|
விடுதலைப் புலிகள் தலைவர்
பிரபாகரன் பிடிபட்டால் அவரை இந்தியாவிடம்
ஒப்படைப்போம் என்று இலங்கை அதிபர் மகிந்தா
ராஜபக்ஷே கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல் தொடரும்
என்றும் அவர்களுடன் போர் நிறுத்த ஒப்பந்தம்
செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை
என்றும் அவர் தெரிவித்தார்.
.
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே
நேற்றிரவு பல்வேறு வெளிநாட்டு நிருபர்களுக்கு
விருந்து அளித்தார். அப்போது பேசிய
அவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின்
தலைவர் பிரபாகரன், இந்திய முன்னாள் பிரதமர்
ராஜீவ் காந்தி கொலையில் முக்கிய குற்றவாளி
என்றும், எனவே அவர் பிடிபட்டால் அவரை
தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று
இந்தியா கோரிக்கை விடுக்குமானால் அதுகுறித்து
தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்றும்
ராஜபக்ஷே தெரிவித்தார்.
பிரபாகரன் எப்போது பிடிபட்டாலும் அவர்
மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் அவர் கூறினார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே
கைதிகளை பரிமாறிக் கொள்ளும் உடன்பாடு
எதுவும் இல்லை என்ற போதிலும், இரு தரப்பினரும்
பரஸ்பரம் வேண்டுகோள் அடிப்படையில்
நாடு கடத்த முடியும் என்றும் அவர்
தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு
ராணுவம் வெற்றிகளைப் பெற்று வருவதாக
கூறிய அவர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில்
உள்ள பகுதிகள் ஒவ்வொன்றாக ராணுவத்தின்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாக
கூறினார்.
இலங்கையில் தற்போது ராணுவம்
மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள்
குறித்து விரிவாக விளக்கிய ராஜபக்ஷே,
விடுதலைப் புலிகளை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதற்கான
காலவரை பற்றி தெரிவிக்க மறுத்துவிட்டார்.
விடுதலைப் புலிகளுடன் மீண்டும் போர்
நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளும்
பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய மகிந்தா
ராஜபக்ஷே, விடுதலைப் புலிகள் அனைவரும்
தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய
வேண்டும் என்றார்.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு
தமது அரசு பாதுகாப்பு அளிக்கும் என்றும்
அவர் உறுதி அளித்தார். |