அமெரிக்காவின்
நியூயோர்க் நகரில் இடம்பெறும்
ஐ.நா. பொதுச்சபை
அமர்வில் பங்கேற்க
ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை
பயணமாகியுள்ளார்.
அமெரிக்காவின்
நியூயோர்க் நகரில் இடம்பெறும்
ஐ.நா.வின் பொதுச்சபை அமர்வில் கலந்து
கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
நேற்று வெள்ளிக்கிழமை பயணமாகியுள்ளார்.
இலங்கைத் தூதுக்குழு
சகிதம் ஜனாதிபதி நேற்று பகல் 1.30
மணியளவில் பயணமாகியதாக ஜனாதிபதியின்
அலுவலக ஊடகப் பிரிவு தெரிவித்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை பொதுச் சபை
அமர்வு ஆரம்பமாகியுள்ளது. இந்த
அமர்வில் சர்வதேச அமைதி, பாதுகாப்பு,
பொருளாதார வளர்ச்சி, பொருளாதார
அபிவிருத்தி இலக்குகள் போன்ற விடயங்கள்
ஆராயப்படும்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன்
தலைமையில் இடம்பெறும் உச்சி மாநாட்டில்
100க்கும் அதிகமான உலகத் தலைவர்கள்
கலந்து கொள்ளவுள்ளார்கள்.
அரச தலைவர்கள் அமைச்சர்கள் உரை
நிகழ்த்தும் பொதுச்சபை அமர்வு
செப்டெம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும்.
யாழ் 5 ஆம் ஆண்டு
புலமைப் பரிசில் பரீட்சையில் மீசாலை
வீரசிங்கம் மாணவன் சாதனை
தமிழ் மொழி மூலத்தில்
176 புள்ளிகளை பெற்று முதலிடம்.
கடந்த மாதம் 17 ஆம்
திகதி நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்
பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம்
தோற்றிய மாணவர்களில் தேசிய மட்டத்தில்
முதலாம் இடத்தை மீசாலை வீரசிங்கம் மகா
வித்தியாலய மாணவன் தர்மலிங்கம்
பாசுபதன் பெற்றுக்கொண்டுள்ளார்.
இவர் இப்பரீட்சையில் அதிகூடிய
புள்ளியாக 176 புள்ளிகளைப் பெற்று
தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப்
பெற்றுள்ளார்.
இப்பரீட்சைக்கு முன்னோடியாக யாழ்.
தினக்குரல் மாவட்ட மட்டத்தில் நடத்திய
பரீட்சையிலும் இம்மாணவன் தோற்றி 187
புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில்
முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமையும்
குறிப்பிடத்தக்கது.
எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகக் கொண்ட
இம்மாணவனின் தந்தையார் தர்மலிங்கம்
மிருசுவில் அரசினர் தமிழ்க் கலவன்
பாடசாலையில் ஆசிரியராகவும், தாயார்
வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில்
ஆசிரியையாகவும் பணிபுரிகின்றனர்.
யுத்த சூழல் காரணமாக
எழுதுமட்டுவாளில் இருந்து
இடம்பெயர்ந்து வந்து வீரசிங்கம் மகா
வித்திய?லயத்தில் தரம் 4 இல் இருந்து
கல்விகற்று வருகிறார்.
இம்மாணவனின் கடின உழைப்பும்
விடாமுயற்சியுமே அவர் இப்பரீட்சையில்
இந்தளவுக்கு முதலாம் இடத்தில்
சித்திபெறக் காரணம் என அவருக்கு
கற்பித்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை இம்மாணவனின் பரீட்சை முடிவைக்
கேள்வியுற்ற தென்மராட்சி வலய கல்வி
அதிகாரிகளும், கல்விமான்களும் நேரில்
சென்று இம்மாணவனை பாராட்டியதுடன்
திடீர் பாராட்டு நிகழ்வையும் ஏற்பாடு
செய்து மாணவன் பாசுபதனை கௌரவித்தனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற
மோதல்களில்
புலிகள் தரப்பில் 25க்கும் மேற்பட்டோர்
கொல்லப்பட்டும் பலர்
காயமடைந்துமுள்ளனர்.
