலந்துகொண்டார்.
இலங்கையின் சமகால பாதுகாப்பு
நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது
இருவரும் கருத்துகளை பறிமாறிக்கொண்ட
அதேவேளை,இராணுவத் தளபதி வன்னியில்
மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான
நடவடிக்கைகள் குறித்து விளக்கியுள்ளார்.
......................................................................
|
குடும்பத் தகராறு காரணமாக தனது
மனைவியை கொலை செய்துவிட்டு
கணவனும் தற்கொலை. |
குடும்பத் தகராறு காரணமாக தனது
மனைவியைக் கொலை செய்துவிட்டு தானும்
சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட
சம்பவமொன்று நேற்று முன்தினம்
ஞாயிற்றுக்கிழமை வெள்ளவாய மஹசூரகமவில்
இடம்பெற்றுள்ளது.5 பிள்ளைகளின்
தாயாரான சீலாவதி (வயது 49) என்பவரே
கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி
உயிரிழந்தவராவார்.
இவரது கணவன் கரோலிஸ் கழுத்தில்
சுருக்கிட்டுத் தற்கொலை செய்து
கொண்டதாகவும், இவர்களது மகளும்
வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளவாய
பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை
வெள்ளவாய பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
......................................................................
|
மகளுடன் தொடர்பு வைத்திருந்த
இளைஞனைக் கொன்ற தந்தையை
விளக்கமறியலில் வைக்குமாறு
நீதிபதி உத்தரவு. |
தனது மகளுடன் நீண்டகாலமாக தொடர்பு
வைத்திருந்த இளைஞரை கொலை செய்து
சடலத்தை ஆற்றில் வீசிய தந்தையை
எதிர்வரும் 9,ஆம் திகதிவரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்
உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம்
தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தனது மகளுடன் நீண்டகாலமாக காதல்
தொடர்பு வைத்திருந்த 24 வயது சிகை
அலங்கார தொழில் செய்யும் புத்திக
பெரேரா என்ற இளைஞனை கொலை செய்து,
சடலத்தை ஆற்றில் எறிந்த தந்தையொருவரை
மத்துகம பொலிஸார் கைது
செய்துள்ளனர்.இச்சம்பவம் கடந்த
சனிக்கிழமை குடவிகம என்ற இடத்தில்
இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாக மற்றொருவரையும் பொலிஸார்
சந்தேகத்தின் பேரில் நேற்று
திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக
மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்து ஆற்றில் வீசப்பட்ட
இளைஞனின் சடலத்தை தேடுவதில்
கடற்படையினர் ஈடுபட்ட போதிலும் இதுவரை
சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை.
சந்தேக நபரின் வீட்டில் கொலையுண்ட
இளைஞன் சலூனை நடத்தி வந்தார் என்றும்
அப்போது சந்தேகநபரின் மகளுக்கும் இந்த
இளைஞனுக்குமிடையில் காதல் தொடர்பு
ஏற்பட்டதென்றும் இதனால், இளைஞனைக்
கடத்திச் சென்று கழுத்தை நசித்துக்
கொலை செய்து களுகங்கையில் வீசினார்
என்றும் இதுவரை பொலிஸார் நடத்திய
விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
தனது சகோதரன் திடீரென காணாமல் போனதாக
கொலையுன்டவரின் சகோதரன் மத்துகம
பொலிஸில் முறையிட்டதைத் தொடர்ந்தே
பொலிஸார் தேடுதல் பணிகளில்
ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.
......................................................................
|
மடுமாதா தேவாலயத்திற்கு
திருவுருவச் சிலைகள் டாக்டர்
ஜயலத் ஜயவர்தன அன்பளிப்பு. |
மடுமாதா தேவாலயத்தின் திறந்த
வெளியரங்கிலுள்ள 14 பாத நமஸ்கார
ஸ்தானங்களிற்கு 5,அடி உயரமான 45
திருவுருவச் சிலைகளை ஸ்தாபிக்கும்
நடவடிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர்
டாக்டர் ஜயலத் ஜயவர்தன மேற்கொண்டு
வருகின்றார்.இது தொடர்பாக டாக்டர்
ஜயலத் ஜயவர்தன வெளியிட்டுள்ள
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
பாத நமஸ்கார ஸ்தானங்கள் 14,இல்
ஸ்தாபிக்கப்படவுள்ள அந்த திருவுருவச்
சிலையின் அச்சு இத்தாலியில் இருந்து
கொண்டுவரப்பட்டுள்ளது. அதை இங்கு
நிர்மாணிக்கவுள்ளவர் நிர்மாண
சிற்பியான ரணில் பெர்ணான்டோ.
