|
இறக்குவானையில் இரு
குழுவினரிடையே மோதல் பிரதேசசபை
உறுப்பினர் உட்பட இருவர் படுகாயம்.
இறக்குவானை நகரில் இரு
குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில்
கொடக்கவெல பிரதேச சபை உறுப்பினர்
உட்பட பஸ் சாரதியொருவரும்
வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று
முன்தினம் சனிக்கிழமை இரவு 7 மணியளவில்
இடம்பெற்ற இச்சம்பவத்தில் பலத்த
தாக்குதலுக்குள்ளான பஸ் சாரதி மேலதிக
சிகிச்சைக்காக இரத்தினபுரி
வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளார்.
கொடக்கவெல பிரதேசசபை உறுப்பினர் சரத்
லிண்டன் பஸ் சாரதி ஆர்.சனத் ஆகியோரே
வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி சாரதியொருவருடன்
இச்சம்பவம் ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து
ஏனையோரும் ஒன்று சேர்ந்து கும்பலாக
எதிரணியினரை தாக்கியுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரைக் கைது
செய்துள்ளதாகவும் ஏனையோர் தேடப்பட்டு
வருவதாகவும் இறக்குவானை பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி ஆர்.நெலுந்தெனிய
தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண சுகாதார சுதேச வைத்திய
மற்றும் மகளிர் விவகார அமைச்சர்
டி.ரஞ்சித் தெ சொய்சா, சப்ரகமுவ மாகாண
சபை உறுப்பினர் அநுர அழகிய வண்ண,
கொடக்கவெல பிரதேசசபை தலைவர்
வை.ஜி.மங்களதிஸ்ஸ ஆகியோரும் நேற்று
ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலைக்குச்
சென்று சம்பவத்தை ஆராய்ந்து நிலைமையை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர
நடவடிக்கை மேற்கொண்டனர். |
|
|
கஞ்சா இல்லையேல்
ஆயுர்வேத வைத்தியத் துறையை மூடவேண்டிய
நிலையேற்படும்
அமைச்சர் திஸ்ஸ
தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான
கேள்வி நேரத்தின் போது ஜே.வி.பி.யின்
பிரசார செயலாளரான விஜித ஹேரத்
எம்.பி.எழுப்பிய கேள்வியொன்றுக்கு
பதிலளிக்கும் போதே அமைச்சர் கரலியத்த
இவ்வாறு கூறினார்.
ஏற்கனவே சட்டவிரோத போதைப் பொருள்
மற்றும் மதுபான பாவனையினால் மக்கள்
பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சுதேச
அமைச்சு கஞ்சா பயிர் செய்ய அனுமதி
கோரியிருப்பதாக ஊடகங்களில் செய்தி
வெளியாகியுள்ளதாக விஜித ஹேரத் இதன்
போது கூறினார்.
சட்டவிரோத மதுபானங்களை அருந்தியதில்
அண்மையில் கம்பஹா, வெலிவேரிய
பிரதேசத்தில் பலர் உயிரிழந்துள்ளதுடன்,
மேலும் பலர் மோசமான நிலையில்
இருப்பதாகவும் இதேபோன்றதொரு சம்பவம்
எற்கனவே 3 மாதங்களுக்கு முன்னர்
மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளதாகவும்
அவர் உதாரணங்களாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஜனாதிபதியின் "மதுவுக்கு
முற்றுப்புள்ளி' வேலைத்திட்டத்தின்
மூலம் இவ்வாறான நடவடிக்கைகளை
முடிவுக்கு கொண்டுவர முடியவில்லையே
என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் திஸ்ஸ
கரலியத்த;
கஞ்சா முக்கியமான ஒளடதம். அதை சரியான
முறையில் பயன்படுத்தவேண்டும். நாம்
சட்டவிரோத பாவனைக்காக அனுமதி கோரவில்லை.
சட்டவிரோதமாக பயிர்செய்ய எமது அமைச்சு
ஒரு போதும் இடமளிக்காது. இந்த ஒளடதம்
(கஞ்சா) இல்லாவிட்டால் ஆயுர்வேத துறையை
மூட வேண்டியிருக்கும். சட்ட விரோத
உற்பத்திக்கு நாம் அனுமதிக்க மாட்டோம்
என்றார். |
|
|
நாடுபூராவும் விசர்
நாய்க்கடிகளுக்குள்ளாகி 2007 ஆம் ஆண்டு
56 பேர் உயிரிழப்பு வைத்திய கலாநிதி
ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில்
கடந்த வருடம் விசர் நாய்க்கடியினால்
ஐம்பத்தாறு பேர் இறந்துள்ள போதும் யாழ்.
மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே
இறந்திருப்பதாக யாழ். பிராந்திய
சுகாதார சேவைப்பணிப்பாளர் வைத்திய
கலாநிதி ஆ. கேதீஸ்வரன்
தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை
விலங்கு விசர் நோய்
தடுப்புதினத்தையொட்டி அவர் வெளியிட்ட
செய்திக்குறிப்பில் மேலும்
தெரிவித்துள்ளதாவது;
யாழ்.மாவட்டத்தில் உரியகாலத்தில்
நாய்களுக்கு விசர்நாய் தடுப்பு மருந்து
ஏற்றப்பட்டுவருவதாலும் நாய்க்கடிக்கு
உள்ளானவர்களுக்கு சகல
வைத்தியசாலைகளிலும் பூரண சிகிச்சை
வழங்கப்பட்டுவருவதாலும் இறப்பு
விகிதத்தை முற்றாக கட்டுப்படுத்த
முடிந்துள்ளது.
எமது பிரதேசத்தில் 2002 ஆம் ஆண்டு 10
பேரும், 2003 ஆம் ஆண்டில் 7 பேரும் ,
2004 ஆம் ஆண்டு 13 பேரும், 2005 ஆம்
ஆண்டு 5 பேரும், 2006 ஆம் ஆண்டு 8
பேரும், 2007 ஆம் ஆண்டு ஒருவரும் விசர்
நாய்க்கடிக்கு மரணமாகியுள்ளனர்.
இவ்வாண்டு எவரும் மரணமாகவில்லை.
பெரும்பாலும் நாய்கள் மூலமாக
நோய்தொற்று ஏற்படுவதால் நாய்க்கடிக்கு
உள்ளாகும் எவரும் மரணத்தை
தவிர்ப்பதற்காக உடனடியாக தடுப்பு
மருந்தேற்றுவது மரணத்தில் இருந்து
பாதுகாக்க முடியும். |
|
|
|