வியாழக்கிழமை
நடைபெற்ற மோதல்களில் எட்டுப் படையினர்
கொல்லப்பட்டும் 15 படையினர்
காயமடைந்துமுள்ளனர்.கிளிநொச்சி வவுனியா
மற்றும் மணலாறு பகுதிகளில் நடைபெற்ற
இந்த மோதல்களில் விடுதலைப் புலிகள்
தரப்பில் 25க்கும் மேற்பட்டோர்
கொல்லப்பட்டும் பலர்
காயமடைந்துள்ளதாகவும் படையினர்
தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் வன்னேரிக்குளம் மற்றும்
கரம்பைக்குளம் பகுதியில் வியாழக்கிழமை
காலை பத்து மணி முதல் நடைபெற்ற நீண்ட
நேர மோதலில் கரம்பைக்குளம்
அணைக்கட்டில் சுமார் 3 கிலோ மீற்றர்
தூரத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும்
இந்தச் சமரில் ஐந்து படையினர்
கொல்லப்பட்டும் 12 படையினர்
காமடைந்துள்ளதாகவும் படையினர்
தெரிவித்தனர்.
மணலாறு ஆண்டான்குளம் பகுதியில்
நடைபெற்ற கடும் மோதலில் மூன்று
படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.இங்கு
மூன்று பகுதிகளில் காலை முதல் கடும்
மோதால்கள் நடைபெற்றுள்ளன.
இதேநேரம், வவுனியா பாலமோட்டைப்
பகுதியிலும் வியாழக்கிழமை மோதல்கள்
நடைபெற்றுள்ளன. இந்த மோதலில் ஒரு
இராணுவச் சிப்பாயும் வேட்டைமான்குளம்
பகுதியில் நடைபெற்ற மோதலில் இரு
படையினரும் காயமடைந்துள்ளதாக படையினர்
கூறியுள்ளனர்.
இந்த மோதல்களில் புலிகள் தரப்பில்
25க்கும் மேற்பட்டவர்கள்
கொல்லப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு
தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கிளிநொச்சி,
வன்னேரிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை
படையினரின் பாரிய முன்னகர்வு
முயற்சியைத் தாங்கள் முறியடித்ததாகவும்
இதில் 25க்கும் மேற்பட்ட படையினர்
கொல்லப்பட்டும் 85க்கும் மேற்பட்ட
படையினர் காயமடைந்துள்ளதாகவும் புலிகள்
தெரிவித்துள்ளன.
அரியாலை கிழக்கில்
நெற்செய்கையாளர்களுக்கு
இசற்.ஓ.ஏ.நிறுவனம் விதைநெல் வழங்கி
ஊக்குவிப்பு.
அரியாலை
கிழக்கில் 12 வருடங்களின் பின்னர்
இவ்வருடம் முதற்தடவையாக நெல்
விதைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட
நெல்வயல்களின் உரிமையாளர்களுக்கு
இசற்.ஓ.ஏ.நிறுவனம் விதை நெல் மற்றும்
முட்கம்பிகளை வழங்கியுள்ளது.
அரியாலை கிழக்கு
விவசாய சம்மேளனம் மற்றும் கமநல சேவைகள்
திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து,
அப்பகுதியில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட
28 விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில்
மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.
நெல் விதைக்கப்படும் வயல்களை
உள்ளடக்கியதாக சுமார் 3 கிலோமீற்றர்
தூரத்துக்கு பாதுகாப்பு வேலி
அமைப்பதற்காகவே முட்கம்பிச்சுருள்கள்
வழங்கப்பட்டன என்று இசற்.ஓ.ஏ.நிறுவனம்
தெரிவித்துள்ளது.
மேற்படி உதவிகள் கடந்த 16 ஆம் திகதி
வழங்கப்பட்டதாகவும் இதற்கான
நிதியுதவியை ஐரோப்பிய ஒன்றியத்தின்
மனிதாபிமான அமையம், நெதர்லாந்தின்
இலங்கைகான தூதுவராலயம் ஆகியன
வழங்கியிருந்ததாகவும் அந்த அமைப்பு
தெரிவித்துள்ளது.
