|
மட்டக்களப்பு பொலிஸ்
பிரிவிற்குட்பட்ட ஏறாவூரில்
பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு. |
மட்டக்களப்பு
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தளவாய்ப்
பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளினால்
புதைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு
தொகுதி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள்
ஏறாவூர் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
25 கிலோகிராம் டையுடைய கண்னிவெடி –
01, ரீ 56 ரக துப்பாக்கி- 01, ரவைகள்
63 மெகசீன்-2, பௌசஸ்- 01 கைக்குண்டுகள்
-02, மிதிவெடிகள் -07என்பன இதில் அடங்கும்.
ஏறாவூர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு
கிடைத்த தகவலொன்றினையடுத்து இந்த
வெடிபொருட்கள் தோண்டியெடுக்கப்பட்டதாக
தெரிவக்கப்பட்டன.
.........................................................................
|
பருத்தித்துறையில் தனிமையில்
வாழ்ந்த இளம் யுவதி சடலமாக
மீட்க்கப்பட்டுள்ளார்.
|
பருத்தித்துறை
கந்த உடையார் வீதியில் தனிமையில்
வாழ்ந்த இளம் யுவதி மர்மமான முறையில்
இறநத நிலையில் வீட்டு படுக்கையறையில்
இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
நேற்று நண்பகல் மரணம் அடைந்தவரின்
வீட்டிற்க்கு அருகில் உள்ளவர்கள்
குறித்த யுவதியின் வீட்டுக் கதவு வழமைக்கு
மாறாக பூட்டப்பட்டு இருப்பதை அவதானித்து
வீட்டிள் சென்று பார்த்த போது யுவதி
படுக்கையில் மரணம் அடைந்த நிலையில் கிடப்பதை
கண்டு பிடித்துள்ளனர்.
பெற்றோர்களை இழந்த நிலையில் கடந்த பல
வருடங்களாக தனிமையில் இவ் யுவதி
வீட்டில் வாழந்து வந்ததாகவும் இவர் பருத்தித்துறை
இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளையின்
தொண்டராகவும் அலுவலக லிகிதராகவும் கடமையாற்றி
வருகின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
மரணம் அடைந்தவர் அதே இடத்தைச்சேர்ந்த
தெய்வேந்திரம் அபிராமி (வயது 33) என
அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்குச்
சென்ற பருத்தித் துறை நிதிமன்ற நிதிபதி
சடலத்தை பார்யிட்டு மரண விசாரணை
மேற்கொண்டதைத் தொடர்ந்து மரணம் அடைந்தவருக்கு
உறவினர்கள் யாரும் அற்ற நிலையில் சடலத்தை
இலங்கை செஞ்சிலுவைச்சஙகத்திடம் ஒப்படைக்கும்
படி உத்தரவிட்டார்.
மரணம் அடைந்தவரின் கழுத்தில் காயங்கள்
காணப்படுவதாகவும் இந்த சம்பவத்துடன்
தொடர்புடையவர் எனக் கருதக் கூடிய ஒருவர்
சந்தேகத்தின் பேரில் பருத்தித்துறைப்
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
தெரியவருகின்றது
.........................................................................
|
வன்னி பாதுகாப்பு நிலைவரம்
தொடர்பாக இராணுவத் தளபதி
ஆராய்வு மேற்கொண்டுள்ளார்.
|
வன்னியின் பாதுகாப்பு நிலைவரம்
தொடர்பாக அறியும் பொருட்டு இராணுவத்
தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா
வன்னிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது வன்னிப்
பிராந்தியத்திற்கான சிரேஷ்ட இராணுவ
அதிகாரிகளுடனான சந்திப்பொன்றையும்
இராணுவத் தளபதி மேற்கொண்டுள்ளார்.
இச்சந்திப்பின் போது வவுனியா நலன்புரி
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள
மக்களின் நலன்புரி விடயங்கள்
தொடர்பாகவும் அவர்களை
மீளக்குடியமர்த்துவது தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், வடபகுதியில் இடம்பெறும்
அபிவிருத்தி நடவடிக்கைகளில்
இராணுவத்தினரின் பங்கு தொடர்பாகவும்
இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
வன்னியின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக
பூரண விபரங்கள் இராணுவத் தளபதிக்கு
வன்னிப் பிராந்திய உயரதிகாரிகளால்
எடுத்துரைக்கப்பட்டது.
வன்னிப் பிராந்திய கட்டளைத்
தளபதிகள்,பிரிகேடியர்கள் மற்றும்
அதிரடிப் படையின் உயரதிகாரிகள்
இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
.........................................................................
|
போரினால்
இடம்பெயர்ந்த வன்னி மக்களை
மீளக்குடியமர்த்துவதை
பிற்போடவேண்டாம்
யாழ். ஆயர். |
வன்னியில் யுத்தம் காரணமாக
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில்
வாழுகின்ற மூன்று இலட்சம் மக்களையும்
மீண்டும் அவர்கள் சொந்த இடங்களில்
குடியமர்த்தப்பட வேண்டும் எனவும்,
இதனைப் பிற்போடக் கூடாதெனவும் யாழ்.
ஆயர் அதிவண.தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை
தெரிவித்துள்ளார்.
வத்திக்கான் வானொலிக்கு ஆயர் அளித்த
பேட்டியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
வன்னிப் பகுதியில் கண்ணி வெடிகள்
அகற்றப்பட்டு அந்த மக்களின் வீடுகள்
புனரமைக்கப்பட்டு உள் கட்டமைப்பு
வசதிகள் சீராகச் செய்ய வேண்டும் எனவும்
ஆயர் வலியுறுத்தியுள்ளார்.
தொண்டர் நிறுவனங்களை அகதி முகாம்களில்
உள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளைச்
செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் எனவும்
ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது
இந்த மக்களுக்கு செஞ்சிலுவைச்
சங்கம்,ஐ.நா.பணியாளர்கள்,கரித்தாஸ்
நிறுவனம் என்பன மட்டுமே
மட்டுப்படுத்தப்பட்ட பணிகளை ஆற்ற
அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதையும் ஆயர்
குறிப்பிட்டுள்ளார்.
.........................................................................
|
கதிர்காமம் சென்ற வான்
பள்ளத்தில் பாய்ந்ததில் மூவர்
பலி; 4 பேர் காயம் நேற்று
பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
|
பலியானவரில் ஒருவர் பொலிஸ்
இன்ஸ்பெக்டர் கொடக்கவெல பல்லேபெத்த
பிரதேசத்தில் வான் ஒன்று பள்ளத்தில்
பாய்ந்ததில் மூவர் பலியானதுடன், 4 பேர்
காயமடைந்த நிலையில், பல்லேபெத்த
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.இச்சம்பவம் நேற்று
பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு
வானில் பயணித்தவர்களே
விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இறந்தவரில் ஒருவர் கொழும்பு
பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையம்
ஒன்றின் பிரதான இன்ஸ்பெக்டர் என
விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொடக்கவெல பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர். சடலங்கள்
பல்லேபெத்த வைத்தியசாலை சவச்சாலையில்
வைக்கப்பட்டுள்ளது.
.........................................................................
|
மாத்தளையில்
டெங்கு,எலிக்காய்ச்சலினால் 6
பேர் மரணம்;738 பேர் பாதிப்பு
இனம் காணப்பட்டுள்ளனர்.
|
மாத்தளை மாவட்டத்தில் டெங்கு நோய்
மற்றும் எலிக்காய்ச்சல் போன்றவை பரவி
வருகிறது. கடந்த ஆறு மாதத்திற்குள்
டெங்கு நோயாளர்கள் 515
பேரும்,எலிக்காய்ச்சல் நோயாளர்கள் 223
பேரும் மாத்தளை மாவட்டத்தில் இனம்
காணப்பட்டுள்ளனர்.
