|
ஒவ்வொரு
பாராளுமன்றத் தேர்தலிலும் ஏதேனுமொரு
விடயம் பிரதான பேசுபொருளாக
இருக்கும்.நடக்கவிருக்கும் பொதுத்
தேர்தலில் பிரதான பேசுபொருளாக இருப்பது
மூன்றிலிரண்டு
பெரும்பான்மை.பதவியிலுள்ள அரசாங்கம்
அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்வதற்கு
ஏதுவாக மூன்றிலிரண்டு பெரும்பான்மை
வழங்குமாறு மக்களிடம் வேண்டுகோள்
விடுக்கின்றது.அறுதிப் பெரும்பான்மை
கிடைக்கும் என்பதில் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணிக்குப் பூரண நம்பிக்கை
இருப்பதாலேயே மூன்றிலிரண்டு
பெரும்பான்மையைக் கோருகின்றது.
இதேநேரம் எதிரணியினரின் பிரசாரமும்
அரசாங்கத்துக்கு வாய்ப்பாகவே
உள்ளது.அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு
பெரும்பான்மை வழங்கக் கூடாது என்று
அவர்கள் பிரசாரம் செய்கின்றார்கள்.
தற்போதைய அரசாங்கமே மீண்டும் ஆட்சி
அமைக்கும் என்பதை எதிரணியும்
ஒத்துக்கொள்வதாக இப்பிரசாரம் உள்ளது.
தேசிய மட்டத்தில் மூன்றிலிரண்டு
பெரும்பான்மை பேசுபொருளாக இருக்கும்
அதேவேளை,தமிழ் மக்கள் மத்தியில் இது
முக்கிய இடத்தைப் பெறவில்லை.உண்மையில்
மூன்றிலிரண்டு பெரும்பான்மை தமிழ்
மக்களுக்கும் முக்கியத்துவம்
வாய்ந்ததே.மூன்றிலிரண்டு பெரும்பான்மை
பெற்றுள்ள அரசாங்கம் பதவியிலிருக்கும்
காலத்திலேயே அரசியல் தீர்வு
சம்பந்தமான அரசியலமைப்பு மாற்றங்களைச்
செய்ய முடியும்.ஆனால் இனப் பிரச்சினை
தொடர்பாகச் சரியான கொள்கையைப்
பின்பற்றும் தலைமை இல்லாததால் தமிழ்
மக்கள் மத்தியில் மூன்றிலிரண்டு
பெரும்பான்மைக் கோரிக்கை அதற்குரிய
முக்கியத்துவத்தைப் பெறவில்லை.
தமிழ் மக்கள் மத்தியில் இனப்
பிரச்சினையே பிரதான பேசுபொருளாக
உள்ளது.1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்
தேர்தலில் முக்கிய இடத்தைப் பெற்ற
இவ்விடயம் அதன் பின்னரான எல்லாத்
தேர்தல்களிலும் பிரதான விடயமாகப்
பேசப்பட்டு வருகின்றது.
எல்லாத் தேர்தல்களிலும் தமிழ்ப்
பிரதேசங்களில் கூடுதலான இடங்களைக்
கைப்பற்றிய அரசியல் கட்சி(தமிழரசுக்
கட்சி,தமிழர் விடுதலைக்
கூட்டணி,தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு)இனப் பிரச்சினையின்
தீர்வுக்கான ஆளுமையுடன் உழைக்கப்
போவதாக ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதி
அளித்தது.1956ஆம் ஆண்டிலிருந்து
பார்த்தால் ஐம்பது வருடங்களுக்கு
மேலாக இவ்வாக்குறுதி அளிக்கப்பட்டு
வருகின்ற போதிலும்,இனப்பிரச்சினைக்கான
தீர்வை அண்மித்தும் நாம்
செல்லவில்லை.தெளிவாகக் கூறுவதாயின்,
மாகாண சபை முறைக்குத் தமிழ்த்
தலைவர்கள் எதிர்ப்புத்
தெரிவித்ததிலிருந்து இனப்
பிரச்சினைக்கான தீர்வு முயற்சி
சிக்கலானதாகி வந்திருக்கின்றது. இந்த
நிலைமை உருவாகியதற்குத் தமிழ்த்
தரப்பினரே பிரதான பொறுப்பாளிகள்.
