அகோர
ஷெல், விமானத் தாக்குதல் அதிகரிப்பால்
கிளிநொச்சியிலிருந்து மீண்டும் மக்கள்
இடம்பெயர்ந்து வருகின்றனர்.
வன்னியில் கடும் ஷெல், விமானத்
தாக்குதலால் கிளிநொச்சிப்
பகுதியிலிருந்து மக்கள் தொடர்ந்தும்
இடம்பெயர்ந்தவாறுள்ளனர் கிளிநொச்சி
நகர்ப் பகுதிகளிலும் அதனையண்டிய
பகுதிகளிலும் இடம்பெயராமலிருந்த
மக்களும் தற்போது இடம்பெயர்ந்து
வருகின்றனர்.
கிளிநொச்சி நகர வணிக நிலையங்களும்
தங்கள் பொருட்கள் மற்றும் உடைமைளை
அப்புறப்படுத்தி வருகின்றன.
கிளிநொச்சியில் இயங்கும் அரச
வங்கிகளும் தங்கள் உடைமைகளை தர்மபுரம்
போன்ற பகுதிகளுக்கு அப்புறப்படுத்தி
வருகின்றன.
கிளிநொச்சி மாவட்ட அரச செயலகம் மற்றும்
அரச திணைக்களங்களும் தங்களின்
முக்கியமான ஆவணங்கள், உடைமைகளை
வேறுபகுதிகளுக்கு அப்புறப்படுத்தி
வருகின்றன.
கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவது
குறித்து படைத் தரப்பு தெரிவித்து
வரும் காலக்கெடு, அறிவிப்புகளினால்
ஏற்பட்ட அச்சமும், கிளிநொச்சி நகர்ப்
பகுதியிலும் அதனை அண்டிய பகுதியிலும்
படையினரின் ஷெல்கள் வந்து
விழுகின்றமையும் கடும் விமானத்
தாக்குதலுமே இதற்குக் காரணமாகும்.
இதற்கிடையில் கடந்த வாரம் தொடக்கம்
இயங்கத் தொடங்கிய கிளிநொச்சி நகர்ப்
பகுதி பாடசாலைகள் தொடர்ந்து இயங்க
முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
படையினரின் ஷெல் வீச்சினால்
கிளிநொச்சியிலிருந்து மக்கள்
இடம்பெயர்ந்து கொண்டிருந்த நிலையில்
இப்பாடசாலைகள் ஒருவாரம் இயங்கவில்லை.
பின்னர் கடந்த வாரம்
திங்கட்கிழமையிலிருந்து இயங்கத்
தொடங்கியது. மாணவர்களின் வரவும் சிறிது
சிறிதாக அதிகரித்தது.
தற்போது மீண்டும் கிளிநொச்சியிலிருந்து
மக்கள் அதிகளவில் வெளியேறி வருவதால்
மாணவர்களின் வரவில்லாத நிலையில்
இப்பாடசாலை வேறு பகுதிகளுக்கு
மாற்றுவது தொடர்பாக பாடசாலை
நிர்வாகிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றன.
