<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

ஜோன் எப் கெனடி விமான நிலையத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு  வரவேற்பளித்தனர்.  ஜப்பானுக்கான தமது ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாடு திரும்பினார்.யாழ் மாவட்டத்துக்கு இந்தியாவிலிருந்து நேரடியாக உணவுப் பொருட்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.  

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:22 செப்டம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

ஜோன் எப் கெனடி விமான நிலையத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு  வரவேற்பளித்தனர்.    

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 63ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று ஜோன் எப் கெனடி விமான நிலையத்ததைச் சென்றடைந்தார்.

ஐ.நா. பிரதிநிதி ப்ரொட்டு கொல் மற்றும் வொஷிங்டனில் கடமைபுரியம் இலங்கைக்கான தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய ஐ.நா.வுக்கான நிரந்தர இலங்கைப் பிரதிநிதி ஜீ.எஸ். பலிகக்கார மற்றும் முக்கியஸ்தர்கள் அங்கு ஜனாதிபதியை வரவேற்பளித்தனர்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 63ஆவது கூட்டத் தொடர் கடந்த 16 ஆம் திகதி நியுயோர்க்கில் ஆரம்பமானது. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத் தொடரில் உலகின் முக்கிய நாடுகளில் இருந்து 100 தலைவர்கள்; கலந்து கொள்கின்றனர்.

இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் உட்பட முக்கிய தலைவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இக்கூட்டத் தொடரின்போது சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானுக்கான தமது ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாடு திரும்பினார். 

ஜப்பானுக்கான தமது ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று நாடு திரும்பியுள்ளார்.

முதலமைச்சருடன் கிழக்கு மாகாண பிரதி வெளிவிவகார அமைச்சர் பய்சர் முஸ்தாபாவும் நாடு திரும்பியுள்ளார். இந்த விஜயத்தின் போது, கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்து, ஜப்பானிய அதிகாரிகளுடன் விரிவாக பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்துக்கு இந்தியாவிலிருந்து நேரடியாக உணவுப் பொருட்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், தனியார் துறையினரின் பதுக்கலை ஒழிக்கவும் இந்தியாவில் இருந்து உணவுப் பொருட்களை தருவிக்க சமூக சேவை சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து ஜனாதிபதி இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

தீபாவளிக்கு முன்னர் இந்தியாவில் இருந்து உருளைக்கிழங்கு, செத்தல் மிளகாய், உள்ளி, பெரிய வெங்காயம், சீனி, பயறு, சர்க்கரை, கற்கண்டு, துவரம்பருப்பு ஆகியவற்றை எடுத்துவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பொருட்கள் யாழ். மாவட்டத்திலுள்ள 22 பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொழும்பு விலைகளுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

குடாநாட்டு வியாபாரிகள் உணவுப் பொருட்களை கொழும்பு விலையிலும் பார்க்க 50 சதவீத அதிகரித்த விலையில் விற்பதால் மக்கள் நலன் கருதி இந்நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அமெரிக்கா நிதியுதவி தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை கட்டியெழுப்புவதற்கான பலவருடத் திட்டம் ஒன்றை யு.எஸ்.எயிட் (க்.கு.அஐஈ) நிதியுதவியின் கீழ் முன்னெடுத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிராந்தியத் தொடர்பு பொருளாதாரங்கள் என்ற இப்புதிய திட்டம் சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்குடனேயே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கிழக்கு மாகாணத்திற்கும் மேல் மாகாணத்திற்கும் இடையில் உள்ள பொருளாதார அபிவிருத்தியில் பாரிய வேறுபாடுள்ளது.

இதனால், எப்பகுதியில் பொருளாதார அபிவிருத்தி சிதைவடைந்த நிலையில் உள்ளதென்பதை ஆராய்ந்து அப்பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஊவா மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலுமிருக்கும் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், சந்தைப்படுத்துவோர் மற்றும் நுகர்வோர் ஆகியோரிடையேயான தொடர்புகளை அபிவிருத்தி செய்வதும் இத்திட்டத்தின் ஒரு நோக்கமாகும்.