இதில் ஆறு பேர் மரணமடைந்துள்ளதாகவும்
மாத்தளை மாவட்ட சுகாதார பணிப்பாளர்
காமினி திஸாநாயக்கா தெரிவித்தார்.
டெங்கு நோயினால் உக்குவலை சுகாதார
சேவைப்பணிப்பாளர் பிரிவில் 161 பேரும்
மாத்தளை சுகாதார சேவைப்பிரிவில் 88
பேரும் மாத்தளை மாநகர சபைப்பிரிவில்
84 பேரும் இரத்தோட்டை சுகாதார
சேவைப்பிரிவில் 82 பேரும்
பதிவாகியுள்ளனர்.
இதைவிட இரத்தோட்டை யட்டவத்தை பல்லேபொல
மஹவெல போன்ற பகுதிகளில் எலிக்காய்ச்சல்
வேகமாகப் பரவிவருவதாகவும் இதனால் 223
பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
வயல்களில் வேலைசெய்வோர், செங்கல்
அல்லது மட்பாண்டத்தொழிலில
ஈடுபடுபவர்களையே எலிக்காய்ச்சல்
அதிகமாக தாக்குவதாகவும் தெரிவித்தார்.
.........................................................................
|
றுகுணு பல்கலைக்கழக மாணவரிடையே
மீண்டும் மோதல்; நால்வர்
படுகாயம். |
றுகுணு பல்கலைக்கழக மாணவர்களிடையே
ஏற்பட் மோதலால் நான்கு மாணவர்கள்
படுகாயமடைந்து மாத்தறை ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய மாணவர்களை வரவேற்பது தொடர்பாக
நேற்று முன்தினம் வியாழக்கிழமை
மாணவர்களிடையே இடம்பெற்ற
வாக்குவாதத்தால் இந்த மோதல்
ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கற்கள்,போத்தல்கள் இந்த மோதலின்போது
பயன்படுத்தப்பட்டதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை பொலிஸார் சம்பவ இடத்துக்கு
வந்து நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளே இந்த
மோதல்களுக்கு காரணம் என அதிகாரிகள்
குற்றம்சாட்டியுள்ளனர்.
முகாமைத்துவ பீடம் மற்றும் விஞ்ஞான
பீட மாணவர்களே இந்த மோதலில் ஈடுபட்டனர்.
அண்மைக்காலமாக றுகுணு
பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே
அடிக்கடி கடும் மோதல்கள்
இடம்பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.
.........................................................................
|
ஊவா மாகாணசபை தேர்தலுக்கான
முஸ்லிம் காங்கிரஸ்
வேட்பாளர்கள் வேட்பு மனு
தாக்கல். |
ஊவா
மாகாணசபைத் தேர்தலுக்காக பதுளை
மாவட்டம் சார்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தனது வேட்பு மனுவை தாக்கல்
செய்திருந்தது.வேட்பு மனு தாக்கல்
செய்தவர்களின் பெயர்கள் பின்வருமாறு;
அப்துல் ஹமீட் மொகமத் சித்திக், ஹாசிம்
மொகமத் ஹய்தர், சிஹானா இம்ரான், மொகமத்
சலீம் மொகமத் பதூஸ், அப்துல் மொகமத்,
மொகமத் ஹனிபா அப்துல் காசீம், பாயிஸ்
மொகமத் பதூர்தீன், என்.எஸ். இமாம்தீன்,
காதர் மீராசாய்பு ஹாஜானாப்தீன், மொகமத்
சத்திக் மொகமத் சியாம், சாவூல்ஹமீட்
மொகமத் ரூபி, ஜகரியா மொகமது அஸ்வர்தீன்,
மோகனதாஸ் ரமேஸ், ஏ.எ.நிசாப் தீன்,
ஜெயிலாப்தீன் மொகமத் ராசிக், மூசா
செய்யது அலவி, ஜமால்தீன் மொகமத் ராசில்,
ராசிக் மொகமத் முபீன், மொகமத் பாசில்
மொகமத் பதூறுதீன், செய்யத் அகமத்
உசேயின், பாருக் மொகமத் அப்துல் அசான்,
ஜமால்தீன் மொகமத் தௌபிக், ஹினாயா
சித்திக், மூசா மிரிக்கால்
உம்முருவல்தா,
.........................................................................
|
தயா மாஸ்டர்,ஜோர்ஜை பிரதம
நீதிவான் நேற்று வெள்ளிக்கிழமை
சென்று பார்வையிட்டார்.
|
விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர்
தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்
ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரைக் கொழும்பு
பிரதம நீதிவான் நிஷங்க ஹப்பு ஆராச்சி
பார்வையிட்டுள்ளார். சந்தேக நபர்கள்
இருவரும் தடுத்துவைக்கப்பட்டுள்ள
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு
நேற்று வெள்ளிக்கிழமை சென்றிருந்த
பிரதம நீதிவான் அவர்களைப்
பார்வையிட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய
ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் தடுத்து
வைக்கப்பட்டு விடுதலைப் புலிகளின்
நடவடிக்கைகள் தொடர்பாக இவ்விருவரிடமும்
விசாரணை நடத்தப்பட்டு வருகின்றதாக
குற்றப் புலனாய்வுப் பிரிவினர்
நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
முன்னர் இவ்விரு சந்தேக நபர்களும்
கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில்
குற்ற ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
.........................................................................
|
வவுனியா பொலிஸ் நிலைய முன்
வீதித்தடைகள் நீக்கம் நேற்று
வெள்ளிக்கிழமை முதல் திறந்து
விடப்பட்டது. |
வவுனியா பொலிஸ் நிலையத்தின்
முன்பாகவுள்ள ஏ9,பாதையைப் பொதுமக்களின்
போக்குவரத்துக்காக நேற்று
வெள்ளிக்கிழமை முதல் திறந்து
விடப்பட்டது.வவுனியா பொலிஸ் விடுதிக்கு
முன்பாக இரண்டு வருடங்களுக்கு முன்னர்
மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக்
குண்டுதாரி நடத்திய தாக்குதலையடுத்து
இந்த வீதி மூடப்பட்டது.
இதனால் பொதுமக்கள் பொலிஸ்
நிலையப்பகுதியை சுற்றியே சென்று
வந்தனர்.
தற்போது யுத்தம் முடிவுக்குக்
கொண்டுவரப்பட்டதையடுத்து வடக்கு,
கிழக்கில் வீதிகளில் உள்ள பாதுகாப்புத்
தடைகள் அகற்றப்பட்டுவருகின்றன.
நேற்று வவுனியா பொலிஸ் நிலையம்
முன்பான வீதியூடாக போக்குவரவுகள்
நடைபெற்றன.
.........................................................................
|
தடை செய்யப்பட்ட மீன்பிடி
வலைகள் கல்பிட்டி ஏத்தாலை
வாடிகளில் கண்டுபிடிப்பு. |
கடல்றொழில் செய்வதற்குப்
பயன்படுத்தப்படக்கூடாதென
தடைவிதிக்கப்பட்ட மீன்பிடி வலைகளைக்
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள்
கைப்பற்றியுள்ளனர்.கல்பிட்டியில்
இருந்து ஏத்தாலை வரையுமான கடற்கரைப்
பகுதிகளில் உள்ள மீன் வாடிகளில்
இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இவை
கைப்பற்றப்பட்டன.
இதன்படி 26 வீச்சுவலைகளும், ஐந்து
தங்கூசி வலைகளும் இவ்வாறு
கைப்பற்றப்பட்டன.