தர்மபுரம், விசுவமடுப் பகுதிகளில்
கிளிநொச்சி நகரை அண்டிய மக்கள்
அதிகளவில் இடம்பெயர்ந்து
தங்கியிருப்பதால் தர்மபுரம் பகுதிக்கு
இப்பாடசாலைகளை நகர்த்திச் செல்வது
தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
ராடார் வசதியுடன்
நவீனமயப்படுத்தப்பட்டு நெடுந்தீவில்
புதிய கடற்படை முகாம்
புனரமைக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
நெடுந்தீவு கடற்படை
முகாம் நவீன வசதிகளுடன் மீளப்
புனரமைக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது. இவ்வருட
முற்பகுதியில் நெடுந்தீவு கடற்படை
முகாம் விடுதலைப் புலிகளினால் தாக்கி
அழிக்கப்பட்டு அங்கிருந்த நவீன
ராடார்களும் அவர்களால்
கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மிக நீண்ட நாட்களின்
பின் நெடுந்தீவு கடற்படை முகாம் மிக
நவீன வசதிகளுடன் மீளப்
புனரமைக்கப்பட்டுள்ளதாக விடயமறிந்த
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய புதிய ராடார்கள் மற்றும்
நவீன உபகரணங்களுடன் நெடுந்தீவு கடற்படை
முகாம் நவீன மயப்படுத்தப்பட்டு கடந்த
திங்கட்கிழமை திறக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் வட பிராந்தியத்தை
சேர்ந்த கடற்படையின் சிரேஷ்ட
அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
எனினும் இந்தக் கடற்படை முகாமின்
முன்னாள் பொறுப்பதிகாரி மாற்றப்பட்டு
புதிதாக நியமிக்கப்பட்டவர் அன்றைய
தினம் கடமையைப் பொறுப்பேற்றுக்
கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளால் தாக்கி அழிக்கப்பட்ட பின்னர்
இந்தக் கடற்படை முகாம் வேறு கடற்படை
முகாம்களிலிருந்து வந்த கடற்படையினரின்
உதவியுடன் இயங்கி வந்ததாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
முன்னர் இருந்த இடத்திலேயே புதிய
முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள
முகாமில் பொருத்தப்பட்டுள்ள ராடாரானது
புலிகளின் பகுதிக்கும்
இந்தியாவுக்குமிடையிலான படகுகள்
மற்றும் கப்பல் போக்குவரத்துக்களை
கண்டு பிடிக்கக் கூடியவையெனவும்
தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வன்னிப் பிரதேசத்தில்
யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள
மக்களுக்கு
60 லொறிகளில் உணவுப்
பொருட்கள் ஐ.நா. கொடியுடன் செல்ல
ஏற்பாடு.
வன்னிப் பிரதேசத்தில் யுத்தத்தால்
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு
அத்தியாவசிய பொருட்களை
அனுப்பிவைப்பதற்கு உரிய ஏற்பாடுகள்
வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. கோதுமை மா, சீனி, பருப்பு
வகைகள், கருவாடு, சமையல் எண்ணெய்
போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வவுனியா
தேக்கம்காடு உணவுக் களஞ்சியத்தில்
இருந்து தற்போது லொறிகளில் ஏற்றப்பட்டு
வருகின்றன.
உலக உணவுத் தாபனத்தின் இருபது
லொறிகளிலும் வாடகைக்கு அமர்த்தப்பட்ட
நாற்பது லொறிகளிலும் இப்பொருட்கள்
ஏற்றப்படுகின்றன.
செவ்வாய்க்கிழமை மாலை வரையும்
இருபத்தைந்து லொறிகளில் அத்தியாவசிய
உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன.
படையினரின் மேற்பார்வையின் கீழ்
இப்பொருட்கள் லொறிகளில் ஏற்றப்பட்டு
அவை சீல் வைக்கப்படுகின்றன. அதன்
பின்னர் உலக உணவு ஸ்தாபன களஞ்சிய
வளவில் லொறிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
வன்னிப் பகுதிக்கு அத்தியாவசிய உணவுப்
பொருட்களை அனுப்புவது தொடர்பாக
கொழும்பில் திங்கட்கிழமை நடைபெற்ற
உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட
முடிவின் படி லொறிகளில் இப் பொருட்கள்
ஏற்றப்படுகின்றன.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிக்
கொண்டு அறுபது லொறிகள் ஐக்கிய நாடுகள்
கொடியுடன் வவுனியாவில் இருந்து இன்று
வியாழக்கிழமை வன்னிக்குப் புறுப்பட்டு
செல்லவுள்ளன என மீள் குடியேற்ற
அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாட்
பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இந்த உணவு லொறிகளின் தொடரணியுடன்
மாவட்ட அரச அதிபரின் பிரதிநிதிகளும்
கூடவே செல்வார்கள்.
முன் கூட்டியே படையினரின்
கண்காணிப்பில் லொறிகளில் உணவுப்
பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளதால் ஓமந்தை
சோதனைச் சாவடியில் படையினர் அவற்றை
சோதனையிடமாட்டார்கள் என வவுனியாவில்
உள்ள கிளிநொச்சி இணைப்பு செயலகம்
தெரிவித்துள்ளது.
வன்னியில்
எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு
டீசல் ஆயிரம்
ரூபாவுக்கும் மேல் விற்பனை
செய்யப்படுகிறது.
