<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

வன்னி மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான அரசின் "மனிதாபிமான வழி'க்கு ஜெனீவாவில் ஆதரவு அரச தூதுக்குழு தெரிவிப்பு.

 

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:06 செப்டம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

வன்னி மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான அரசின் "மனிதாபிமான வழி'க்கு ஜெனீவாவில் ஆதரவு அரச தூதுக்குழு தெரிவிப்பு.

வன்னியிலுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறி வவுனியா வருவதற்கென அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் மனிதாபிமான வழி' ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதாக அரசாங்கத் தரப்புத் தூதுக் குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 9 ஆவது அமர்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை ஜெனீவாவைச் சென்றடைந்த இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துப் பேசியுள்ளது.

அத்துடன், இக்குழு ஐ.நா.வின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான புதிய உயர்ஸ்தானிகரான நவனீதம் பிள்ளையை சுவிற்சர்லாந்தின் நேரப்படி நேற்று மாலை சந்தித்துப் பேசவிருந்தது.

இந்த நிலையில் வியாழக்கிழமை சந்திப்புகளின் போதே அரசாங்கத்தின் ""மனிதாபிமான வழி' யோசனைக்குப் பெரும் வரவேற்புத் தெரிவிக்கப்பட்டதாக இலங்கை பிரதிநிதிகள் குழுவின் அங்கத்தவரான அரச சமாதான செயலகப் பணிப்பாளரான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க ஜெனீவாவிலிருந்து தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவரும் ஜெனீவாவுக்கான நைஜீரிய நிரந்தரப் பிரதிநிதியுமான மார்ட்டின் இஹோயிகியன் யுஹோமொய்ப்ஹி உட்பட ஏனைய பல முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர்பாக இலங்கைப் பிரதிநிதிகள் குழு விளக்கமளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜெனீவாவுக்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி தயான் ஜயதிலகவின் ஏற்பாட்டில் பேரவையின் உறுப்பினர்களுக்கு வியாழக்கிழமை மதிய போசன விருந்துபசாரமொன்றும் வழங்கப்பட்டுள்ளதுடன், இதன் போது நடைபெற்ற கலந்துரையாடல்களில் மனித உரிமைகள் நிலைவரங்களை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை இலங்கை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேநேரம், மனித உரிமைகள் தொடர்பான உத்தேசிக்கப்பட்ட தேசிய நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் அரசாங்கம் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதாகவும் அமைச்சர் சமரசிங்க இதன் போது விளக்கிக் கூறியுள்ளார்.

இதேவேளை, நடைபெற்ற சந்திப்புகளில் இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகளுடனான சந்திப்புகள் மிகவும் முக்கியமானதென அரச சமாதானச் செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.

வன்னியிலுள்ள மக்களுக்கு மாவட்ட செயலகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வரும் அத்தியாவசியப் பொருட்கள் பற்றியும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களுக்குப் புள்ளி விபரங்களுடன் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேநேரம், இலங்கையில் ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்காணிப்பகம் நிறுவப்பட வேண்டுமென இருந்து வந்த அழுத்தங்கள் தற்போது குறைவடைந்து இலங்கைத் தலைமைத்துவத்துடன் இணைந்து செயற்படுவதென்ற யோசனைகள் அங்கு மேலோங்கியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும் ரஜீவ விஜேசிங்க கூறினார்.

கடந்த காலங்களில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரங்கள் தொடர்பாக இருந்து வந்த எதிர்ப்புகள் இம்முறை குறைவடைந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரித்தார்.

இதேநேரம் ஜெனீவா சென்றுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்று இரவு நாடு திரும்பவுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததுடன், ரஜீவ விஜேசிங்க தலைமையிலான குழுவினர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமை இல்லாத நிலையிலேயே இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் பேரவை அமர்வில் கலந்து கொள்வதுடன், பேரவையில் கருத்துகளை முன்வைக்க உறுப்புரிமை கட்டாயம் அவசியமில்லை எனவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright