விடுதலைப் புலிகளுக்கு, "ஆசிட்' கடத்த முயன்ற வழக்கில் கைதானவர்கள், பிரான்சில் இருந்து வந்த உத்தரவுப்படி செயல்பட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மண்டபம் அருகே அரியமான் கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட சுற்றுலா படகில் இருந்த இரண்டு இன்ஜின்கள், கடந்த ஐந்து மாதத்துக்கு முன் திருட்டு போனது. இதனிடையே கடந்த 1ம் தேதி, உச்சிப்புளி அருகே நாகாச்சி பகுதியில் புலிகளுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆசிட் கேன்களை தனிப்பிரிவு போலீசார் கைப்பற்றினர். இதன் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு கியூ பிரிவு போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருந்த போது, புலிகளுக்கு ஆசிட் கடத்த பதுக்கிய வழக்கில் தேடப்பட்ட, மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த கிருபாகரன்(25), தீபன்(25), பிரேம், குமார்(28) சின்ன சேலம் முகாமைச் சேர்ந்த துஷ்யந்தன், மதுரை முகாமைச் சேர்ந்த சீலன்(25) மற்றும் இன்ஜின் திருட்டு வழக்கில் தேடப்பட்ட நாகாச்சியில் தங்கியிருக்கும் அகதி சசிகுமார்(22), நாகாச்சியைச் சேர்ந்த முனியசாமி(28) ஆகியோர் சிக்கினர். இவர்களை கைது செய்த போலீசார், இரண்டு இன்ஜின்களையும் பறிமுதல் செய்து, உச்சிப்புளி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கிருபாகரன் கூறுகையில், "எனது நண்பன் மூலம், பிரான்சில் வசித்து வரும் ரூபன் என்ற அகதி பழக்கமானார். அவரிடம் செலவுக்காக போன் மூலம் பணம் கேட்ட போது, "மதுரை சென்று 99 நம்பர் கொண்ட பிரவுன் ஆசிட்டை வாங்கி, ஈழத்துக்காக போராடும் விடுதலைப் புலிகளுக்கு கடல் மார்க்கமாக இரணித்தீவுக்கு படகில் கொண்டு சென்றால் அங்கு கடல் புலிகள் வாங்கிக் கொள்வர்' என கூறி, முதல் தவணையாக 60 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்தார். அதன் படி நான், எனது நண்பன் தீபன், மதுரை திருவாதவூர் முகாமைச் சேர்ந்த சுபசீலன், சின்ன சேலம் முகாமைச் சேர்ந்த துஷ்யந்தன் ஆகியோர், மதுரையில் உள்ள கடையில் ஆசிட் வாங்கினோம். புலிகளுக்கு படகில் அனுப்ப, அகதிகளை இலங்கைக்கு ஏற்றி செல்லும் ஏஜென்ட் பிரேம் குமாருடன் பேசினோம். அவர், "புலிகளுக்கு தெரிந்த நண்பருக்கு போன் செய்தால் இலங்கையில் இருந்து படகு வந்து விடும். அதன் மூலம் ஆசிட்டை கடத்தலாம்' என்றார். புலிகள் இயக்கத்தில் தான் சேர முடியவில்லை, அந்த இயக்கத்திற்கு உதவுவோமே என, ஆசிட் கடத்த இருந்த போது பிடிபட்டோம்' என்றார்.
இன்ஜின் திருடி புலிகளுக்கு கடத்த இருந்த வழக்கில் கைதான அகதி சசிகுமார் கூறுகையில், "புலிகள் அமைப்பைச் சேர்ந்த நந்தா என்பவர், கடந்த மூன்று மாதத்துக்கு முன் என்னிடம், "இரண்டு இன்ஜின்களையும் பத்திரமாக வைத்திரு. புலிகள் அமைப்புக்கு தேவைப்படும் போது வாங்கிச் செல்கிறேன்' என கூறி, இலங்கை சென்று விட்டார். அவர் கூறியப்படி இன்ஜின்களை நாகாச்சி பகுதியில் மண்ணில் புதைத்து வைத்திருந்தேன். இந்நிலையில், "புலிகளுக்கு ஆசிட்டை கடத்த, பதுக்கி வைக்க உதவ முடியுமா?' என, மண்டபம் முகாமைச் சேர்ந்த கிருபாகரன், ஜெகன், பிரேம் குமார் கேட்டனர். நானும் ஒப்புக் கொண்டேன். போலீசாரிடம் சிக்கினேன்' என்றார். இவர்கள் அளித்த தகவல்படி பிரான்சைச் சேர்ந்த ரூபன், புலிகள் அமைப்பைச் சேர்ந்த நந்தா குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வரலாற்றுச்
சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி
கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று
ஆரம்பம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்
கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம்
இன்று புதன்கிழமை காலை
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உற்சவம்
இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.