வன்னியில் எரிபொருட்களுக்கு பெரும்
தட்டுப்பாடு நிலவுகின்றது. தற்போது
வன்னிப் பகுதிகளிலுள்ள சில தனியார்
கடைகளில் மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 300
ரூபாவிற்கும் பெற்றோல் 2 ஆயிரம்
ரூபாவிற்கும் டீசல் ஆயிரம்
ரூபாவுக்கும் மேல் விற்பனை
செய்யப்படுகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக
கிளிநொச்சிப் பகுதிகளிலிருந்து
இடம்பெயரும் மக்கள் தங்கள் வீட்டுப்
பொருட்களை வாகனங்களில் ஏற்றிச்
செல்வதற்கு மிக அதிகமான பணத்தைச்
செலவளிக்க வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளதோடு இடம்பெயர்ந்து பல
இடர்களுக்கு மத்தியில் தங்கியுள்ள
மக்கள் இரவு வேளைகளில் விளக்கெரிக்க
முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
வன்னிக்கான எரிபொருள் விநியோகம் சீரான
முறையில் வந்து சேராமையினாலேயே இந்தத்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வன்னியில் சர்வதேச தொண்டர்
அமைப்புகளின் கூரைகள், சுவர்களிலுள்ள
சின்னங்கள் அழிப்பு.
வன்னியிலிருந்து
வெளியேறியுள்ள சர்வதேச தொண்டர்
அமைப்புகளின் சின்னங்கள் அழிக்கப்பட்டு
வருவதாக வன்னித் தகவல்கள்
தெரிவிக்கின்றன. அரசின் கடும்
உத்தரவுக்கமைய வன்னியிலிருந்து அனைத்து
சர்வதேச மற்றும் உள்ளூர் தொண்டர்
அமைப்புகள் அண்மையில் வெளியேறின.
இந்த நிலையில் அங்கிருந்து வெளியேறிய
சர்வதேச அமைப்புகளின் அலுவலகங்களில்
பொறிக்கப்பட்டிருந்த சின்னங்கள்
அழிக்கப்பட்டு வருகின்றன.
அந்தந்த நிறுவனங்களின் உத்தரவுக்கமையவே
அவற்றின் அலுவலகக் கூரைகள் மற்றும்
கட்டிடச் சுவர்களில் பூசப்பட்டிருந்த
சின்னங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. அமைப்புகளின்
அலுவலகங்களில் கூரைகளிலும் கட்டிடச்
சுவர்களிலும் பொறிக்கப்பட்டிருந்த
சின்னங்களே அழிக்கப்பட்டு வருகின்றன.
தங்கள் கொழும்புத் தலைமையகத்தின்
உத்தரவின் பேரிலேயே இந்தச் சின்னங்கள்
அழிக்கப்பட்டு வருவதாக அதன் உள்ளூர்
பணியாளர்கள் தெரிவித்தனர்.
வன்னியிலிருந்து கடந்த 29 ஆம்
திகதிக்கு இடையில் அனைத்து சர்வதேச
மற்றும் உள்ளூர் தொண்டர் அமைப்புகள்
வெளியேறிவிட வேண்டுமென்ற
உத்தரவையடுத்து அனைத்து அமைப்புகளும்
அங்கிருந்து முற்றாக வெளியேறி
விட்டதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்.குடாநாட்டின்
தற்போதைய சூழ்நிலையைப்
பார்வையிடுவதற்காக
விசேட குழு விஜயம்.
யாழ்.குடாநாட்டின் தற்போதைய
சூழ்நிலையைப் பார்வையிடுவதற்காக
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட குழு
ஒன்று அங்கு சென்றுள்ளது.
ஐ.நா.சபையின்
பிரதி உயர்ஸ்தானிகர் தலைமையிலான
இக்குழு யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி
மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியுடன்
சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளது.
இச்சந்திப்பின் போது யாழ்.குடாநாட்டின்
பாதுகாப்பு நிலைவரம், பொதுமக்கள்
விவகாரம் தொடர்பாக
கலந்தாலோசிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர்
மார்க் குடிங், மனிதாபிமான ஆலோசகர்
நீல் பெரி, அரசியல் துறை அதிகாரி
மினிலன்கோ தெய்வேந்திரன் உள்ளிட்ட
பிரதிநிதிகள் குழுவே யாழ்ப்பாணத்திற்கு
விஜயம் மேற்கொண்டுள்ளது.