இந்த வலைகளைப் பயன்படுத்துவதால் சிறிய
மீன்கள் அழிவதுடன் மீன்வளங்களும்
எதிர்காலத்தில் பெரிதும்
பாதிக்கப்படும் எனவும் புத்தளம்
மாவட்ட கடற்றொழில் திணைக்களப்
பிரதிப்பணிப்பாளர் அநுர ஜயசிங்க
தெரிவித்தார்.
நீண்டகாலமாக இந்த வலைகள்
பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தமக்கு
புகார்கள் கிடைத்தன எனவும் இது
குறித்து இப்பிரதேசங்களைச் சேர்ந்த
மீனவர்களுக்கு அறிவுறுத்தியதாகவும்
அவர் தெரிவித்தார்.
இந்த வலைகள் நீதிமன்றத்தின் அனுமதி
பெற்றதும் அழிக்கப்படும் எனவும் அவர்
கூறினார்.
இனிமேலும் இந்த வலைகளைப் பயன்படுத்தும்
மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் எனவும் அவர்
எச்சரித்துள்ளார்.
.........................................................................
|
நடைபாதை வியாபாரிகளுக்கு
கொட்டில்கள் மத்திய மாகாணசபை
நடவடிக்கை எடுக்கவேண்டும். |
மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்களில்
நடைபாதைகளில் வியாபாரம் செய்து
வருகிறவர்களுக்கு உரியவகையில்
கொட்டில்களை அமைத்துக்கொடுப்பதற்கு
மத்திய மாகாணசபை கவனம் செலுத்த
வேண்டுமென மத்திய மாகாண முதலமைச்சரின்
கவனத்திற்குக்கொண்டு வந்துள்ளதாக
இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின்
பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை
உறுப்பினருமான எஸ்.சதாசிவம்
தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண முதலமைச்சரின்
அமைச்சர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில்
கலந்துகொண்டு மத்திய மாகாணத்தில்
உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய
வேலைத்திட்டங்கள் குறித்து கருத்து
தெரிவித்த போது அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
நடைபாதையோர வியாபாரிகளின் பல்வேறு
இடர்பாடுகளை கருத்தில் கொண்டு
அவர்களின் வியாபாரத்தை
விருத்திசெய்வதற்கான வழிவகைகளை
மாகாணசபை ஊடாக செய்து தரப்படவேண்டும்.
அத்துடன், இதுவரைகாலமும் மாகாணசபையின்
அதிகாரத்திற்குள் உள்ளடங்காத பாதைகளை
மாகாணசபை பொறுப்பேற்று அப்பாதைகளை
செப்பனிடவேண்டும் எனவும் இந்த
ஆலோசனைகளை பரிசீலனைக்கு எடுத்து
நடைமுறைப்படுத்த முதலமைச்சர் இணக்கம்
தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
.........................................................................
|
கிண்ணியா வலயக் கல்விப்
பணிப்பாளரின் உறுதிமொழியால்
பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது. |
முள்ளிப்பொத்தானை அல் ஹிக்மா
வித்தியாலயத்தில் கடந்த 4 நாட்களாக
மேற்கொள்ளப்பட்டு வந்த பாடசாலைப்
பகிஷ்கரிப்பு கிண்ணியா வலயக் கல்விப்
பணிப்பாளரின் உறுதிமொழியை அடுத்து
முடிவுக்கு வந்துள்ளது. இப்பாடசாலையில்
ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் தமது
பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை
பாதிக்கப்படுவதாகக் கூறி பெற்றோர்
பாடசாலைப் பகிஷ்கரிப்பை ஒழுங்கு
செய்திருந்தனர்.
க.பொ.த. (சா/த) வரை வகுப்புகளுள்ள
இப்பாடசாலையில் சுமார் 600 மாணவர்கள்
கல்வி கற்கிறார்கள்.இங்கு 22,ஆசிரியர்
தேவைக்கு அதிபருடன் சேர்ந்து 15,பேர்
மாத்திரமே பணி புரிகின்றனர்.
