செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் ஜூலை,26.2010,

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

வடக்கிலும் தெற்கிலும் உள்ள முற்போக்கு,ஜனநாயக சக்திகள் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம்

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பிக்க அடித்தளமிட்ட தலைவர்களான டாக்டர் எஸ்.ஏ.விக்ரமசிங்க, பீற்றர் கெனமன், வணக்கத்திற்கு உடகந்தவெல சிறி சரணங்கர, ரி.துரைசிங்கம், ஏ.வைத்தியலிங்கம், ஏ.கந்தையா ஆகியோரை இச் சந்தர்ப்பத்தில் நினைவு கூருகின்றேன்.

எஸ்.ஜயசிங்கம், என்.சண்முகதாசன், ஐ.ஆர்.அரியரத்தினம்,வி.பொன்னம்பலம் எம்.கார்த்திகேசு, பி.குமாரசாமி, சி.குமாரசாமி, எஸ்.பி.நடராஜா, எம்.சி.சுப்ரமணியம், எஸ்.விஜயகாந்தன் ஆகியோரையும் இச் சந்தர்ப்பத்தில் நான் நினைவுகூருகின்றேன்.

வடக்கில் கட்சிக்கு பணியாற்றியவர்களையும் கட்சியை ஆரம்பிப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும் நாம் இத் தருணத்தில் பெருமையுடன் நினைவுகூருகின்றேன். வடக்கில் மேலும் பலர் எமது இடதுசாரி அமைப்புடன் சேர்ந்துக்கொண்டுள்ளனர்.

இன்று வடக்கில் மீண்டும் பல துன்பகரமான சம்பவங்களுக்கு மத்தியில் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். இச் சந்தர்ப்பத்தில் நடந்து முடிந்த கசப்பான சம்பவங்களை நான் நினைவுகூர விரும்பவில்லை. எமது கட்சி 67 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

3 ஜூலை 1943,1920 இலிருந்து கட்சி வரலாறு ஆரம்பமாகின்றது.யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் காலத்திலிருந்து ஆரம்பம் இடம்பெற்றது. யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் ஹென்டி பேரின்பநாயகம் தலைமையில் அன்று உதயமானது. அகில இலங்கை இளைஞர் காங்கிரஸ் 1931 ஆம் ஆண்டில் உதயமானது.

சூரியமல் அமைப்பு 1933 இல் ஆரம்பமானது. இலங்கை சமசமாஜக் கட்சி 1935 இல் ஆரம்பிக்கப்பட்டது. இவை அனைத்தும் அந்நிய நாட்டு சக்திகளை எதிர்க்கும் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பமானவையாகும். 1917 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அக்டோபர் புரட்சி ஆசிய மக்களை விழிப்படையச் செய்ததுடன் சுதந்திரத்திற்காக போராடவும் தூண்டியது. பொன்னம்பலம் அருணாசலமே முதன் முதலில் அக்டோபர் புரட்சி தொடர்பான செய்தியை இலங்கை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினார் என்பதனை சிலர் அறிவார்கள். இதன் காரணமாக இவர் காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிரானவராக இனங்காணப்பட்டார்.

நாம் கடைசியாக 1976ஆம் ஆண்டு வந்திருந்தோம். அன்று காங்கேசன்துறை தொகுதிக்காக இடம்பெற்ற இடைத்தேர்தலில் வி.பொன்னம்பலத்தை வேட்பாளராக நிறுத்த அச்சந்தர்ப்பத்தில் அங்கு வந்தோம்.

நாம் பல சந்தர்ப்பங்களை சரித்திரத்தில் தவறவிட்டுள்ளோம். இத்தகைய தவறுகளை மீண்டும் நாம் செய்துவிடக் கூடாது. தேசிய இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இதுவே நாம் விட்ட முக்கிய தவறுகளாகும். இன்றும் நாம் அதனையே செய்கின்றோம். கட்சி என்ற ரீதியில் நாம் தேசிய விடயம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆராய்ந்துள்ளோம்.