கதிர்காம கந்தன் ஆலயத்துக்கு பக்தர்கள்
வழமை போல வந்து போகின்றனர் ஆலய
நிர்வாகம் தெரிவித்தது.
கதிர்காம கந்தன்
ஆலயத்துக்கு பக்தர்கள் வழமை போல வந்து
போகின்றனர் எனவும் தூர இடங்களில்
இருந்து பஸ் சேவைகளும் நடைபெறுகின்றன
எனவும் ஆலய நிர்வாகம் தெரிவித்தது.
யால தேசிய வனத்தில் சில தினங்களுக்கு
முன்னர் இடம்பெற்ற படையினர் மீதான
தாக்குதல் சம்பவத்தின் பின்னர்
இப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கதிர்காமம் பகுதியில் பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள்
எதுவித அச்சமுமின்றி வந்து போகலாம்
எனவும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வன்னிப்பகுதியில் இடம்பெற்றுவரும்
கடும் போரினால் இடம்பெயர்ந்து
அல்லல்படுகின்ற மக்களுக்கு உதவ
18 இலட்சம் ரூபா சேகரிப்பு.
வன்னிப்பகுதியில்
இடம்பெற்றுவரும் கடும் போரினால்
இடம்பெயர்ந்து அல்லல்படுகின்ற
மக்களுக்கு உதவுவதற்காக 18 இலட்சம்
ரூபா நிதி யாழ்ப்பாண மறை மாவட்ட
கத்தோலிக்க மக்களால் பங்குகள் ரீதியில்
சேகரிக்கப்பட்டுள்ளது.
யாழ். மறை மாவட்ட நீதி
சமாதான ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை
தொடர்ந்து இந்த நிதி சேகரிப்பட்டு
வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த உதவிக்கு கத்தோலிக்க மக்கள்
மட்டுமன்றி இந்து சகோதரர்களும்
தனிப்பட்ட பலரும் தங்களால் இயன்ற
பங்களிப்பை வழங்கியுள்ளன.
இப்பணிக்கு உதவிய சகலருக்கும் யாழ்.
மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு
நன்றி தெரிவித்துள்ளது.
வன்னியில் துன்புறும் மக்களின் நலன்களை
கவனிக்கும் துறவிகள், குருக்கள் மூலம்
இந்த நிதி அவர்களுக்கு
பயன்படுத்தப்படும்.
தாய்சேய் சுகாதார நலப் பணிகளுக்காக
யுனிசெவ் 18வாகனங்கள் அன்பளிப்பாக
வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள்
சிறுவர் நிதியம், தாய்சேய் சுகாதாரத்தை
விருத்தி செய்வதற்குரிய அரசாங்கத்தின்
திட்டங்களுக்கு தொடர்ந்து உதவும்
வகையில் சுகாதார அமைச்சிற்கு 27
மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட
பெறுமதியுடைய 18 வாகனங்களை
அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த
வாகனங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளான
நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு தடுப்பு
மருந்துகளை எடுத்துச் செல்வதற்காக
பயன்படுத்தப்படுவதுடன் உரிய
பிரதேசங்களில் மிகவும் மோசமாக
நோய்வாய்ப்பட்டுள்ள பெண்களைக்
கண்காணிப்பதற்கும் வேறிடங்களுக்கு
கொண்டு செல்வதற்கும் உதவும்.
""தாய் மரணவீதத்தைக் குறித்து
பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பேணுவதில்
இலங்கை கணிசமான அளவு முன்னேற்றத்தை
எட்டியுள்ளது என யுனிசெப்பின் சுகாதார
மற்றும் போஷாக்குப் பிரிவின் தலைவர்
வைத்திய கலாநிதி மொவாஹிம் ஹுசைன்
கூறினார். வாகனங்கள் சகல பிள்ளைகளும்
கிரமமான முறையில் தடுப்பு மருந்தைப்
பெறுவதையும், கர்ப்பிணித்
தாய்மாருக்குத் தேவையான நிபுணத்துவ
பராமரிப்பு கிடைப்பதையும் உறுதி
செய்யும்' என அவர் தெரிவித்தார்.
