|
வடக்கு கிழக்கு மக்களின்
சிதைந்த வாழ்வாதாராங்களைக் கட்டியெழுப்புவேன்!
பாராளுமன்ற கன்னி உரையில் கருணா
அம்மான்.
கடந்த 22 வருடங்களாக
பாதிக்கப்பட்டிருக்கும் எமது வடக்கு
மற்றும் கிழக்கு மக்களின் சிதைந்த
வாழ்வாதாரங்களைக்
கட்டியெழுப்புவதற்காக எனக்கு
வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்
பதவியைப் பயன்படுத்தி சகல
நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என
விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா
அம்மான்) இன்று பாராளுமன்றத்தில்
ஆற்றிய கன்னி உரையில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்
தேசியப் பட்டியல் உறுப்பினராக இன்று
பாராளுமன்றத்தில் சபாநாயகர்
முன்னிலையில் பதவியேற்றதையடுத்து
ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு
கூறினார். இங்கு அவர் மேலும்
கூறியதாவது.
பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும்
இந்தப் பதவியை எனக்குத் தந்தமைக்கு
ஜனாதிபதிக்கு நான் நன்றி சொல்லக்
கடமைப்பட்டுள்ளேன். இப்பதவி எனக்கு
மட்டும் வழங்கப்பட்ட ஒன்றாக நான்
கருதவில்லை. தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி
வழங்கியுள்ள கௌரவத்தையே இப்பதவி
பிரதிபலிக்கிறது. தமிழ் மக்கள்
பயங்கரவாதத்தை நிராகரித்து பாராளுமன்ற
ஜனநாயகம் தொடர்பில் நம்பிக்கை
வைத்துள்ளனர்.
கடந்த காலங்களில் நடந்த கசப்பான
சம்பவங்களை மறந்து அனைவரும்
ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தமிழ்
மக்களின் உரிமைகளைப்
பெற்றுக்கொடுக்கும் முழுப் பொறுப்iயும்
ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் வாழும்
அனைத்து இன மக்களும் சகோதரத்துவத்துடன்
வாழக்கூடிய சூழ்நிலையை ஜனாதிபதி
ஏற்படுத்தியுள்ளார் என்றும் கூறினார்.
இதேவேளை ஊடகங்களுக்கு கருத்துத்
தெரிவித்த அவர்لل கிழக்கு மாகாணம்
புலிகளிடமிருந்து மீட்கப்பட்டு அங்கு
மாகாண சபை நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு
சிறந்த முறையில் முன்னேற்றம் கண்டு
வருகிறது. யுத்தம் காரணமாக கடந்த 2
தசாப்தங்களாக கிழக்கில் எந்தவித
அபிவிருத்திப் பணிகளும்
மேற்கொள்ளப்படவில்லை. கிழக்கு
மாகாணத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு
வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை
தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ஏனைய
கட்சிகளும் சர்வதேச சமூகமும்
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஜனாதிபதியின் அடுத்த கட்ட
நடவடிக்கையான வடக்கை மீட்கும் பணிகள்
தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது.
மிகவும் பலவீனமான நிலையில் புலிகள்
இருப்பதால் கிளிநொச்சி நகரம் இன்றும்
ஓரிரு நாட்களுக்குள் கைப்பற்றப்படும்
நிலைமை காணப்படுகிறது.
புலிகள் தங்களைப்
பாதுகாத்துக்கொள்வதற்காக அங்குள்ள
அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாகப்
பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச
சமூகங்கள் இந்த விடயத்தில் தலையிட்டு
புலிகளுக்கு அழுத்தங்களைக் கொடுத்து
அந்த மக்களை மீட்டெடுப்பதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வன்னிச்சமரின் வெற்றி அங்குள்ள
மக்களைப் பாதிப்புக்கள் எதுவுமின்றி
மீட்டெடுப்பதில்தான் தங்கியிருக்கிறது
என்பதை நாம் அரசுக்குத் தெளிவுபடுத்தி
இருக்கிறோம். அந்த வகையில் தற்போது
இராணுவத்தினரால் யுத்தமற்ற பிரேதசங்கள்
பிரகடனப்படுத்தப்பட்டிருப்பது
மகிழ்ச்சிக்குரியதாகும். ஏனெனில்
மக்கள் அப்பிரதேசங்களுக்குச் சென்று
நிம்மதியாக இருக்கக்கூடிய சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது என்றும் அவர்
தெரிவித்தார்.
 |