ஐக்கிய இலங்கைக்குள் பிராந்திய அதிகார பகிர்வை (உதாரணமாக அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுதல்) முதன் முதலில் நாட்டிற்குள் அறிமுகப்படுத்தியது கம்யூனிஸ்ட் கட்சியே. 1944 ஆம் ஆண்டில் சமூக பொருளாதார கலாசார உறவுகள் தொடர்பில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது.

இந்த நாடு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து ஆட்சியில் இருந்தவர்கள் அரசியல் ரீதியாக சுயநல அரசியல் மற்றும் குறுகிய மனப்பான்மையுடன் செயல்பட்டதன் காரணமாக வரலாற்று ரீதியான பல்வேறு தவறுகளை இழைத்துவிட்டனர். இதனால், தேசத்தை கட்டியெழுப்புகின்ற வாய்ப்பு தவறவிடப்பட்டது. அதேநேரம், வடக்கில் இருந்து செயல்பட்ட தமிழ் காங்கிரஸ் மற்றும் சமஷ்டி கட்சியினரும் ஒரே கட்டமைப்பிற்குள் இருந்தவாறும், அவர்களது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறும் தங்களது அரசியல் தாற்ப்பரியம் மற்றும் வகுப்பு ரீதியான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம், கம்யூனிஸ்ட் கட்சியினரும் லங்கா சமசமாஜ கட்சியினரும் எப்போதும் உறுதியான ஒரு நிலைப்பாட்டில் இருந்து வந்துள்ளோம். இதனால், வடக்கிலும்,தெற்கிலும் தீவிரவாதிகளினால் பல்வேறு தாக்குதல்களுக்கும் முகம் கொடுக்க நேரிட்டது.

வடபகுதியில் தேசிய ஒற்றுமையையும் ஜனநாயகத்தையும் விரும்பிய இடதுசாரி அரசியல் கட்சிகள் ஒதுக்கித் தள்ளப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டன. மிதவாத தமிழ் தலைவர்களும் விட்டு வைக்கப்படவில்லை.

13 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களும் வடபகுதி பயங்கரவாதிகள் மற்றும் தென்பகுதி பெரும்போக்காளர்கள் ஆகியோரின் கைகளிலிருந்து தப்ப முடியவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 48 பேர் ஜே.வி.பி.யினாலும் 6 பேர் எல்.ரி.ரி.ஈ.யினராலும் கொல்லப்பட்டனர்.

தமிழர்களுக்கு எதிராகவும் இந்தியர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் எல்.ரி.ரி.ஈ.க்கு எதிரான அரசியல் கோட்பாட்டை கடைப்பித்தும் ஜே.வி.பி.யினரும் ஹெல உருமயவினரும் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், 30 வருடகால வரலாற்றில் எல்.ரி.ரி.ஈ.அவர்கள் மீது எந்தவித தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை.

வெவ்வேறு தரங்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் தங்களது சொந்த நன்மை கருதி பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடித்து வந்ததை வரலாறுகள் தெரிவிக்கின்றன.

வடக்கிலும் கிழக்கிலும் தீவிரவாதிகள் இடதுசாரி இயக்கத்தையும் முற்போக்கு சக்திகளையும் பணயம் வைத்தே முன்னேறி வந்துள்ளனர். இதன் காரணமாக நாட்டில் சமநிலை இழக்கப்பட்டது.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வழியாக பயங்கரவாதத்தையோ அல்லது வன்செயல்களையோ எமது கட்சி ஆதரிக்கவில்லை. எமது கைகளில் இரத்தக்கறை படியவில்லை. எமது கட்சி தேசாபிமானம் மிக்க சர்வதேச அடிப்படையிலான ஒரு கட்சியாக இருந்து வந்துள்ளது.

எமது 67 வருடகால வரலாற்றில் மக்களின் சமூக சிந்தனையை மேம்படச் செய்துள்ளோம். சாதி உணர்வு உட்பட பலதரப்பட்ட பிற்போக்கு எண்ணங்களை மக்களின் மனதிலிருந்து நீக்குவதன் மூலம் அவர்களை விழிப்படையச் செய்துள்ளோம். இடதுசாரி இயக்கப் போராட்டத்தின் மூலமான அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளுக்கு நாம் வழங்கிய பங்களிப்பையிட்டு பெருமைப்படுகின்றோம்.