கலாநிதி மொவாஹிம் ஹுசைன் மேலும்
கூறுகையில்;
நோர்வே, நெதர்லாந்து அரசுகளின்
நிதியுதவி மூலம் 18 டபிள்கெப்
வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இவை
இலங்கையில் பிள்ளைகளின்
உயிர்வாழ்க்கையை உறுதி செய்து
மரணவீதத்தைக் குறைப்பதற்காக
அரசாங்கமும் யுனிசெப்பும் மேற்கொள்ளும்
பரந்த அளவிலான முயற்சிகளின் ஒரு
பாகமாக அமையும். இந்த வாகனங்களை
சுகாதார மருத்துவ உத்தியோகத்தர்கள்
பயன்படுத்துவார்கள். இவை மேற்பார்வை
அடங்கால பிரதேச மட்டத்திலான சுகாதார
சேவை நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன்
அடித்தள மட்டத்திலான சுகாதார
பணியாளர்களுக்கு குறிப்பாக பொதுச்
சுகாதார மருத்துவ மாதுமாருக்கு உதவி
செய்வதாக அமையும்.
இந்த வாகனங்கள் பதுளை, மொனராகலை,
ஹம்பாந்தோட்டை, அம்பாறை, திருகோணமலை,
மட்டக்களப்பு, மன்னார், நுவரெலியா,
காலி ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்படும்.
இலங்கையில் 100,000 உயிர்ப் பேறுகளில்
44 மரணங்கள் என்ற விகிதத்தில் தாய்மரண
வீதம் காணப்படுகிறது. இது பிராந்திய
சராசரியான 500 ஐ விடவும் பெருமளவு
குறைவானதாகும். ஏறத்தாழ சகல
பிள்ளைகளுக்கும் தடுப்பு
மருந்தேற்றப்பட்டுள்ளது. யுனிசெப்
அன்பளிப்பாக வழங்கும் 18 வாகனங்கள்
சுகாதாரத்துறை சார்ந்த மில்லேனிய
அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக
அரசாங்கத்திற்கு உதவி செய்யும் பரந்த
திட்டத்தின் ஒரு பாகமாகும்.
இவ்வாண்டின் முற்பகுதியில் யுனிசெப் (நோர்வே,
நெதர்லாந்து அரசுகளின் நிதியுதவியின்
ஊடாக ) ஒன்பது அம்பியூலன்ஸ்
வண்டிகளையும் 2007 இல் ஐப்பானிய
அரசாங்கத்தின் துணையுடன் 17
வாகனங்களையும் வழங்கியிருந்தது எனத்
தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி
பண்டிகை முற்பணமாக 7ஆயிரம் ரூபா
வழங்கப்பட வேண்டும்.
அத்தியாவசியப்
பொருட்களின் விலையுயர்வு வாழ்க்கைச்
செலவு அதிகரிப்பினால் அவதியுறும்
தொழிலாளர்களின் நலன்கருதி,
தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை
முற்பணமாக 7 ஆயிரம் ரூபா வழங்க
வேண்டுமென்று இலங்கை தேசிய தோட்ட
தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாணசபை
உறுப்பினருமான க.வேலாயுதம் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
செலவோடு ஒப்பிடும் போது மிக குறைந்த
ஊதியமே கிடைக்கின்றது. இதனைக் கொண்டு
எந்த விதத்திலும் தீபாவளியை கொண்டாட
முடியாது. என்பதை எவரும் சொல்லித்
தெரிய வேண்டியதில்லை.
ஆகக் குறைந்தது ஏழாயிரம் ரூபா தீபாவளி
பண்டிகை முற்பணமாக வழங்கினால்
மாத்திரம் இவர்கள் ஓரளவேனும் தமது
திருநாளை திருப்தியோடு கொண்டாட
முடியும்.
எனவே தோட்டத் தொழிலாளர்களின் அவசியத்தை
உணர்ந்து தீபாவளி முற்பணமாக 7 ஆயிரம்
ரூபாவை தோட்ட நிர்வாகம் வழங்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் தற்பொழுது நிலவிவரும்
அரசியல் சூழ்நிலை இதன் தொடர்ச்சியான
யுத்தம் மற்றும் கெடுபிடிகள் மற்றும்
விலைவாசியின் அதி உச்ச உயர்வால் மக்கள்
தமது வாழ்க்கையை கொண்டு செல்வதில்
பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
யுத்தம் இலங்கையின் பொருளாதாரத்தின்
மீது கொண்டுள்ள தாக்கங்கள் மற்றும்
இலங்கை பொருளாதாரத்தில் கடந்த கால,
நிகழ்கால தூர நோக்கற்ற செயற்பாடுகள்
அனைத்தும் படுகுழியுள் தள்ளியுள்ளது.