உற்சவத்தையொட்டிய சகல ஏற்பாடுகளும்
பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக
யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் மு.செ.
சரவணபவ தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில்
உற்சவத்தையொட்டி யாழ். மாவட்டத்தில்
அமுல்செய்யப்பட்டுவரும் ஊரடங்கு
உத்தரவு இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை
நான்கு மணி வரை அமுல் செய்யப்படுமென
பலாலி பாதுகாப்புப் பிரிவினர்
அறிவித்துள்ளனர்.
ஆலய உற்சவ தினங்களில் அங்கபிரதிஷ்டை
செய்பவர்களின் வசதி கருதி இம்மாற்றம்
அறிவிக்கப்பட்டுள்ளது. உற்சவங்களில்
கலந்துகொள்பவர்களின் நலன்களை
கவனிப்பதற்கு இலங்கை செஞ்சிலுவைச்
சங்க தொண்டர்கள், இந்து இளைஞர் மன்ற
அங்கத்தவர்கள், சாரண குழுக்கள், மக்கள்
நலன்காக்கும் தொண்டர் பிரிவினர்,
சென்.ஜோன்ஸ் அம்பியுலன்ஸ்
படைப்பிரிவினர் பணியில் ஈடுபடவுள்ளனர்.
அடியார்கள் உற்சவங்களில்
கலந்துகொள்ளும்போது அதிகளவு தங்க
நகைகளை அணிந்து வருவதையோ பணம்
பொருட்களை எடுத்துவருவதையோ
தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார்
வேண்டியுள்ளனர். ஆலய வளாகத்துள்
பொலிஸாரோ பாதுகாப்பு பிரிவினரோ
கடமையில் இருக்கமாட்டார்கள் எனவும்
அவர்கள் வெளியில் மட்டும் பணியில்
ஈடுபடுவார்களென அறிவித்துள்ளனர்.
வவுனியா குஞ்சுக்குளம்
பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை
கடும் மோதல் ஹெலித்
தாக்குதல்.
வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில்
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை படையினர்
மேற்கொண்ட முன்னேற்ற முயற்சியை
முறியடித்துள்ளதாக விடுதலைப்புலிகள்
தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் நேற்று செவ்வாய்க்கிழமை
பிற்பகல் மன்னார் வெள்ளங்குளத்திற்கு
மேற்கே விமானப் படையின் தாக்குதல்
ஹெலிகொப்டர்கள் கடும் தாக்குதலை
நடத்தியுள்ளன.
வவுனியாவுக்கு வடமேற்கே நவ்வி,
குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று மாலை
4 மணியளவில் பலத்தஷெல் தாக்குதலுடன்
முன்னேற்ற முயற்சியை மேற்கொண்ட
படையினர் மீது கடும் பதில் தாக்குதல்
நடத்தப்பட்டதில் பல படையினர்
கொல்லப்பட்டதுடன் பலர்
காயமடைந்துள்ளதாகவும் புலிகள்
தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் வெள்ளங்குளத்திற்கு வடக்கே
புலிகளின் நிலைகள் மீது எம்.ஐ.24 ரக
ஹெலிகொப்டர்கள் கடும் தாக்குதலை
நடத்தியுள்ளதாக படைத்தரப்பு
தெரிவித்துள்து.
மோதல்களால்
இடம்பெயர்ந்த அவல நிலையில் இன்று
பரீட்சைக்கு தோற்றும் வன்னி மாணவர்கள்.
வன்னியில் படை நடவடிக்கை
தீவிரமடைந்துள்ள நிலையில் இடம்
பெயர்ந்த மாணவர்கள் இன்று புதன் கிழமை
ஆரம்பமாகும் க.பொ.த (உயர்தர)
பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். வவுனியா,
மன்னார் மற்றும் முல்லைத்தீவில்
இடம்பெறும் பாரிய படை நடவடிக்கைகள்
காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்
பெயர்ந்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்திலிருந்தே
மிகப்பெருமளவான மக்கள் இடம்
பெயர்ந்துள்ளனர். இந்த மூன்று
மாவட்டங்களிலிருந்தும் பெருமளவு
மாணவர்களும் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் கடும் யுத்தத்திற்கு
மத்தியில் வன்னியில் இன்று 6ஆம் திகதி
க.பொ.த.(உயர்தர) பரீட்சை
ஆரம்பிக்கின்றது.