நெடுந்தீவில்
கரையொதுங்கிய இந்தியரின் உடலுக்கு
உறவினர் முன்னிலையில் இன்று இறுதிக்
கிரியை.
ஊர்காவற்றுறை
நீதிபதி அனுமதி நெடுந்தீவுப் பகுதியில்
கடந்த 14 ஆம் திகதி கரை ஒதுங்கிய
இந்தியர் ஒருவருடையதெனச்
சந்தேகிக்கப்பட்ட சடலம் நேற்று
வெள்ளிக் கிழமை அடையாளம்
காட்டப்பட்டுள்ளது.இந்தியாவின் குஜராத்
மாநிலத்திலிருந்து நேற்று யாழ்ப்பாணம்
வந்த இறந்தவருடைய பேரன், மருமக்கள்
இருவரும் மற்றும் அவர்களின் குடும்பச்
சட்டத்தரணி ஆகியோரே மேற்படி சடலத்தை
அடையாளம் காட்டினர்.
யாழ். போதனாவைத்தியசாலையில்
வைக்கப்பட்டிருந்த சடலத்தை
ஊர்காவற்றுறை நீதிபதி திருமதி ஜோய்
மகாதேவா முன்னிலையில் அடையாளம்
காட்டிய உறவினர்கள், சடலத்தை இந்தியா
எடுத்துச் செல்லும் சிரமத்தைக்
கருத்தில் கொண்டு இந்து சம்பிரதாய
முறைப்படி யாழ்ப்பாணத்திலுள்ள
மயானமொன்றில் தகனம் செய்த பின் அஸ்தியை
இந்தியா எடுத்துச் செல்ல அனுமதி
வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி
அவர்களின் விருப்பப்படி தகனம்
செய்வதற்கு அனுமதி
வழங்கினார்.இதையடுத்து குறித்த சடலம்
இன்று அடக்கம் செய்யப்படவுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
பிரஸ்தாப நபர் தனது 500க்கும்
மேற்பட்ட சுற்றத்தாருடன் திருப்பதி
மற்றும் இராமேஸ்வரம் ஆலயங்களுக்கு மத
ரீதியிலான சுற்றுலா ஒன்றை மேற்கொண்ட
போது ரயிலிலிருந்து தவறிக் கடலில்
வீழ்ந்திருக்கலாம் என்று
சந்தேகிக்கப்படுகின்றது.
கேசவ்லால் பட்டேல் போலிதாஸ் என்பவரே
இவ்வாறு இறந்தவராவார். இவரின் சடலத்தை
இனங்காண்பதற்காக இந்திய
தூதுவராலயத்தின் உயர் அதிகாரி ஒருவரும்
நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
2003 ஆம் ஆண்டின்
பின்னர் வடக்கிலிருந்து வந்த அனைவரும்
கட்டாயம் பொலிஸில் பதிய வேண்டும்
ஒலிபெருக்கி மூலம்
பொலிஸார் அறிவிப்பு.
2003 ஆம் ஆண்டுக்கு பின்னர்
வடமாகாணத்திலிருந்து மேல்
மாகாணத்திற்கு வந்து தங்கியிருப்போர்
தத்தமது பொலிஸ் நிலையங்களில் நாளை
ஞாயிற்றுக்கிழமை தம்மை பதிவு
செய்துகொள்வது கட்டாயமென பொலிஸார்
நேற்று இரவு பல பகுதிகளிலும்
ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்தல்
விடுத்தனர்.
2003 ஆம் ஆண்டுக்குப் பின்
வடக்கிலிருந்து மேல்மாகாணத்திற்கு
வந்து தற்காலிகமாக, நிரந்தரமாக
தங்கியிருப்போர் அனைவரும் நாளை சகல
பொலிஸ் நிலையங்களிலும் பதிவு
செய்யப்படவுள்ளனர்.
இது தொடர்பான அறிவுறுத்தல்களை ஊடகங்கள்
மூலம் வெளியிட்ட பொலிஸ் தலைமையகம்
நேற்று இரவு கொழும்பின் பல
பகுதிகளிலும் ஒலிபெருக்கிகள் மூலம்
அறிவித்தல் விடுத்தனர்.
மாளிகாவத்தை, கொட்டாஞ்சேனை உட்பட பல
பகுதிகளிலும் வடக்கிலிருந்து வந்து
தங்கியிருப்போர் அனைவரும் கட்டாயமாக
பதிய வேண்டுமென அறிவித்தல்
விடுக்கப்பட்டுள்ளது.
மருமகனின் கொடுமையை
தாங்கமுடியாமல் அவரைக் கொலை செய்ததாக
மாமியார் சாட்சியம்.
எனது மகளை
அடித்து துன்புறுத்துவதுடன் என்னையும்
அடிப்பார். தினமும் மதுபோதையில்
வருவார். அவரின் அட்டகாசம் தாங்க
முடியாததால் இவ்வாறு செய்தேன்.
நீர்கொழும்பு கொச்சிக்கடையில் மருமகனை
பெற்றோல் ஊற்றிக் கொலை செய்ததாக
குற்றஞ்சாட்டப்பட்ட அவரது மாமியார்
பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில்
கூறியுள்ளார்.
அன்ரசன் சாந்த (34 வயது) என்பவர்
இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவர்.
கடந்த 14 ஆம் திகதி இரவு இவர்
படுக்கையில் கிடந்தபோது மாமியார்
பெற்றோலை அவர் மீது ஊற்றி எரித்துக்
கொலை செய்தார்.
பின்னர் இவர் நீர்கொழும்பு பொலிஸ்
நிலையத்தில் சரணடைந்தார். பொலிஸாருக்கு
அளித்த வாக்குமூலத்தில் தானே
இக்கொலையைச் செய்ததாகவும் அவர்
கூறினார்.
மருமகனின் கொடுமை தாங்க முடியாமல்
அவரது பிள்ளைகளும் படிக்க முடியாது
விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
எனவும் அப்பெண் கூறினார்.
இச்சம்பவத்தில் எரிகாயமடைந்த மருமகன்
நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு
தேசிய வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டிருந்தார் அங்கு அவர்
மரணமானார். மரண விசாரணையின் பின்னர்
சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வலிகாமம் மேற்கு
பகுதிகளில்
மழைநீர் கடலில்
கலப்பதைத் தடுக்க வலிகாமத்தில் பாரிய
திட்டம்.
வலிகாமம் மேற்கு,
வலிகாமம் வடக்கு, வலிகாமம்
தென்மேற்குப் பகுதிகளில் மழைநீர்
வழிந்தோடி கடலில் கலப்பதைத் தடுக்கும்
பாரிய அபிவிருத்தித்திட்ட வேலைகள்
சுமுகமாக நடைபெற்று வருவதாக மீள்
எழுச்சித் திட்ட பதில் பணிப்பாளர்
வி.விசுவலிங்கம் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம்
ஆசிய அபிவிருத்தி வங்கியின்
நிதியுதவியுடன் இருபது கோடி ரூபா
செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகின்றது. இத்திட்டத்தின் முதல்
கட்டமாக கடல் நீர் குடிமனைக்குள்
புகுவதை தடுக்க அராலிப் பகுதியில்
இருந்து தடுப்பணைகள் அமைக்கப்பட்டு
வருகின்றன. மேலும் இப்பிரதேசங்களில்
அமைந்துள்ள முப்பத்திரெண்டு சிறிய
நீர்ப்பாசனக் குளங்களை ஆழமாக்கி மழை
நீரை சேமிக்கும் திட்டமும்
ஆரம்பமாகியுள்ளது.
இதன்
முன்னோடியாக ஆலன்குழைகுளம்
உப்புவயல்குளம் ஆகியவற்றை ஆழமாக்கும்
வேலைகளை ஆரம்பிக்க யாழ்ப்பாண மாவட்ட
நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கையை
எடுத்துள்ளது. யுத்தத்தால்
பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் சமுதாய
வாழ்வாதாரத் திட்டமாக தேசத்தை
கட்டியெழுப்புவதற்கும்
அபிவிருத்திக்குமான அமைச்சு
நடைமுறைப்படுத்தி வருகின்றது.