இதனால் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமே
பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து தொழிலாளர்களும் தோட்டத் தொழிலை
மாத்திரமே நம்பி வாழ்கின்றனர். அரசியல்
சூழ்நிலை காரணமாக தமது பிள்ளைகள் தலை
நகரிலிருந்து தமது தொழில்களை
விட்டுவிட்டு வீடுகளில் தங்கியிருப்பது
இவர்களை மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு
தள்ளியுள்ளது.
வாழ்க்கைச் செலவு, தொழிலின்மை,
குறைந்த சம்பளம் அரசியல் நெருக்கடிகள்
எல்லாமே இவர்களை வெகுவாக பாதித்துள்ளன
என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மடு
தேவாலய நிலைமைகள் தொடர்பாக வன்னி
இராணுவத் தளபதி மன்னார் குருமுதல்வர்
ஆராய்வு.
மடு
திருத்தலத்துக்கு பக்தர்கள்
வழிபாட்டுக்கு செல்வதற்கு அனுமதி
வழங்குவது தொடர்பாக வன்னிப்பிராந்திய
இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத்
ஜயசூரியவை மன்னார் மாவட்ட குரு
முதல்வர் வணபிதா விக்டர் சோனச மற்றும்
மடு தேவாலய பரிபாலகர் அருட்திரு
எஸ்.எமிலியானுஸ்பிள்ளை ஆகியோர்
சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் வரை
கலந்துரையாடியுள்ளனர்.
வன்னி இராணுவ
கட்டளைத் தலைமையகத்தில் நேற்று
முன்தினம் திங்கட்கிழமை முற்பகல் 11
மணிக்கு இச்சந்திப்பு இடம்பெற்ற போது
மடு திருத்தலத்துக்கு வாரத்தில்
ஒருநாளாவது குறிப்பாக சனிக்கிழமைகளில்
பக்தர்கள் சென்றுவர அனுமதிக்குமாறு வண
பிதா விக்டர் சோசை
வேண்டுகோள்விடுத்தார்.
எனினும், இது தொடர்பாக உடனடியாக
எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ள
முடியாது. கொழும்பிலுள்ள உயர்
அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னரே
பதிலளிக்க முடிமென்று வன்னி இராணுவத்
தளபதி தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது மடுவுக்கு அரச
நிறுவனங்களை அனுமதித்து மின்சாரம்
மற்றும் நீர்வசதிகளை செய்து தருமாறு
கோரியதுடன் நுளம்புத் தொல்லையை
நீக்குவதற்கும் நீருக்கு குளோரின்
இடுவதற்கும் சுகாதார ஊழியர்களை
அனுமதிக்குமாறும் கோரிக்கை விடப்பட்டது.
அத்துடன் மழைக்காலம் நெருங்கியுள்ள
நிலையில் யாத்திரிகர்களின்
தங்குமிடங்களை புனரமைப்பதற்கு கட்டிடப்
பொருட்களையும் அதற்கான ஊழியர்களையும்
செல்ல அனுமதிக்குமாறும் வேண்டுகோள்
விடுக்கப்பட்டது.
இதற்கு அனுமதியளித்த வன்னித்தளபதி
கட்டிட திருத்த வேலைகள் செய்வதற்காக
செல்லவுள்ள ஊழியர்களின் பெயர்
விபரங்களை தருமாறும் அதிலுள்ள பெயர்களை
பரிசீலித்து அனுமதிப்பதாகவும்
இச்சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
மூத்த
குடிமகன்' விருதுபெற்ற காந்திப்
பெரியாருடன் குருளை சாரணர் சந்தித்து
பரிசுகள் வழங்கி அவரிடமிருந்து ஆசியைப்
பெற்றுக் கொண்டனர்.