இதனால், முக்கிய பாடங்களைக்
கற்றுக்கொள்வதில் சிரமம் இருப்பதால்
இதற்கு தீர்வு காணும் பொருட்டு கடந்த
திங்கட்கிழமை பாடசாலைப் பகிஷ்கரிப்பு
ஆரம்பிக்கப்பட்டது.
வியாழக்கிழமை இப்பாடசாலைக்கு நேரில்
சென்ற கிண்ணியா வலயக் கல்விப்
பணிப்பாளர் ஏ.எல்.எம். ஸக்கரியர்
ஆசிரியர்கள், பெற்றோருடன்
பேச்சுவார்த்தை நடத்தினார்.
முடியுமான அளவு ஆசிரியர்களை அடுத்த
மாதத்துக்குள் நியமித்துத் தருவதாக
வலயக் கல்விப் பணிப்பாளரால்
கொடுக்கப்பட்ட உறுதி மொழியையடுத்து
பகிஷ்கரிப்புக் கைவிடப்பட்டது.
.........................................................................
|
பாடசாலை மாணவியின் கொலை
குறித்து இரகசியப் பொலிஸ்
விசாரணை ஆரம்பம். |
எஹலியகொடை எல்லாவல மகாவித்தியாலய
மாணவியின் மர்மக் கொலைகுறித்து
ஆராய்வதற்காக எஹலியகொடையில்
இரகசியப்பொலிஸார் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
பாடசாலை விட்டு காட்டுவழியாகச் சென்று
கொண்டிருந்த இம்மாணவி கழுத்து நெரித்து
கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக
பிரேத பரிசோதனையின்போது உறுதி
செய்யப்பட்டுள்ளது.
மாணவி கொலை செய்யப்பட்டிருந்த தடயம்,
பொருட்கள் மற்றும் உடைகள் பாடசாலை
உபகரணங்களை வைத்து இரகசியப்பொலிஸாரும்
எஹலியகொடைப் பொலிஸாரும் பல வழிகளிலும்
விசாரணை முடுக்கிவிட்டுள்ளனர்.எனினும்
இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இவர் எவருடனும் காதல் தொடர்புகள்
வைத்திருந்ததாக தகவல்கள் எதுவும்
இல்லையெனவும் பெரும்பாலும் இவர் புத்தி
சுவாதீனமற்ற ஒருவரால் கற்பழித்துக்
கொலைசெய்யப்பட்டிருக்கலாமென்ற
ஊகங்களையும் பொலிஸார் கவனத்தில்
எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
.........................................................................
|
"நாட்டில் யுத்தம்
முடிவடைந்துள்ளமை சகல இன
மாணவர்களினதும் கல்வி
உயர்வுக்கு வழி செய்யும்' |
நாட்டில் யுத்தம் நிறைவுற்றுள்ளமை சகல
இன மாணவர்களினதும் கல்வி உயர்வுக்கு
வழி செய்யுமென கம்பளை வலய உதவிக்
கல்விப் பணிப்பாளர் எஸ்.துரைராஜ்
தெரிவித்தார். அண்மையில் கம்பளை
வலயத்திற்குட்பட்ட வலப்பனை இக்ரா மகா
வித்தியாலயத்தில் நடைபெற்ற
வைபவமொன்றில் கலந்து கொண்டு
உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
கடந்த காலங்களில் வட, கிழக்கு
மாணவர்களுடன் தென்பகுதி மாணவர்களும்
யுத்தம் காரணமாக தமது கல்வி
நடவடிக்கைகளைத் தொடருவதில் பல்வேறு
சிக்கல்களை அனுபவித்தனர். நாட்டில்
யுத்தச் செலவுக்கு பணம் பெருமளவு
செலவிட வேண்டியேற்பட்டமையால்
பாடசாலைகளின் தேவையை நிறைவு செய்ய
அவசியமான நிதியும் குறைந்தது.
தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளது.
இதனால் அதிகளவு பணம் கல்வித்துறைக்கு
செலவழிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
என்றார்.