சிங்கப்பூருக்கு
வேலைக்கு சென்ற பெண் மரணம்
பொலிஸ் நிலையத்தின்
ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்கு வீட்டுப் பணிப்
பெண்ணாக வேலைக்குச் சென்றிருந்த பசறைப்
பகுதி தோட்டமொன்றின் இளம் குடும்பப்
பெண், அங்கு திடீரென
மரணமாகியிருப்பதாக, அவரது
குடும்பத்தினருக்கு பசறை பொலிஸ்
நிலையத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பசறைப் பகுதியின் கனவரல்லை
பெருந்தோட்ட ஈ.ஜி.கே. பிரிவைச்
சேர்ந்த டி.ராதிகாதேவி (வயது 21) என்ற
இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை பசறைப்
பொலிஸாரினால் மேற்படி மரணம் குறித்த
தகவலை மரணமான பெண்ணின்
குடும்பத்தவர்களுக்கு உத்தியோக
பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மரணமானவரின் பெற்றோரும்,
கணவரும் ஊவா மாகாண சபை உறுப்பினர்
அ.அரவிந்குமாரிடம் முறையிட்டுள்ளனர்.
ஊவா மாகாண சபை உறுப்பினர் இது
தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு
அமைச்சர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பணியகத் தலைவர் ஆகியோருடன் தொடர்பு
கொண்டு மரணம் தொடர்பில் சந்தேகம்
நிலவுவதாக வெளிப்படுத்தியதுடன் சடலத்தை
பசறைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளையும்
மேற்கொண்டுள்ளார்.
வட,கிழக்கு
ஆஸ்பத்திரிகளுக்கு 9மாதங்களுக்கு
தேவையான மருந்து பொருட்கள்
அனுப்பிவைப்பு
சுகாதார அமைச்சு
கூறுகிறது.
வடக்கு, கிழக்கிற்கு
9 மாதங்களுக்கு தேவையான மருந்துப்
பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன்
இடம்பெயர்வோரை கருத்தில் கொண்டு
வவுனியா வைத்திய சாலைக்கு மேலதிகமாக
ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள்
அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும்
அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சின்
அதிகாரி கருத்து தெரிவிக்கையில்;
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு
மாவட்டத்தில் சிலருக்கு எலிக்காய்ச்சல்
ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் ஏற்கனவே இதற்குத் தேவையான
மருந்துகளை வட, கிழக்கு பகுதிகளுக்கு
அனுப்பிவைத்துள்ளோம்.
எலியின் சிறுநீரிலிருந்து வெளியேறும்
லெப்டோபைரோஸிஸ் என்ற நோய்க்கிருமியால்
இந் நோய் மனிதருக்கு தொற்றுகின்றது.
இதனால் ஈரலே பாதிக்கப்படுவதனால்,
காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகிலுள்ள
மருத்துவமனைக்கு செல்லுமாறும்
கேட்பதுடன் இல்லாவிட்டால் காய்ச்சல்
நீடித்து செங்கமாரி ஏற்பட
வாயப்புள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
இதே வேளை திருகோணமலை வைத்தியசாலையினை
புதிய வகையில் வடிவமைப்பதற்கும் புதிய
வார்ட்டுகளை நிர்மாணிப்பதற்கும்
அமெரிக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி
வங்கி ஆகியன நிதியுதவி வழங்கியுள்ளன.
இதன் பிரகாரம் திருமலை வைத்தியசாலையின்
பழைய கட்டிடங்கள் நீக்கப்பட்டு சில
கட்டிடங்கள் நவீன வகையில்
புதுப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.
இனங்களுக்கிடையில்
புரிந்துணர்வை ஏற்படுத்தும் முக்கிய
காரணியாக நோன்பு
ஹிஸ்புல்லா
கூறுகிறார்.
இலங்கையில் சமாதானம்
ஏற்படுவதற்கு இனங்களுக்கிடையே
புரிந்துணர்வு தேவை. அப்புரிந்துணர்வை
ஏற்படுத்துவதற்குரிய முக்கிய காரணியாக
நோன்புப் பெருநாள் அமைவதாக கிழக்கு
மாகாணச் சுகாதார அமைச்சர்
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, திருகோணமலை
அரசினர் பொதுவைத்தியசாலையில் கடந்த
வியாழக்கிழமை (செப்.18) மாலை நடைபெற்ற
இப்தார் நிகழ்வில் பேசும்போது
குறிப்பிட்டார்.