இந்த பாத நமஸ்கார ஸ்தானங்கள் 14 இற்கு
45 ஆம் திருவுருவச்
சிலைகளுடன்,உயிர்த்தெழுந்த
ஜேசுபிரானின் 7 அடி உயரமுள்ள
சிலையொன்றையும்,மடு மாதா
தேவஸ்தானத்திற்கு அன்பளிப்புச் செய்ய
நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இந்த அனைத்து சிலைகளும் நீண்ட காலம்
பாவிக்கக்கூடிய விசேட கண்ணாடிகளால்
நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
......................................................................
|
வவுனியா மாவட்டத்தில் நன்னீர்
மீன் வளர்ப்புத் திட்டத்திற்கு
ஏற்பாடு நியோமல் பெரேரா
கூறினார்.
|
வவுனியா மாவட்டத்தில் நன்னீர் மீன்
வளர்ப்பு திட்டம்
முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில்,
நீரியல் வளத்துறை பிரதியமைச்சர்
நியோமல் பெரேரா தெரிவித்தார்.இதன்
முதற்கட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை
வவுனியா பாவற்குளத்தில் ஆரம்ப நிகழ்வு
இடம்பெறவுள்ளது."வடக்கின் வசந்தம்'
வேலைத்திட்டத்தின் மூலம்,
முதற்கட்டமாக மன்னார்,வவுனியா
மாவட்டங்களில் 50 ஆயிரம் மீன்
குஞ்சுகள் நீர் நிலைகளில்
விடப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர்
நியோமல் பெரேரா கூறினார்.
இதேபோன்று அநுராதபுரம், பொலன்னறுவை,
மாத்தறை மாவட்டங்களில் நன்னீர் மீன்
வளர்ப்புத் திட்டம்
நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும்
கூறினார்.
இதேவேளை, தம்புள்ள நீரியல் வளத்துறை
பண்ணைக்கு இன்று விஜயம் செய்த
பிரதியமைச்சர் தற்போதைய மீன் வளர்ப்பு
குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
பிரதி அமைச்சருடன்,நீரியல் வளத்துறை
அதிகார சபையின் தலைவர் எம்.ரணசிங்கவும்
இவ்விஜயத்தின் போது இணைந்து கொண்டார்.
......................................................................
|
தேர்தல் வேலைகளை புளொட்
ஆரம்பித்தது நகரில் நங்கூரம்
சின்னம் பொறிக்கப்பட்ட
சுவரொட்டிகள் காணப்படுகின்றன. |
வவுனியா நகரசபைத் தேர்தல் தொடர்பான
பிரசார வேலைகளை புளொட் ஆரம்பித்துள்ளது.
நகரில் நங்கூரம் சின்னம்
பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள்
காணப்படுகின்றன.தேர்தல் தொடர்பான
வேலைகளைக் கவனிப்பதற்காக
வைரவபுளியங்குளம் புகையிரத நிலைய
வீதியிலுள்ள அலுவலகம் நேற்று
ஞாயிற்றுக்கிழமை இயங்கத்
தொடங்கியுள்ளது.
இந்தக் காரியாலயத் திறப்பு விழாவில்
வேட்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ?புளொட்?
அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம்
சித்தார்த்தன் வவுனியாவில்
தங்கியிருந்து தேர்தல் தொடர்பான
பிரசார வேலைகளுக்கான ஆலோசனைகளை
வழங்கிவருகின்றார்.நகர அபிவிருத்தி
தொடர்பான வேலைத்திட்டத்தை முக்கிய
கருப்பொருளாகக் கொண்டு பிரசாரங்கள்
இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
......................................................................
|
முன்னாள் தமிழ்க் கல்வி
அமைச்சர் இணைப்பு இயக்குநராக
நியமனம் ஜனாதிபதியால்
நியமிக்கப்பட்டுள்ளார்.
|
முன்னாள் மத்திய மாகாண தமிழ்க் கல்வி
அமைச்சரும் தொழிலாளர் விடுதலை
முன்னணியின் செயலாளரும் ஆசிரியர்
விடுதலை முன்னணியின் தலைவருமான
எஸ்.அருள்சாமி ஜனாதிபதியின் இணைப்பு
இயக்குனராகக் கடந்த 23,ஆம் திகதி
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அலரிமாளிகையில் கடந்த 23 ஆம் திகதி
நடைபெற்ற வைபவத்தின் போது ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ மேற்படி நியமனக்
கடிதத்தை அருள்சாமியிடம்
கையளித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்
நுவரெலியா மாவட்ட அமைப்பாளராக
அருள்சாமியை ஏற்கனவே ஜனாதிபதி
நியமித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
|