திருகோணமலை
ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரியின்
குருளைச் சாரணர்கள், நேற்று புதன்கிழமை
காலை திருகோணமலையின் "மூத்த குடிமகன்'
விருது பெற்ற தொண்ணூறு வயது காந்திப்
பெரியார் பொ.கந்தையா (காந்தி
ஆசிரியர்)வை அவரது இல்லத்திற்குச்
சென்று சந்தித்து பரிசுகள் வழங்கி
அவரிடமிருந்து ஆசியைப் பெற்றுக்
கொண்டனர்.
சர்வதேச சிறுவர்
தினம், சர்வதேச முதியோர் தினம்
ஆகியவற்றை ஒட்டி இச்சந்திப்பு
இடம்பெற்றது. காந்திப் பெரியாருடன்
குருளைச் சாரணர்கள் சில நிமிடங்கள்
உரையாடினர். உங்களுக்கு எத்தனை வயது?
எப்போது பிறந்தீர்கள்? என்று குருளைச்
சாரணர் ஒருவர் முதலில் கேட்டார். நல்ல
கேள்வி என்று சிரித்துக் கொண்டு ""நான்
19.12.1918 அன்று பிறந்தேன்.
எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி
எனக்கு 91 ஆவது பிறந்த தினம்
வருகின்றது' என்று காந்திப் பெரியார்
கூறினார்.
"சுவாமி விவேகானந்தர் சிறுவயதில்
குழப்படிக்காரராக விளங்கினார். பின்னர்
வீரத்துறவியாக விளங்கினார். இன்று
சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சமய சமூகப்
பணிகள் பற்றி பேசுகின்றோம். அவர்
வாழ்ந்ததே 39 ஆண்டுகள் தான். இன்னுமொரு
39 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம்'
என்றும் காந்திப் பெரியார்
குறிப்பிட்டார். நேதாஜி
சுபாஷ்சந்திரபோஸ் ஆன்மீக வாதியாகவே
வாழ்ந்தார். அவர் எங்கு சென்றாலும்
அவரின் கைப்பைக்குள் எப்போதும் பகவத்
கீதை இருக்கும் என்றார் காந்திப்
பெரியார். "கடவுளை அறிந்துகொள்ள
வேண்டும். கடவுளை வழிபட வேண்டும்.
கடவுளை அடைதல் வேண்டும்' இம்மூன்றுமே
மனிதனாகப் பிறந்ததன் நோக்கம் என்று
ஸ்ரீ ஆறுமுகநாவலர்
வலியுறுத்தியிருப்பதை குருளைச்
சாரணருக்கு நினைவூட்டிய காந்திப்
பெரியார், "பாடசாலையில் அரிவரி
வகுப்பில் படித்த காலத்திலிருந்தே தாம்
மாமிசம் உண்பதைக் கைவிட்டேன். சுத்த
சைவமாகவே அன்றிலிருந்து வருகின்றேன்'
என்றும் கூறினார். குருளைச் சாரணர்கள்
காந்திப் பெரியாரின் தாள் பணிந்து
வணக்கம் செலுத்தி விடைபெற்றுச்
சென்றனர்.
முன்னாள் அமைச்சரும் தென்மாகாண
ஆளுநருமான கிங்ஸ்லி ரி விக்ரமரட்ண
நேற்று புதன்கிழமை தனது 69 ஆவது
வயதில் காலமானார்.
நோய்வாய்ப்பட்டு
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை
ஒன்றில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்
சிகிச்சை பலனளிக்காது நேற்று பிற்பகல்
காலமானார்.
1974 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியில் இணைந்த இவர் 1978 ஆம் ஆண்டு
கட்சியின் உபசெயலாளராகத்
தெரிவுசெய்யப்பட்டு பின்னர் 1983 ஆம்
ஆண்டில் பொருளாளராகவும் 2004 ஆம்
ஆண்டில் சிரேஷ்ட உபதலைவராகவும் பதவி
வகித்தார்.
1989 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்துக்கு
தெரிவான இவர் 1994 ஆம் ஆண்டு முதல்
2000 ஆம் ஆண்டுவரை உணவு உட்துறை
மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சராக
பதவி வகித்தார்.
அத்துடன், பொதுஜன ஐக்கிய முன்னணி
அரசின் கீழ் தென்மாகாண ஆளுநராகவும்
பதவி வகித்துள்ளார்.