வைத்திய அத்தியட்சர்
டாக்டர் திருமதி கௌசிஞானகுணாளன்
திருகோணமலை நீதிவான்
ரி.எல்.மனாப்,மாகாணப் புனர்வாழ்வு
அமைச்சின் செயலாளர் எம்.ஷெரிப்,
சுகாதார சேவைகள் பிராந்திய பிரதிப்
பணிப்பாளர் டாக்டர் இ.ஞானகுணாளன்,
திருகோணமலை நகரசபையின் தலைவர் எஸ்.
கௌரிமுகுந்தன், உபதலைவர் கே.செல்வராசா,
கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஆளும்
கட்சியின் சார்பில் போட்டியிட்ட
சுதந்திரக் கட்சிப்பிரமுகர்
கே.ஏ.முஜிபுர் ரஹ்மான், டாக்டர்கள்,
வைத்தியசாலையின் பணிப்பாளர்கள்,
திருகோணமலை துறை முகப் பொலிஸ்
பொறுப்பதிகாரி மற்றும்
சமயப்பெரியார்கள் நிகழ்வில்
பங்குபற்றினர்.
மாகாண அமைச்சர்
ஹிஸ்புல்லா தொடர்ந்து பேசியபோது,
ரமழான் நோன்புப் பெருநாளின் 17 ஆவது
நாள் பத்ரு நினைவு தினமாகும்.
இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தைப்
பாதுகாப்பதற்காக முதலாவது யுத்தம்
நடத்தப்பட்டதினம். ஆண்டில் 11 மாதங்கள்
உண்டு, களித்து வாழ்ந்து வரும் எமக்கு
வறுமையில் வாடும் மக்களின் வேதனையை
அனுபவிக்க இறைவன் வழங்கியுள்ள வாய்ப்பே
ஒரு மாதகால நோன்பாகும். பசி,
பட்டினியால் வாடும்மக்களின் துன்ப,
துயரங்களை நோன்பு காலத்தில் நாமும்
அனுபவிக்கிறோம். மனிதநேயத்தை
வளர்ப்பதற்கு நோன்பு உதவுகிறது என்று
கூறினார். மௌலவி பரீத் பயான்
நிகழ்த்தினார்.
எம்.எம்.எம்.அஸாத்
வரவேற்புரை நிகழ்த்தினார்.மௌலவி கியாஸ்
கிறாத் ஓதினார். மௌலவி மர்சூக்,
இப்தார் மற்றும் அஸான் நிகழ்த்தினார்.
திருகோணமலை ஆஸ்பத்திரி முஸ்லிம்
நலன்புரி சங்கத்தின் சார்பில்
எம்.முஸம்மில் நன்றியுரை கூறினார்.
சலவாத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
தமிழ்மொழி மூலத்தில்
மீசாலை பாடசாலை மாணவன் புலமைப்பரிசில்
பரீட்சையில் 3 மாணவிகளுக்கு 183
புள்ளிகள் முதலிடம்.
தமிழ்மொழி மூலத்தில்
மீசாலை பாடசாலை மாணவன் முதலிடம்200
க்கும் அதிகமான மாணவர்களுக்கு 0
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில்
பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 183
புள்ளிகளைப் பெற்று மூன்று சிங்கள
மாணவிகள் முதலிடத்தைப் பெற்றுள்ள
அதேநேரம், தமிழ்மொழி மூலம் 176
புள்ளிகளைப் பெற்று சாவகச்சேரி மீசாலை
வீரசிங்கம் வித்தியாலய மாணவன்
தர்மலிங்கம் பாசுபதன் முதலிடத்தைப்
பெற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற
இந்தப் பரீட்சையின் முடிவுகள் நேற்று
வெள்ளிக்கிழமை வெளியாகின.
