|
2008.10.06 ம் திகதி
கொழும்பு சுவசிறிபாயவில் நடைபெற்ற
சர்வதேச வயோதிபர் தின வைபவத்தில்
பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சமூக
சேவைகள் மற்றும் சமூக நலத்துறை
அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா
அவர்கள் ஆற்றிய சிறப்புரை.
சர்வதேச
வயோதிபர்களுக்கான தினத்தை
அனுஷ்டிக்கும் மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்த இச்சந்தர்ப்பத்தில் ஒருசில
வார்த்தைகளைக் கூற வாய்ப்பு
கிட்டியதையிட்டு நான் மிகுந்த
மகிழ்ச்சி அடைகின்றேன். உலகில் உள்ள
அனைத்து சிறிய, பெரிய நாடுகளிலும்
வயோதிபர்களது ஜனத்தொகை அதிகரித்து
வருகின்றமையைக் காணக்கூடியதாகவுள்ள
இக்கால கட்டத்தில் 21ம் நூற்றாண்டில்
வயோதிப பருவத்தின் சவால்களுக்கு
முகங்கொடுத்தல் என்ற தொனிப் பொருளின்
கீழ் இவ்வருட சர்வதேச
வயோதிபர்களுக்கான தினம்
அனுஷ்டிக்கப்படுவது காலச்சிறந்ததாகும்.
இன்னும் சில தசாப்தங்களுள் எமது
ஜனத்தொகையில் வயோதிப பருவத்தினரின்
தொகை அதிகரித்து வருவது காரணமாக
முகங்கொடுக்க வேண்டியுள்ள சவால்கள்
ஏனைய அனைத்து பிரச்சினைகளையும் விட
பாரியளவிலான பிரச்சினைகளாகிவிடும்.
இதனால் அனுபவத்தில் காணக்கூடிய சமூக
மற்றும் பொருளாதார எதிர்விளைவுகளும்
அதிகளவைக் கொண்டிருக்கும்.
2000ம் வருடம் முதல் 2050ம் வருடம்
வரையிலான காலப் பகுதியினுள் 60
வயத்திற்குக் கூடிய வயோதிப
பருவத்தினரின் ஜனத்தொகை 10
வீதத்திலிருந்து 21 வீதம் வரை இரு
மடங்காகும் என உலக புள்ளிவிபரத்
தகவல்கள் தெரிவிக்கின்றன. 2002ம்
வருடத்தில் உலக வயோதிபர்களின்
ஜனத்தொகையில் சுமார் 52 வீதத்தினர்
ஆசியா மற்றும் பசுபிக் கண்டங்களில்
வாழ்ந்துள்ளனர் எனவும் இந்த
விகிதாசாரமானது 2025ம் வருடமாகும் போது
59 வீதம் வரையிலான அளவில்
அதிரிகரிக்கும் என்றும்
தெரிவிக்கப்படுகிறது. உலகில் வயோதிப
பருவத்தை அடையும் மக்களில் கூடிய
விகிதாசாரத்தைக் கொண்ட கண்டங்கள்
மேற்படி கண்டங்கள் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் மிகுந்த அவதானத்தைப் பெற
வேண்டிய விடயம் என்பதால் அரசாங்கம்
இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகிறது.
ஜனத்தொகையில் வயதெல்லைகளின் வேகமான
வளர்ச்சி காரணமாக முகங்கொடுக்க
வேண்டிய சமூக மற்றும் பொருளாதார நன்மை,
தீமைகளைக் கவனத்தில் கொண்டு
வயோதிபர்களுக்கும் அவர்களது
குடும்பத்தினருக்கும் தேவையான நலன்புரி
வசதிகளை வழங்குவதற்கான கொள்கையை
வகுப்பது மற்றும் வேலைத்திட்டங்கiளை
முன்னெடுத்துச் செல்வதற்கு உந்து சக்தி
வழங்குவது போன்ற செயற்பாடுகளை
மேற்கொள்ள அரசுக்கு நேரிட்டுள்ளது.
தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லக்
கூடிய சமூகப் பாதுகாப்பு, வருமான
வழிவகை, சுகாதார வசதிகள் உட்பட்ட
வலையமைப்பினை ஒழுங்குபடுத்துவது
சிரேஷ்ட பிரஜைகளுக்கு பெற்றுக்
கொடுக்கக் கூடிய பல்வேறு பணிகளில் ஒரு
சிலவாகும்.