இனப்
பிரச்சினையின் தீர்வைப் பொறுத்தவரையில்
நம்பிக்கை பிரதானமானது.தமிழ்த்
தலைமையின் அரசியல் நேர்மையில் சிங்கள
மக்களுக்கும்,நியாயமான அரசியல்
தீர்வுக்குச் சிங்கள மக்களில்
பெரும்பான்மையோரின் ஆதரவைப் பெற
முடியும் என்பதில் தமிழ்த்
தலைவர்களுக்கும் நம்பிக்கை இருக்க
வேண்டியது அவசியம்.இந்த நம்பிக்கையைத்
தோற்றுவிப்பதில் தமிழ்த் தலைவர்களின்
பங்கு முக்கியமானது.ஆனால் இத்
தலைவர்கள் அதற்கேற்றவாறு
செயற்படவில்லை.இரண்டு சந்தர்ப்பங்களில்
இவர்கள் அவநம்பிக்கையை
வளர்த்திருக்கின்றார்கள்.
தமிழரசுக் கட்சி அதன் ஆரம்பகா லக்
கொள்கையாக சமஷ்டியை முன்வைத்தது.பல
நாடுகள் சமஷ்டி அரசியலமைப் பைக் கொண்டு
ள்ளன.அவை எல்லாமே ஒரே மாதிரியானவை
யல்ல. வெவ்வேறு தன்மையான
அரசியலமைப்புகள்.இது பற்றிப் பிறி தொரு
சந்தர்ப்பத்தில் விபரமாகப் பார்ப்போம்.
சமஷ்டிக் கொள்கையை முன்வைத்த தமிழரசுக்
கட்சி மேற் கொண்ட சில வெகுஜன
விருப்பு(பொப்யூலிஸ்ட்)நடவடிக்கைகள்
சமஷ்டிக் கோரிக்கை பிரிவினையின் முதல்
படி என்ற சந்தேகத்தைச் சிங்கள
மக்களிடம் தோற்றுவித்தன.கட்சிக்குச்
சமஷ்டிக் கட்சி என்று பெயரிடாமல்
தமிழரசுக் கட்சி என்று பெயரிட்டது ஒரு
விடயம்.இக் கட்சி நடத்திய
சத்தியாக்கிரகத்தின் போது தனியான தபால்
சேவை ஆரம்பித்து ஈழ முத்திரை
வெளியிட்டதும் காணிக் கச்சேரி
நடத்தியதும் மற்றைய விடயம்.
அவநம்பிக்கையைத் தோற்றுவித்த மற்றைய
சந்தர்ப்பம் பொதுசன ஐக்கிய முன்னணியின்
அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம்
தொடர்பானது.
அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்
திட்டத்துக்குத் தமிழர் விடுதலைக்
கூட்டணி ஆரம்பத்தில் ஆதரவாகச்
செயற்பட்டது.ஒரு கட்டத்தில் தமிழர்
விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதிகள்
குழுவொன்று அன்றைய எதிர்க்கட்சித்
தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச்
சந்தித்து அதிகாரப் பகிர்வுத்
தீர்வுத்திட்டத்தை எதிர்க்க வேண்டாம்
என்று வேண்டுகோள் விடுத்தது.தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் இன்றைய தலைவர்
ஆர்.சம்பந்தன் பொதுசன ஐக்கிய
முன்னணியின் அதிகாரப் பகிர்வுத்
தீர்வுத்திட்டத்தைத் தீவிரமாக
ஆதரித்தவர்களில் ஒருவர்.அத்
தீர்வுத்திட்டம் பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படுவதற்குச் சில நாட்கள்
முன்பு வரை அதற்கு ஆதரவான கருத்துகளைத்
தெரிவித்திருந்தார்.ஆனால் கடைசி
நேரத்தில் கூட்டணித் தலைவர்கள்
தீர்வுத்திட்டத்தை எதிர்த்தது
மாத்திரமன்றி,புலிகளுடன் சேர்ந்து
அவர்களின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின்
கீழ் செயற்படத் தொடங்கினார்கள்.
அதிகாரப் பகிர்வுத் தீர்வு தொடர்பாக
அன்றைய அரசாங்கம் சிங்களக் கிராமங்கள்
தோறும் பல கருத்தரங்குகளை நடத்தியது.