இடம் பெயர்ந்த மாணவர்களுக்கான பரீட்சை
நிலையங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில்
அமைக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
கடும் யுத்தம், பாரிய இடப்பெயர்வு,
தங்குவதற்கான வசதியின்மை போன்ற பல்வேறு
கஷ்டங்களின் மத்தியில் இடம் பெயர்ந்த
மாணவர்கள் இந்தப் பரீட்சைக்கு
தோற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், இடம்பெயர்ந்த ஐந்தாம் ஆண்டு
மாணவர்களுக்கான புலமைப் பரிசில்
பரீட்சையும் கிளிநொச்சி மாவட்டத்திலேயே
நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் கூட்டமைப்பினரை
தமிழீழ எம்.பி.க்களாக கருதி சார்க்
மாநாட்டுக்கு அழைப்பு
விடுக்கப்படவில்லை
அரசுக்கு நன்றி
தெரிவிக்கிறார் சிவாஜிலிங்கம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
உறுப்பினர்களை தமிழீழ எம்.பி.க்களாகக்
கருதி சார்க் மாநாட்டுக்கு அழைப்பு
விடுக்காததையிட்டு அரசாங்கத்திற்கு
நன்றி தெரிவிப்பதாக கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.
சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்
கிழமை நடைபெற்ற இந்திய, இலங்கை
அரசுக்கிடையிலான சீபா உடன்படிக்கை
தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணையில்
கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு
தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்கவும் எதிர்க்கட்சித் தலைவர்
ரணில் விக்கிரமசிங்கவும்
புறக்கணிக்கப்பட்டதுடன்,
அவமதிக்கப்பட்டுள்ளனர். இது வெளிநாட்டு
அமைச்சின் திட்டமிட்ட செயலாகும்.
சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம்
எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
ஆனால் முழு கடல் பரப்பும் நமக்கு
சொந்தமானது என கூறப்படுகின்றது.
தற்போது அனல் மின்சார நிலையம்
அமைக்கப்படவுள்ளதாக கூறி சம்பூர்
மக்கள் தமது சொந்த இடங்களில்
மீள்குடியமர்த்தப்படாதுள்ளனர்.
இந்தியாவின் உதவியுடனே இத்திட்டம்
நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை
சுட்டிக்காட்ட வேண்டும்.
இதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 1
மில்லியன் அமெரிக்க டொலரில்
அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையை
வெளிநாடுகளுக்கு தாரைவார்த்து
கொடுத்துக்கொண்டு சட்டமூலம்
பிரேரிக்கப்பட்டால் இது என்ன நியாயம்?
காடுகளை அழித்து அரசியல்வாதிகள் பணம்
சம்பாதித்து வருகின்றனர். வட,
கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை
அமைக்க திட்டமிட்டுள்ளதுடன்,
நிலங்களும் சூறையாடப்பட்டு வருகிறது
என்றும் தெரிவித்தார்.
பரந்துபட்ட பொருளாதார
பங்குடமை உடன்படிக்கையை இந்தியாவுடன்
துரிதமாக மேற்கொள்ள சம்பந்தன்
வலியுறுத்தல்.
வெளிநாட்டு பகைமையை வெளிப்படுத்துவதே
சில சக்திகளின் அரசியல்' இலங்கை
மக்களின் ஒருபகுதியினரின்
வெளிநாட்டினர் மீதான, அதிலும் இந்தியா
மீதான வெறுப்புணர்வு காரணமாக இலங்கை
பல நன்மைகளை இழந்து விடுகின்றதெனத்
தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன்,
வெளிநாட்டுப் பகையுணர்வை வைத்தே சில
சக்திகள் அரசியல் செய்ய
முற்படுவதாகவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று
செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற
இந்தியஇலங்கை அரசுகளுக்கிடையிலான சீபா
ஒப்பந்தம் தொடர்பான சபை ஒத்திவைப்பு
பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு
தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
பரந்துபட்ட பொருளாதார பங்குடமை
ஒப்பந்தம் சீபா தொடர்பாக குறுகிய மனம்
படைத்தவர்களின் வெறுப்புணர்வுக்
கூச்சல்களை கவனத்தில் எடுக்காது
இலங்கைக்கும் இலங்கை
பொருளாதாரத்துக்கும் பல நன்மைகளை
தரக்கூடிய இந்த ஒப்பந்தத்தை
கைச்சாத்திட அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும். இல்லாவிட்டால் நாம் பல
நன்மைகளையும் வேலை வாய்ப்புகளையும்
பொருளாதார வளர்ச்சிகளையும் இழக்க
வேண்டி வரும்.