மறுபக்கத்தில் பார்க்கும் போது
வயோதிபர்கள் வசமுள்ள பாரியளவிலான
அனுபவங்கள், அறிவு ஞானம், புத்திக்
கூர்மை என்பன பயன்படுத்தப்படாமல்
பின்தள்ளப்பட்டுள்ளன. இந்த செல்வங்களை
சமூகத்தின் வளர்ச்சிக்காக
பயன்படுத்திக் கொள்வதற்கு அதற்கான
வாய்ப்புக்களை வயோதிபர்களுக்கு வழங்க
வேண்டும்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களது
மஹிந்த சிந்தனையில் சிரேஷ்ட
பிரஜைகளுக்கென குறிப்பிடப்பட்டுள்ள,
விஷேட அவதானம் செலுத்தப்படக் கூடிய
பல்வேறு வசதிகள் தற்போது
செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்
பிரகாரம் வயோதிபர்களது ஓய்வூதியம்
தொடர்பான முறைகேடுகள்
சீர்செய்யப்பட்டுள்ளது 70 வயதுக்குக்
கூடிய வயோதிபர்களுக்கு
பொதுபோக்குவரத்துக் கட்டணங்களில் 50
வீதத்தை மாத்திரமே அறவிடுவதற்கும்,
வருடந்தோறும் புண்ணிய ஸ்தலங்களைத்
தரிசிக்கச் செல்வதற்கு இலவசமாக
புகையிரத பயணச் சீட்டு வழங்குவதற்கும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவற்றைத் தவிர பல்வேறு வகையிலான
நலன்புரி வசதிகள் வயோதிப மக்கள்
பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமூக சேவைகள்
மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் கீழ்
செயற்பட்டு வருகின்ற தேசிய
முதியோர்களுக்கான செயலகம் மற்றும்
தேசிய முதியோர்களுக்கான கவுன்சில்
என்பன மூலம் மேற்படி நலன்புரி சார்ந்த
செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எம்மால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும்
வயோதிபர் நலன்புரி சார்ந்த
செயற்பாடுகள் சிலவற்றை தங்கள்
முன்வைக்கின்றேன்.
70 வயதுக்குக் கூடிய, எந்தவொரு
வருமானமும் ஈட்டாத சிரேஷ்ட பிரஜைகளில்
நான்கு பேரினை ஒவ்வொரு மாவட்டங்களில்
இருந்தும் தெரிவு செய்து அவர்களுக்கு
ஓய்வூதியம் வழங்கும் விஷேட
வேலைத்திட்டமொன்று கடந்த வருடம் முதல்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில்
இந்த ஓய்வூதியத்தை கூடுதலான வயோதிப
மக்களுக்கு வழங்கும் முகமாக
இவ்வேலைத்திட்டம்
விஸ்தரிக்கப்படவுள்ளது.
கவனிப்பாரற்றுக் கைவிடப்பட்ட சிரேஸ்ட
பிரஜைகளுக்கு பராமரிப்பு சேவை ஒன்று
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இச்சேவையை
மாகாண மட்டங்களில் செயற்படுத்துவதற்கு
எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளால் கவனிக்கப் பெறாத
பெற்றோர்களது பராமரிப்பிற்கென வயோதிபர்
உரிமை தொடர்பான கட்டளைச் சட்டத்தின்
பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'வயோதிபர்
பராமரிப்புச் சபை' எம்மால்
செயற்படுத்தப்பட்டுள்ள மேலுமொரு சமூகப்
பணியாகும். இந்தச் சபையானது
பெற்றோர்களால் முன்வைக்கப்படுகின்ற
முறைபாடுகளின் பிரகாரம், இவர்களை
பராமரிக்கும் பொறுப்பினைப்
புறக்கணிக்கும் பிள்ளைகள் தொடர்பிலான
தகவல்களை ஆராய்ந்து
கவனிப்பாரற்றிருக்கும் பெற்றோர்களுக்கு
நிவாரணங்களை வழங்கி வருகின்றது.
பொது கட்டிடங்கள், இடங்கள் மற்றும்
சேவைகளுக்கான பிரவேச வசதிகளை
அங்கவீனமான நபர்களுக்கும்
வயோதிபர்களுக்கும் வழங்குவது தொடர்பில்
எமது அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது. இதன் பிரகாரம்
இவ்வசதிகள் பல செய்து கொடுக்கப்பட்டும்
உள்ளன.
தற்போது சிரேஷ்ட பிரஜைகள் குழுக்கள்
நாடளாவிய ரீதியில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறான
10,000க்கும் அதிகமான கிராமிய பிரஜைகள்
குழுக்கள் தற்போது செயற்பட்டும்
வருகின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள
வசதிகள் மற்றும் சேவைகள், வயோதிப
மக்களுக்காக எமது அமைச்சின் மூலம்
வழங்கப்பட்டுள்ள பல்வேறு பணிகளில் ஒரு
சிலவாகும். எதிர்காலத்தில் '21வது
நூற்றாண்டில் வயோதிப பருவத்தின்
சவால்களுக்கு முகங்கொடுத்தலுக்காக
மென்மேலும் பல்வேறு வேலைத்திட்டங்களை
செயற்படுத்துவதற்கு
எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறு
இந்நாட்டில் உள்ள அனைத்து
பிரஜைகளுக்கும் உயரிய சுகாதாரத்துடன்
கூடிய நீண்டகால வாழ்க்கையை
மேற்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
வயோதிப மக்களின் நலன்கள் கருதியும்
அவர்களை இந்நாட்டு அபிவிருத்திப்
பணிகளில் பங்காளர்களாக ஆக்கிக்
கொள்வதற்கும் மேற்கொள்ளப்படுகின்ற
இந்த முயற்சிக்கு எங்களுடன் இணைந்து
கொள்ளுமாறு அனைத்து சர்வதேச மற்றும்
தேசிய அரச சார்பற்ற நிறுவனங்களையும்
கேட்டுக் கொள்கின்றேன். எமது வயோதிப
மக்களுக்கு சமாதானமும் சௌபாக்கியமும்
நிறைந்த எதிhகாலம் உருவாகட்டும் என
வேண்டி எனது உரையை முடித்துக்
கொள்கின்றேன்.
நன்றி |
|
|
|