இதன் அடிப்படையில் அகில இலங்கை
ரீதியில் கொழும்பு சிறிமாவோ
பண்டாரநாயக்க மகளிர் கல்லூரி
மாணவிகளான மஹிந்தனி அமாசா
ஹப்புவாராச்சி, பம்பலப்பிட்டி லிண்ட்சே
மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சஜிஜி
அஞ்சனா சேனாதீர மற்றும்
புத்தளம் சென் அன்? மத்திய ம.வி.யை
சேர்ந்த அபேசிங்க தோன மனீசா சுபிபி
ஆகிய மூன்று மாணவிகளுமே 183
புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றனர்.
இதேநேரம், தமிழ்மொழி மூலம் சாவகச்சேரி
மீசாலை வீரசிங்கம் வித்தியாலயத்தைச்
சேர்ந்த மாணவனான தர்மலிங்கம் பாசுபதன்
176 புள்ளிகளைப் பெற்று முதலிடம்
பெற்றுள்ளார்.
இந்தப் பரீட்சை முடிவுகளை நாளை
மறுதினம் திங்கட்கிழமை முதல்
இணையத்தளங்களில் பார்வையிட முடியுமென
பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய பிரபல பாடசாலைகளில் அனுமதி
பெறுவதற்கும் புலமைப்பரிசில்
பெறுவதற்குமான வெட்டுப் புள்ளி மட்டம்
பற்றிய விபரம் மாவட்ட அடிப்படையில்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 200 க்கும் அதிகமான மாணவர்கள்
ஒரு புள்ளிகூட எடுக்கவில்லையென
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர
எதிரிசிங்க தெரிவித்தார்.
பம்பலப்பிட்டிக்கு இரவு
நேரம் காரில் சென்ற 3 தமிழ் மாணவர்
உட்பட 5 பேரை காணவில்லை.
பம்பலப்பிட்டிக்கு
காரில் சென்ற மூன்று தமிழ் மாணவர்கள்
உட்பட ஐந்து பேர் காருடன் காணாமல்
போயுள்ளதாக பெற்றோர் மருதானை
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையங்களிலும்
பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடமும்
முறையிட்டுள்ளனர். இவர்கள் ஐந்து
பேரும் கொழும்பை பிறப்பிடமாகக்
கொண்டவர்களெனவும் அவர்கள்
தெரிவித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனையை சேர்ந்த என். ரஜீவ்(21
வயது), விஸ்வநாதன் பிரதீப் (17 வயது),
ராமலிங்கம் திலகேஷ் (17 வயது),
மருதானையைச் சேர்ந்த மொகமட் டிலான்(24
வயது), மொகமட் சஜித் (24 வயது) ஆகிய
ஐந்து பேருமே காணாமல் போயுள்ளதாக
மருதானை, கொட்டாஞ்சேனை பொலிஸ்
நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் பயணித்த டபிள்யூ. பி. கே. சி.
5559 என்ற இலக்கமுடைய கறுப்பு நிற "டாட்டா
இன்டிக்க' காரும் காணாமல் போயுள்ளதாக
புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17/09/2008 புதன்கிழமையன்று இரவு
10.45 மணியளவில் பம்பலப்பிட்டிக்கு
செல்வதாக புறப்பட்டுச் சென்ற ஐவரும்
நேற்று வரை வீடு திரும்பவில்லை என்றும்
பெற்றோர் தெரிவித்துள்ளனர். நண்பர்கள், உறவினர்கள் பொலிஸ்
நிலையங்கள் உட்பட பல இடங்களில்
தேடியும் இவர்கள் ஐந்து பேர் தொடர்பாக
எதுவித தகவலும் பெறமுடியவில்லை என்றும்
தெரிவிக்கப்பட்டது. காணாமல்
போயுள்ளவர்களில் என். ரஜீவ்
கொட்டாஞ்சேனை சப்பாத்து வீதியையும்,
திலகேஷ் புளுமெண்டால் தொடர்மாடியையும்,
பிரதீப் வாசல வீதியையும் சேர்ந்தவர்கள்.
இவர்களில் பிரதீப் பம்பலப்பிட்டி இந்து
கல்லூரி மாணவர் என்றும் திலகேஷ்
நிக்கலஸ் வித்தியாலயத்தில் கல்வி
பயில்வதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
இவர்கள் கடத்தப்பட்டார்களா? அல்லது
கைது செய்யப்பட்டார்களா? என்று
அறியத்தருமாறு பெற்றோர் பிரதி
அமைச்சரிடம் கோரியதை அடுத்து பொலிஸ்
மா அதிபருக்கு கடிதம் மூலமாகவும்,
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி
நவரட்ணவுக்கு தொலைபேசி மூலமும்
பிரதியமைச்சர் புகார் செய்துள்ளார்.
கொழும்பு மத்தி
பாடசாலை அதிபர்களுடன் அமைச்சர்
ஆறுமுகன் தொண்டமான் சந்திப்பு
கலந்துரையாடல்
இடம்பெற்றது.
இளைஞர் வலுவூட்டல்
மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி
அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான்
தலைமையில் அமைச்சின் கேட்போர்
கூடத்தில் கொழும்பு மத்தி பாடசாலைகளின்
அதிபர்களுடன் கலந்துரையாடல்
இடம்பெற்றது.
இக்
கலந்துரையாடலின்போது அமைச்சர்
அதிபர்களுடன் பாடசாலைகளின் குறைபாடுகளை
கேட்டறிந்ததுடன், அவற்றை தனது
அமைச்சின் ஊடாக நிவர்த்தி செய்ய ஆவன
செய்வதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள
குறைந்த வருமானம் பெறும் பெற்றோரின்
பிள்ளைகளை இனங்கண்டு அவர்களுக்கான
பாடசாலை சீருடை புத்தகப்பை,
சப்பாத்துக்கள் மற்றும் அத்தியாவசிய
உபகரணங்கள் முதலியவற்றை
பகிர்ந்தளிப்பதற்கான ஆவணங்களை
சமர்ப்பிக்குமாறு அதிபர்களை
கேட்டுக்கொண்டார்.
தொழில்நுட்ப கல்வியை ஊக்குவிக்கும்
முகமாக கணினிகள் வழங்குதல், முன்னிலை
பாடசாலைக்கான நவீன கற்பித்தல்
உபகரணங்களை கொடுத்து, பாடசாலை
பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தல்
வகுப்பறையின் சுகாதாரத்தையும்,
சுற்றாடலையும், பேணும் முகமாக மலசலகூட
வசதி, சுத்தமான குடிநீர், விளையாட்டு
மைதானம், விஞ்ஞான கூடம் மற்றும்
மனையியல் கூடங்களுக்கு தேவையான
உபகரணங்களை வழங்கி அவற்றை நவீன
வசதிமிக்கதாக அமைத்தல்.
கல்வியில் பின்தங்கிய மாணவர்களை
ஊக்குவிக்கும் முகமாக மேலதிக
வகுப்புகளை நடத்துவதற்காக ஆவன செய்து
தரப்படுமென்றும், 5 ஆம் வகுப்பு
மற்றும் கல்விப்பொதுத்தராதர சாதாரணதர,
உயர்தர பரீட்சையில் திறமை
சித்தியெய்திய மாணவர்களுக்கு
புலமைப்பரிசில்கள் வழங்குதல், மேலதிக
வகுப்புகளுக்கான உதவிகளை ஒழுங்கு
செய்தல், பல்கலைக்கழக அனுமதியை பெறும்
வாய்ப்பை ஊக்குவித்தல் போன்ற பல
திட்டங்களை எதிர்காலத்தில் அமைச்சின்
ஊடாக சகல பாடசாலைகளுக்கும்
அளிக்கப்படுமென்பதை அமைச்சர்
அதிபர்களிடம் உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலின் போது அமைச்சரின்
ஆலோசகர் எம்.கே.டீ.ஜி. மீகொட,
அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் நௌசாத்
யுனைதீன், கொழும்பு மாவட்ட அமைப்பாளர்
வசந்தா ரோகிணிதேவி மற்றும் இ.தொ.கா.
உபதலைவரும், பெருந்தோட்ட அபிவிருத்தி
மனிதவள நிதியத்தின் தலைவருமான ஆர்.
யோகராஜன், கொழும்பு மாநகரசபை
உறுப்பினர் திருகேதீஸ்வரன் செல்லச்சாமி
ஆகியோரும் கலந்துகொண்டனர்.