மேலும், இலங்கை அரசின் ஐந்து அமைச்சுகளுடன் தொடர்புடையதும் அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் தசேர்விஸ் குறுப் என்ற அமைப்பு இத்திட்டத்தினை கொண்டு நடத்தவுள்ளது.

1956 ஆம் ஆண்டு முதல் யு.எஸ்.எயிட் நிறுவனமானது அனர்த்த நிவாரண கட்டமைப்பு, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றிற்காக 1.9 பில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான தொகையினை வழங்கி வருகின்றதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பான் மனிதாபிமான நிதி நிறுவன உதவியில் பள்ளிக்குடியிருப்பு கிராமத்தில் முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட மூதூர், ஈச்சிலம்பற்று மற்றும் சேருவில பிரதேச செயலர் பிரிவுகளில் இலங்கை சிறுவர் நிதியத்தினால் அடையாளம் காணப்பட்ட 25 இடங்களில் நிறுவப்பட்டுள்ள முன்பள்ளிகளில் ஒன்று பள்ளிக் குடியிருப்புக்கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிக்குடியிருப்புக் கிராமத்தில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சிநிலம, கௌரவ அதிதியாக திருகோணமலை மாவட்ட அரச அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா, சிறப்பு அதிதியாக இலங்கை சிறுவர் நிதியத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் அரிப் ஜப்பார் கான் மற்றும் மூதூர், ஈச்சிலம்பற்று, சேருவில பிரதேச செயலாளர்கள், திருகோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகம் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பள்ளிக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஆ.குணராஜரட்ணசிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். இலங்கை சிறுவர் நிதியம், ஜப்பான் பிளாட்போம் என்ற சர்வதேச மனிதாபிமான நிதி நிறுவனத்தின் நிதியுதவியுடன் 28 மில்லியன் ரூபா செலவில் 25 முன்பள்ளிகளை நிர்மாணிக்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 50 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சியும் வழங்கப்படுகிறது. வருடாந்தம் சுமார் 800 மாணவர்களுக்கு பயன்தரக்கூடியதாக இம் முன்பள்ளிச் செயற்றிட்டம் அமைவதாக இலங்கை சிறுவர் நிதியம் தெரிவிக்கின்றது.

இம்முன்பள்ளிகளுக்கு உள்ளக மற்றும் வெளியக விளையாட்டுக்களுக்குரிய உபகரணங்கள், தளபாடங்கள், கற்றல் மற்றும் கற்பித்தலுக்குத் தேவையான காகிதாதிகளும் வழங்கப்பட்டுள்ளன. சிறார்கள் கற்றல் மற்றும் விளையாட்டுத்துறையில் ஆர்வத்துடன் பங்குபற்ற வாய்ப்பளிக்கும் விதத்தில் சிறார்களுக்கு மேலதிக உணவு வழங்கும் திட்டம் ஒன்றையும் இலங்கைச் சிறுவர் நிதியம் ஆரம்பித்துள்ளது.

வவுனியாவுக்குச் சென்ற விமல்வீரவன்ச ஓமந்தையில் படையினரையும் சந்தித்தார் உரையாடினார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சனிக்கிழமை வவுனியாவுக்கு விஜயம் செய்தார். பலத்த பாதுகாப்புடன் வந்த அவர் ஏ9 பாதையூடாக ஓமந்தைக்கும் சென்று அங்குள்ள படையினரின் முன்னரங்க காவல் அரண்களையும் பார்வையிட்டதுடன் அங்குள்ள படையினரையும் சந்தித்து உரையாடினார்.

விமல்வீரவன்ச எம்.பி.யுடன் சில பௌத்த பிக்குமாரும் இங்கு வந்திருந்தனர். யுத்தத்தில் ஈடுபடுகின்ற படையினரை உற்சாகப்படுத்தும் நோக்கமாகவே இவர்கள் இங்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிக்குமார் படையினருக்கு ஆசி வழங்கினார்கள்.

வன்னி இராணுவ நடவடிக்கை தொடர்பாக படை உயர் அதிகாரிகளையும் சந்தித்து விமல்வீரவன்ச கலந்துரையாடினார்.