சார்க் மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர்
வந்திருந்த போதே இந்த சீபா ஒப்பந்தம்
கைச்சாத்திட்டுருக்கப்படவேண்டும்.
ஆனால், இங்கு எழுந்த எதிர்ப்புக்
குரல்களால் அது கைச்சாத்திடப்படவில்லை.
வெளிநாட்டினர் மீதான குரோத
எண்ணங்களையும், வெறுப்புணர்வுகளையும்
இங்கு சிலர் வளர்த்து விடுகின்றனர்.
இங்குள்ள குறிப்பிட்டளவிலான மக்களின்
மனதில் வெளிநாட்டவர்கள் தொடர்பில்
இவ்வாறான உணர்வுகள் ஏற்பட்டுள்ளன.
பலநாடுகள் இந்தியாவுடன் பொருளாதார
பங்குடமை செய்துகொள்ள விரும்புகின்றன.
இந்த நாடுகளிடையே இந்தியாவுடன்
ஒப்பந்தங்கள் செய்து கொள்வதில்
போட்டித்தன்மை கூட ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம் இந்தியா சகல வழிகளிலும்
முன்னேறி வருகின்றது, தகவல்
தொழில்நுட்ப துறையில் முதலிடத்தில்
உள்ளது.
இந்தியாவின் அசுர வளர்ச்சியால்
இந்தியாவில் வறிய மக்களின் எண்ணிக்கை
வீதம் குறைவடைந்து வருகின்றது.
விஞ்ஞான தொழில்நுட்ப, தகவல்துறைகளில்
இந்தியா வளர்ச்சி கண்டு வருகின்றது.
அந்நாட்டின் பொருளாதாரம்
சக்திமிக்கதாக மாறிவருகின்றது. இதனால்,
பலநாடுகள் அந்த நாட்டுடன் ஒப்பந்தம்
செய்ய போட்டிபோடுகின்றன.
ஆனால், இலங்கையில் குறுகிய மனம்
படைத்தவர்களால் முன்னெடுக்கப்படும்
வெளிநாட்டினர் மீதான
எதிர்ப்புணர்வினால் அதிலும் குறிப்பாக
இந்தியா மீதான வெறுப்புணர்வினால் பல
அரிய சந்தர்ப்பங்கள், ஒப்பந்தங்கள்
இல்லாமலாக்கப் படுகின்றன.
இலங்கையின் "தம்ரோ' கம்பனியின்
உற்பத்திப் பொருட்கள் இந்தியாவின் மூலை
முடுக்கெல்லாம் காணப்படுகின்றன.
இதற்காக நாம் இந்தியாவிற்கு நன்றி
சொல்லவேண்டும்.
இங்கே சிலர் இந்தியாவுடன் வெறுப்பை
ஏற்படுத்த வேண்டுமென்பதில்
முனைப்புகாட்டி நிற்கின்றனர். இந்தியா
தொடர்பாக கூச்சலிடுகின்றனர். இதனை
கருத்தில் எடுக்காது அரசு இந்தியாவுடன்
ஒப்பந்தங்களை செய்யவேண்டும். இந்த
வாய்ப்பை நாம் தவற விடக்கூடாது.
நவீன காலத்தில் வாழவேண்டியவர்கள்
கற்காலத்தை நோக்கிச் செல்ல
முற்படுகின்றனர். ஏனைய நாடுகளோடு
சேர்ந்து நாமும் அபிவிருத்தியடைய
இங்குள்ள சில சக்திகளுக்கு
விருப்பமில்லை. அதனாலேயே
வெறுப்புணர்வுகளை தூண்டி விடுகின்றன.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால்
பல நன்மைகள் எமக்கு கிடைக்கும். இதன்
மூலம் அதிக வேலை வாய்ப்புகள்
கிடைக்கும். எமது திறன்களை விருத்தி
செய்யலாம். இந்தியாவில்
மூலதனமிடக்கூடிய நிலை ஏற்படும். பல
விதங்களில் நன்மை உண்டு.
குறுகிய மனம் படைத்தவர்களின்
கூச்சல்களை கவனத்திலெடுக்காது இந்த
ஒப்பந்தத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும். நாம் இந்த வாய்ப்பை
இழந்து விடக்கூடாது.