நாட்டின் நன்மைகருதி வடக்கிலும் தெற்கிலுமுள்ள முற்போக்கு சக்திகள் இணையவேண்டிய தருணம் இதுவாகும். இந்தக் காலகட்டத்தில் சர்வதேச அரங்கில் இடம்பெற்று வரும் ஆக்கபூர்வமான அபிவிருத்திகள் பற்றி இந்த தருணத்தில் உங்களுக்கு எடுத்துக்கூற நான் விரும்புகின்றேன்.

பேர்ளின் சுவர் இடிக்கப்பட்டு சோவியத்யூனியன் பிரிவுபட்டதையடுத்து சோஷலிஸத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டதாகவும் முதலாளித்துவம் மேலோங்கும் என்றும் பலர் கருதினார்கள்.

20 வருட காலத்தில் உலகம் பாரிய மாற்றங்களைத் தந்துள்ளது. முக்கியமான மாற்றங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. முதலாளித்துவத்தின் கோட்டைகள் எனக் கருதப்படும் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் நாம் எதிர்பார்த்ததையும் பார்க்க துரிதமாக வீழ்ச்சியடைந்து வருகின்றன.

உலகப் பொருளாதாரத்தில் ஆசியாக் கண்டம் முன்னிலை வகிக்கிறது. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் பாரிய முன்னேற்றம் கண்டுவருகின்றன. இதேவேளை, 13 இடதுசாரி அரசாங்கங்களுடன் லத்தீன் அமெரிக்கா மறுமலர்ச்சி கண்டுள்ளமை லத்தீன் அமெரிக்காவின் அரசியல் வரைபடத்தையே மாற்றியமைத்துள்ளதை அடுத்து அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆபிரிக்க கண்டத்தை ஜனநாயகப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலும், ஆபிரிக்காவுக்கும் லத்தீன் அமெரிக்காவுக்கும் இடையிலும்,ஆபிரிக்காவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலும் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசியாவுக்கும் யூரோ ஏஷியாவுக்கும் இடையிலும் ரஷ்யாசீனாஇந்தியா என்பனவற்றுக்கும் இடையில் தொடர்புகள் ஆரம்பித்துள்ளன.

புதிய பொருளாதார நாடுகளான பிரேஸில் இந்தோனேசியா, தென்னாபிரிக்கா, ஆர்ஜன்ரீனா ஆகிய நாடுகள் முன்னணி நிலைக்கு வந்துள்ளன. சர்வ வியாபியான டொலரின் செல்வாக்கு பலமிழந்துள்ளது. உலக நாடுகளின் வெளிநாட்டு நாணயமாற்று றிசேவ்களில் 75 சதவீதமானவை அபிவிருத்தியடையும் நாடுகளுக்கு சொந்தமானவை. உலக வெளிநாட்டு நாணயமாற்று றிசேவ்வில் மூன்றில் ஒரு பங்கு சீனா வசமுள்ளது.

உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளில் புதியதான உண்மை நிலை இவையாகும். இதன் காரணமாகவே இலங்கை சம்பந்தமாக மேற்கு வல்லரசுகள் தங்களது சொந்த விருப்பத்தின்படி நடந்துகொள்ள முடியாமலும் சொந்த விருப்பத்தை திணிக்க முடியாமலும் உள்ளன. இதனை ஏற்றுக்கொள்வதற்கு பிரபாகரன் தவறியிருந்தார்.

உலகின் இடதுசாரி இயக்கம் மறுமலர்ச்சி கண்டுள்ளது. உலக நாடுகள் மத்தியில் இடதுசாரி உலக மயமாக்கலும் முற்போக்கு சக்திகளின் அதிகாரமும் இன்று மேம்பாடு கண்டுள்ளன. எனவே, சர்வதேச மற்றும் தேசிய அரசியல் சூழல் எமக்கு சாதகமாகவுள்ளன. வடக்கிலும் தெற்கிலுமுள்ள முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இதுவாகும். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 67 ஆவது ஆண்டு நிறைவின் போது வடபகுதி மக்களுக்கு விடுக்கப்படும் செய்தி இதுவே.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 
 
 
 

 

 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!