இக்கருத்தரங்குகளில் பல கல்விமான்களும்
ஆய்வறிவாளர்களும் பங்குபற்றித்
தீர்வின் அவசியம் பற்றி விளக்கமாக
எடுத்துக் கூறினார்கள்.இதன் விளைவாக
அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவான மனோநிலை
சிங்கள மக்களிடம் வளர்ந்திருந்தது.
இந்தப் பின்னணியிலேயே கூட்டனித்
தலைவர்கள் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்
திட்டத்தை எதிர்த்துப் புலிகளுடன்
இணைந்தார்கள்.கூட்டணியின் இச்செயல்
சிங்கள மக்களிடம் சந்தேகத்தைத்
தோற்றுவித்தது.தமிழ்த் தலைவர்களின்
அரசியல் தீர்வுக்கோரிக்கைக்குப்
பின்னால் தனிநாட்டு நிகழ்ச்சி நிரல்
இருப்பதாகச் சிங்கள மக்கள் சந்தேகம்
கொள்ளத் தொடங்கினர்.அதுவரை காலமும்
தலைதூக்க முடியாதிருந்த பேரினவாத
சக்திகள் தலைதூக்குவதற்கு இது
வாய்ப்பான சூழ்நிலையாக அமைந்தது.
இவ்வாறு தமிழ்த் தலைவர்கள் வளர்த்த
அவநம்பிக்கையின் விளைவாக அரசியல்
தீர்வு முயற்சி இன்று சிக்கலான
சூழ்நிலைக்கு முகங்கொடுக்கின்றது.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களில்
மாத்திரம் தமிழ்த் தலைவர்கள் தவறு
விட்டார்கள் எனக்
கூறுவதற்கில்லை.இவையிரண்டும்
பாரதூரமான தவறுகள்.பொதுவாகவே தமிழ்த்
தலைவர்கள் இனப்பிரச்சினையின்
தீர்வுக்காக ஆக்கபூர்வமான முறையில்
எதையும் செய்யவில்லை. அப்படியிருந்தும்
மக்கள் ஏன் அத்தலைவர்களைத் தொடர்ந்து
தெரிவு செய்தார்கள் என்ற கேள்வியை
யாராவது எழுப்பலாம். இது நல்ல கேள்வி.
ஆரம்ப
காலத்தில் தமிழ் மக்களுக்குத் தலைமை
வகிக்க முன்வந்தவர்கள் எல்லோரும்
சிறந்த கல்விமான்கள்.கொடிகட்டிப்
பறந்த அப்புக்காத்துமார்.அதனால் மக்கள்
அவர்களில் அபார நம்பிக்கை வைத்தனர்.இத்
தலைவர்களின் வீராவேசப் பேச்சுகள் இந்த
நம்பிக்கையை மேலும் வளர்த்தன. ஆனால்
தலைவர்கள் இந்த நம்பிக்கைக்குப்
பாத்திரமாக நடக்கவில்3லை.தலைமைப்
பாத்திரம் வகித்தவர்கள் எல்லோரும் வலது
சாரிச் சிந்தனையாளர்களாக இருந்ததால்
தென்னிலங்கையிலுள்ள வலதுசாரி
சக்திகளுடன் நட்புறவை வளர்ப்பதற்கு
முக்கியத்துவம் அளித்தார்களேயொழிய இனப்
பிரச்சினையின் தீர்வுக்கு
முக்கியத்துவம் அளிக்கவில்லை.தேர்தல்
நெருங்கி வரும் வரை தென்னிலங்கை
வலதுசாரி சக்திகளைப் பலப்படுத்தும்
செயற்பாடுகளில் ஈடுபடுவதும்,தேர்தல்
அண்மித்ததும் தமிழ்த் தேசிய உணர்வைத்
துண்டிவிட்டுத் தமிழ் மக்களிடம்
வாக்குக் கேட்பதும் இவர்களுக்கு
வழக்கமாக இருந்தது.இதற்கு ஒரு
உதாரணத்தைக் கூறலாம்.