.........................................................................
|
டெங்கு நோய் தொடர்பான துண்டுப்
பிரசுரங்கள் சிங்களத்தில்
வெளியிட்டதால் சிரமம் |
இரத்தினபுரி மற்றும் கேகாலை
மாவட்டங்களில் டெங்கு நோய் குறித்து
வெளியிடப்பட்டுள்ள துண்டுப்
பிரசுரங்கள், செயல்முறை அட்டைகள்
உட்பட அனைத்து பிரசுரங்களும் தனிச்
சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ளதால்
தமிழ்பேசும் ஆசிரியர்கள், மாணவர்கள்
மற்றும் பொதுமக்கள் பல்வேறு அசௌ
கரியங்களுக்குள்ளாவதாக
தெரிவிக்கப்படுகிறது.
இதனால்,தோட்ட பாடசாலைகள், தோட்ட
தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை
அனுபவிப்பதுடன் டெங்கு நோய் குறித்து
சுகாதார திணைக்களங்கள் மற்றும் கல்வித்
திணைக்களங்களினூடாக அதிபர்,
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு
நடத்தப்படும் கருத்தரங்குகள் அனைத்தும்
தனிச்சிங்கள மொழியிலேயே இடம்பெற்று
வருகின்றன.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள்
கவனத்தில் கொண்டு ஆக்கப்பூர்வமான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென
பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை
விடுப்பதுடன் ஒருசில வைத்தியசாலைகளில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ள டெங்கு நோய்
குறித்த தகவலடங்கிய அட்டைகளும்
தனிச்சிங்கள மொழியிலே காணப்படுகின்றன.
.........................................................................
|
பாடசாலை மாணவர்களின் நலன்கருதி
மட்டக்களப்பு மாவட்டத்தில்
விசேட பஸ்சேவை. |
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை
மாணவர்களினதும்,ஆசிரியர்களினதும்
நலன்கருதி நகர்ப்புறங்களிலும்,
கிராமியப் பிரதேசங்களிலும் விசேட பஸ்
சேவைகளை நடத்த இலங்கை தேசிய
போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கைகளை
மேற்கொள்ளும் முகமாக மட்டக்களப்புக்கு
விஜயம் செய்து விசேட உயர்மட்டக்
கலந்துரையாடலை நடத்தியது.
கடந்த 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
வருகைதந்த போக்குவரத்து ஆணைக்குழு
அதிகாரிகள் இலங்கை மத்திய
போக்குவரத்துச்சபை அதிகாரிகள்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்
அரசாங்க அதிபர் எஸ்.அருமைநாயகம்
தலைமையில் நடைபெற்ற விசேட உயர்மட்டக்
கலந்துரையாடலில் மேற்படி பாடசாலை
பஸ்சேவை பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
இவ்விசேட கலந்துரையாடலில் மாவட்டத்தின்
அனைத்து பிரதேச செயலக பிரதேச
செயலாளர்கள், மட்டக்களப்பு,
காத்தான்குடி, வாகரை,
வாழைச்சேனை,ரிதிதென்ன,ஏறாவூர்,
திருகோணமலை,கந்தளாய், கிண்ணியா,மூதூர்
ஆகிய இ.போ.சபை சாலைகளின்
முகாமையாளர்கள், தனியார் பஸ்
போக்குவரத்துச் சங்கத் தலைவர்,
செயலாளர், உறுப்பினர்கள், கல்வி
அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதல்கட்டமாக சிசிர பாடசாலை பஸ் சேவையை
எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து
மட்டக்களப்பு மாவட்டத்தில்
ஆரம்பிப்பதெனவும் முடிவு
காணப்பட்டது.இதற்கான ஒப்பந்தங்களும்
உரிய போக்குவரத்துச்சபை நிறுவனங்களுடன்
கைச்சாத்திடப்படும் எனவும்
அறிவிக்கப்பட்டது. |