பாராளுமன்றத்தைப்
பார்வையிட்ட தெற்காசிய தலைவர்களுக்கு
வியப்பு
சபாநாயகர் கூறுகிறார்.
இலங்கைப் பாராளுமன்றத்தைப் பார்த்து
சார்க் நாடுகளின் தலைவர்கள்
வியப்படைந்ததுடன், அதன் அழகு குறித்து
தமது மகிழ்ச்சியையும்
வெளிப்படுத்தியதாக சபாநாயகர்
டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார
தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று
செவ்வாய்க்கிழமை சார்க் மாநாடு
தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட நேரத்திலேயே
இவ்வாறு தெரிவித்த சபாநாயகர் மேலும்
கூறுகையில்;
சார்க் நாடுகளின் தலைவர்கள் கடந்த
ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்திற்கு
வந்தார்கள். அவர்கள் இந்தப்
பாராளுமன்றத்தின் அழகைப் பார்த்து
வியந்து போனார்கள். அது தொடர்பில்
ஒவ்வொரு தலைவர்களும் தமது மகிழ்ச்சியை
தெரிவித்துக்கொண்டனர்.
அதேவேளை, அன்றைய தினம் விடுமுறை
நாளாகவிருந்தபோதும் பாராளுமன்றத்தில்
கடமையிலீடுபட்டிருந்த அனைவருக்கும்
நான் நன்றி கூறுகின்றேன். சார்க்
மாநாடு சிறப்பாக நடந்ததையிட்டும் எனது
மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சில குறைபாடுகள் இருந்திருக்கலாம்.
அதனைப் பெரிதுபடுத்தக்கூடாது என்றார்.
அப்போது எழுந்த ரவி கருணாநாயக்க எம்.பி.,
சார்க் நாடுகளின் தலைவர்கள்
பாராளுமன்றத்திற்கு வந்ததால் நான் எனது
வீட்டுக்குக் கூட செல்ல முடியவில்லை.
அந்தளவுக்கு சகல வீதிகளையும்
மூடிவிட்டனர் என்றார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர்,
என்னசெய்வது பாராளுமன்றத்திற்கருகில்
வீட்டை வைத்திருந்தால் சில பாதுகாப்பு
கெடுபிடிகளும் இருக்கத்தான் செய்யும்
என்றார்.
இதன்போது குறுக்கிட்ட ஐ.தே.க. எம்.பி.
தயாசிறி ஜயசேகர, பாராளுமன்றத்தைப்
பார்த்தது மட்டுமல்ல இந்தியப் பிரதமர்
மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு
ஆலோசகர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட
பாதுகாப்பு குறித்தும் சார்க்
தலைவர்கள் வியப்படைந்திருப்பார்கள்
என்றார்.
அரிசி மொத்த விலை கிலோ
50 ரூபா விநியோகிக்க அரசாங்கம் திட்டம்
குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை
நிலையங்களுக்கு 50 ரூபா விலையில்
மொத்தமாக அரிசியை விநியோகிக்கவென,
மியன்மாரில் இருந்து வெள்ளை அரிசியை
இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக
சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டுறவு
அமைச்சர் பந்துல குணவர்த்தன
தெரிவித்துள்ளார்.
இந்த அரிசி இறக்குமதிக்கான
தீர்மானத்தினை, வாழ்க்கை செலவினம்
மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான
அமைச்சரவை உப குழு
மேற்கொண்டுள்ளதாகவும் அவர்
கூறியுள்ளார்.
ஒரு கிலோகிராம் 50 ரூபா விலை
அடிப்படையில் விநியோகிக்கப்படவுள்ள
இந்த அரிசி தொடர்பாக அமைச்சர் மேலும்
கூறுகையில், இந்த அரிசியை நாரஹேன்
பிட்டியிலுள்ள அரச மொத்த விற்பனை
நிலையத்தில் மொத்தமாகவும்,
சில்லறையாகவும் கொள்வனவு செய்ய
விரும்புவோர் எந்தவொரு கூட்டுறவு
கடைகள் மற்றும் சதொச நிலையங்களிலும்
இவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஏற்கனவே ஒரு கிலோ சிவப்பு மற்றும்
வெள்ளை அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை
55 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் வராங்களில் இவற்றின்
விலைகள் குறைவடையவுள்ளன.
அரசாங்கம் அரிசியின் விலைகளை
கட்டுப்படுத்த முயற்சிகளை
மேற்கொண்டதிலிருந்து,கறுப்பு சந்தை
விலையில் அரிசி விற்பனை
செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.