தமிழரசுக் கட்சியும் ஐக்கிய தேசி யக்
கட்சியும் 1965ஆம் ஆண்டு செய்து கொண்ட
ஒப்பந்தத்தின் பிரதான அம்சம் மாவட்ட
சபை. மாவட்ட சபையை வழங்குவதென்ற
உறுதிமொழியின் அடிப்படையில் தமிழரசுக்
கட்சி டட்லி சேனநாயகவின் ஐக்கிய
தேசியக் கட்சி அரசாங்கத்தில்
பங்காளியாகியது.மாவட்ட சபையை வழங்குவது
சாத்தியமில்லை என்று சிறிது காலத்தின்
பின் டட்லி சேனநாயக அறிவித்த பின்னரும்
தமிழரசுக் கட்சி அந்த அரசாங்கத்தில்
அங்கத்துவம் வகித்தது.1970ஆம் ஆண்டு
பொதுத் தேர்தல் நெருங்கியதும்
அரசாங்கத்திலிருந்து வெளியேறி, ஐக்கிய
தேசியக் கட்சி எங்களை ஏமாற்றிவிட்டது
என்று தேர்தல் மேடைகளில் பேசினார்கள்.
அன்று முதல் இன்று வரை தமிழ்த்
தலைவர்கள் இதே பாணியிலேயே
செயற்படுகின்றார்கள்.தமிழ் மக்களிடம்
அதீத நம்பிக்கையைத் தோற்றுவிப்பதும்
பின்னர் அவர்களை ஏமாற்றுவதும்
தொடர்கின்றது.இந்தத் தொடர் கதையின்
துயர முடிவுதான் அண்மையின் தமிழ்
மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளும்
அழிவுகளும்.
இன்றும் பழைய பாணியிலேயே தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள்
களமிறங்கியிருக்கின்றார்கள்.இனப்
பிரச்சினையின் தீர்வுக்கு எவ்வாறான
அணுகுமுறையைப் பின்பற்றப்
போகின்றார்கள் என்பது பற்றி மக்களுக்கு
எடுத்துக் கூற இவர்களால் முடியாது.
ஏனென்றால் அதற்கான திட்டம் எதுவும்
இவர்களிடம் இல்லை.தமிழ் மக்களின்
நலன்களைக் காப்போம், உரிமைகளைப்
பெற்றுக் கொடுப்போம் என்று
வெறுங்கையால் முழம் போடுகின்றார்கள்.
வெறும் வார்த்தைச் சிலம்பங்களால்
எல்லாக் காலமும் தமிழ் மக்களை ஏமாற்ற
முடியும் என்று இத் தலைவர்கள்
நினைக்கக் கூடாது. அரை நூற்றாண்டு
காலத் தோல்விக்குப் பின் தமிழ் மக்கள்
புதிய தலைமை பற்றிச் சிந்திக்க
வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு
வானத்திலிருந்து விழப்
போவதில்லை.திடீரென
வரப்போவதுமில்லை.படிப்படியாக
உரிமைகளைப் பெற்று இறுதித் தீர்வை
அடைய வேண்டிய நிலையிலேயே தமிழ் மக்கள்
இன்று உள்ளனர். இதுவே இன்றைய
யதார்த்தம்.பதின் மூன்றாவது
அரசியலமைப்புத் திருத்தம் இனப்
பிரச்சினைக்கான முழுமையான
தீர்வல்ல.ஆனால் அதை ஏற்பதால் தமிழ்
மக்கள் இழக்கப் போவது எதுவுமில்லை.சில
உரிமைகளை அவர்கள் பெறுவார்கள். பிரதேச
அபிவிருத்திக்கும் இதன் மூலம்
வழிபிறக்கும்.மாகாண சபையை
ஏற்றுக்கொண்டு படிப்படியாகக் கூடுதலான
அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு
முழுமையான அரசியல் தீர்வை அடைய
முடியும்.நல்லெண்ணத்தின்
மூலமும்,சிங்கள மக்கள் மத்தியில் நட்பு
சக்திகளை வளர்த்துக்கொள்வதன் மூலமும்
இது சாத்தியமாகும்.
விட்டால் குடுமி வழித்தால் மொட்டை
என்ற மனோபாவம் அரசியலுக்குப்
பொருத்தமானதல்ல.
ஆர்.
கே. ராஜலிங்கம் |