தென்பகுதியிலிருந்து அண்மைக்காலத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் வடபகுதி யுத்த முனைக்குச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டு விமல்வீரவன்ச எம்.பி. முகமாலைப் பகுதிக்கு கவசவாகனத்தில் சென்று படையினரைச் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

வன்னியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை முதல் கடும் சமர் நடைபெற்று வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை முதல் கடும் சமர் நடைபெற்று வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சிக்கு தெற்கே வன்னேரி, அக்கராயன் மற்றும் முறிகண்டியின் உட்புறப் பகுதிகளிலேயே இந்த உக்கிர சமர் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதிகாலை 5.50 மணியளவில் ஆரம்பமான இந்த உக்கிர சமர் சகல பகுதிகளிலும் தொடர்ந்து மிகக் கடுமையாக நடைபெற்று கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆட்லறி ஷெல் சத்தங்களாலும் பல் குழல் ரொக்கட் தாக்குதல்களாலும் அந்தப் பிரதேசமே அதிர்ந்து கொண்டிருந்தது.படையினருக்கு ஆதரவாக விமானப் படை விமானங்களும் தொடர்ச்சியாக கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதேநேரம், கொக்காவில் பகுதியில் 57 ஆவது படையணியினர் புலிகளுடன் கடும் சமரில் ஈடுபட்டு வருவதாக நேற்று பிற்பகல் படைத்தரப்பு தெரிவித்தது. இந்த உக்கிர மோதலில் புலிகள் தரப்பில் 12க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் படைத்தரப்பு தெரிவித்தது.

அதிகாலை முதல் விடுதலைப் புலிகள் அக்கராயன், வன்னேரி மற்றும் முறிகண்டியின் உட்புறப் பகுதிகளில் படையினருடன் கடும் மோதல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச சமாதான தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் சமாதான செபமாலை பேரணி.

சர்வதேச சமாதான தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் சமாதான செபமாலைப் பேரணி நடைபெற்றது. யாழ். மறை மாவட்ட நீதி சமாதானத்துக்கான ஆணையம் ஏற்பாடு செய்த இப்பேரணியில் கத்தோலிக்க குருமார், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், மாணவ, மாணவிகள் உட்பட ஆயிரக்கணக்காண பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

யாழ். மறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பங்குகளிலும் இருந்து மக்கள் காலை 7 மணியளவில் பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

பாதயாத்திரையின் போது செபமாலை வாழிபாடும் கூட்டுப்பாடல்களும் சமாதானத்தை வேண்டி இடம்பெற்றன.

காலை 10.30 மணிக்கு இப்பாத யாத்திரைகள் மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தை சென்றடைந்தது. இடையில் பலர் இந்த யாத்திரைகளில் இணைந்துகொண்டதையும் காண முடிந்தது.

மானிப்பாய் புனித அந்தோனியர் ஆலயத்தில் குரு முதல்வர் அருட்தந்தை யஸ்ரின் ஞானபிரகாசம் அடிகள் தலைமையில் கூட்டு வழிபாடுகளும் திருப்பலியும் இடம்பெற்றன.

வன்னி உட்பட உலகம் முழுவதும் துன்பப்படும் மக்களுக்கு நீதியும் மன அமைதியும் விடுதலையும் கிடைக்கவேண்டும் என்று இறையாசி வேண்டி இந்த வழிபாடுகள் நடைபெற்றன.

வன்னிக்கான உணவு விநியோகம் வவுனியாவில் இன்று கலந்துரையாடல் வவுனியாவில் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான உணவு விநியோகம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று திங்கட் கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் உலக உணவுத் திட்ட கொழும்பு அலுவலக சிரேஷ்ட உயரதிகாரி ஆகியோர் இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான உணவு விநியோகம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான மாற்று வழிவகைகளை ஏற்படுத்துவது தொடர்பாக உலக உணவுத் திட்ட வவுனியா அலுவலகத்தில் இந்த விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறும்.

கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக வன்னிப் பெருநிலப்பரப்பின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு உணவுப் பொருட்ளை எடுத்துச் செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுத்துள்ள நிலையிலேயே இந்த விசேட கலந்துரையாடல் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வன்னியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரகணக்கான மக்கள் தமது வாழ்விடயங்களை விட்டு வெளியேறி அகதிகளாக தஞ்சமடைந்துள்ள நிலையில் உணவு விநியோகமும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தேசிய மெய்வல்லுநர் சம்பியன் சிப் போட்டியில் யாழ். மாணவன் சிறந்த வீரராகத் தெரிவு.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நாடு தழுவிய ரீதியில் பொலநறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் நடத்திய தேசிய இளைஞர் செய்வல்லுநர் சம்பியன் சிப் போட்டியில் யாழ்ப்பாண பிரதேசத்தைச் சேர்ந்த அன்டன் ரஜீம்ராஜ் சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நீளம் பாய்தல் போட்டியில் 7.04 மீற்றர் தூரம் பாய்ந்து சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பயிற்சி நெறியை மேற்கொள்ளும் மாணவராவார்.

இவருக்கு சிறந்த பயிற்சியினை வழங்குவதன் மூலம் இலங்கையின் மிகச் சிறந்த ஒரு விளையாட்டு வீரராக இவர் திகழ வாய்ப்புண்டு என செஞ்சிலுவைச் சங்க தலைவர் ஜகத் அபேசிங்க தெரிவித்தார்.

இம்முறை நடைபெற்ற தேசிய இளைஞர் மெய்வல்லுநர் சம்பியன் சிப் போட்டியில் 42 புதிய சாதனைகள் நிலை நாட்டப்பட்டுள்ளன. இப் போட்டிகளில் மூன்றாவது முறையாகவும் மாத்தறை பிரதேசம் அதிகூடுதலான புள்ளிகளைப் பெற்று வெற்றியீட்டியது. இரண்டாவது இடத்தை குருநாகல் பிரதேசமும் பெற்றது.

இப்போட்டியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த 26 கிளைகளிலும் இருந்து 1300 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இப்போட்டிகளில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த சானக நதீஸானும், 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த சஜானி மதுசிகாவும், 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் சி.என். தலங்கமவும், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஏ.எம்.எஸ்.ஏ. அதிகாரியும் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த கசுன் சம்பத்தும் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் எச். ஏ.எல்.ஏ. நிமாலியும் ( மாத்தறை பிரதேசம்), 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்டன் ஜெயராஜ், அன்டன் ரஜீம்ராஜும், 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டிகளில் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த றுவனி ரூபசிங்கவும் சிறந்த வீர, வீராங்கனைகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

விபத்தில் சிக்கியவருக்கு மாத்தறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படாததே மரணத்துக்கு காரணம் மரண விசாரணையில் சாட்சியம்.

சில தினங்களுக்கு முன்னர் மாத்தறையில் இடம்பெற்ற வீதிவிபத்து சம்பவத்தில் படுகாயமடைந்து பின்னர் மரணமான இளைஞனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததே மரணத்துக்குக்காரணம் என மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் வீதியால் நடந்து சென்ற பிரியங்கா என்ற இளைஞன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் அவர் படுகாயமடைந்து மாத்தறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாதலைக்கு மாற்றப்பட்டார்.அங்கு சிகிச்சையளிக்கப்பட்டபோதும் அவர் மரணமடைந்தார், நேரகாலத்துடன் இங்கு கொண்டு வந்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என காலி ஆஸ்பத்திரி டாக்டர்கள் இறந்தவரின் தந்தைக்குக் கூறியுள்ளார். இந்த இளைஞனின் மரண விசாரணை காலி மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் நடைபெற்றது.

அதன்போது நடந்த சம்பவத்தைக் கூறிய தந்தை முதலில் மாத்தறை ஆஸ்பத்திரியில் அனுமதித்து மூன்று நாட்களின் பின் காலி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்ததாகவும், மாத்தறை ஆஸ்பத்திரியில் உரிய கவனிப்பும், சிகிச்சையும் மேற்கொள்ளப்படாததே மரணத்துக்குக் காரணம் எனத்தெரிவித்தார். சந்தேக நபரான மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சுகாதார அமைச்சு மற்றும் அரசியல்வாதிகளிடமும் முறையிடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்க காரணமானவர்கள் ஐ.தே.க. ஆட்சியினரே வர்த்தக நுகர்வோர் அமைச்சர் மித்திரபால.

இனப்பிரச்சினைக்கு காரணமான ஐக்கிய தேசியக்கட்சியினர் இன்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது என வர்த்தக நுகர்வோர் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தெரணியகலை தொகுதி அமைப்பாளருமான எச்.ஆர்.மித்திரபால தெரிவித்துள்ளார். தெரணியகலை மியனவிட்ட தோட்டத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மித்திரபால; இந்த நாட்டில் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது இன வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டது ஐக்கிய தேசியக்கட்சியின் அன்றைய ஆட்சியே. அதன் பின்பு பத்து வருடங்களாக ஆட்சி நடத்தியும் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நட்டஈட்டையும் வழங்கவில்லை.

ஆனால், தாம் ஆட்சிக்கு வந்தால் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்காண்போம் என்று இன்று கூறிவருகின்றனர்.10 வருட ஆட்சியில் தீர்வைக்கண்டிருக்கலாமல்லவா?

வடபகுதி மக்கள் விவசாயத்தில் முன்னேற வழிவகுத்தது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசே. வடக்கில் இருந்து செத்தல் மிளகாய்,உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற உணவுப்பொருட்களை விவசாயிகள் தெற்கே கொண்டு வந்தனர். அதேபோல தென்பகுதி வியாபாரிகளும் வடக்கே சென்று வியாபாரம் செய்துவந்தனர்.தமிழ்,சிங்கள மக்கள் ஐக்கியமாக வாழ்ந்து வந்தது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியிலேயே என்பது வரலாறு.

1977 இல் ஜே.ஆர் ஜயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் வடபகுதி மக்களின் பொருளாதாரத்தை சீர்குலைத்து அவர்களை அடக்கி ஆள முயற்சித்தனர். அதனால்தான் வடபகுதி இளைஞர்கள் ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இன்று நாடு அழிவுப்பாதைக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதற்கு காரணம் ஐ.தே.கட்சியினரே. ஆனால், அவர்கள் இன்று ஏதோ எல்லாம் கூறுகின்றனர். ஐக்கிய தேசியக்கட்சியின் அராஜக ஆட்சியை புரியாமல் ஒரு சில மலையக தமிழ்க்கட்சிகள் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வக்காலத்து வாங்கி வருவது கவலையாக உள்ளது.

இந்தநாட்டில் சகல இனமக்களும் மோதல்களை மறந்து ஒற்றுமையாக வாழ்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முயற்சி எடுத்துவருகிறார்.இந்த யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. பயங்கரவாதத்தை ஒடுக்கவே யுத்தம் நடைபெறுகின்றது யுத்தம் தற்காலிகமானதே. இனப்பிரச்சினைக்கு யுத்தம் தீர்வல்ல.

ஜனாதிபதி இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எடுத்துவரும் பணிகளுக்கு நாம் அரசியல் வேறுபாடுகளை மறந்து அவரது கரங்களை பலப்படுத்த வேண்டும் என்றார்.

மட்டக்களப்பில் இசைக்குழுவொன்றை உருவாக்க இளைஞர் சேவைகள் மன்றம் நடவடிக்கை.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை உள்ளடக்கிய இசைக் குழுவொன்றினை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பாஸ்கர சேனாங்கவின் ஆலோசனைக்கமையவே இந்த இசை நடனக்குழு உருவாக்கப்படவிருப்பதாக மன்றத்தின் பணிப்பாளர் கே.தவராஜா தெரிவித்தார்.

இதன் பொருட்டு கீழைத்தேய மற்றும் மேலைத்தேய இசைக் கருவிகளை வாசிக்கும் திறமையுடையோர், அறிவுப்புத்துறையில் ஆற்றல் கொண்டவர்கள், பாடும் திறமை மிக்கவர்கள், நடன, நாட்டிய ஆர்வலர்களை இணைக்கும் முயற்சியில் இளைஞர் சேவைகள் மன்றம் ஈடுபட்டுள்ளது.

தகமையுடையோர் தமது விண்ணப்பங்களை உதவிப் பணிப்பாளர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மாவட்ட காரியாலயம்,பயனியர் வீதி மட்டக்களப்பு என்னும் முகவரிக்கு அல்லது 0652224367 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright