நாட்டின்
அரசியலமைப்பைத் திருத்துவது அல்லது
முழுமையாக மாற்றுவது தொடர்பாக
அரசாங்கம் முனைப்புக் காட்டிவரும் ஒரு
சூழ்நிலையில் இந்த அரசியலமைப்பு
மாற்றம் தொடர்பில் அரசியல் கட்சிகளின்
நிலைப்பாடு எவ்வாறாக உள்ளது என்பதை
நாட்டிலுள்ள ஊடக நிறுவனங்களின்
ஆசிரியர்கள், சிரேஷ்ட
ஊடகவியலாளர்களுடனான செயலமர்வொன்று
தேசிய ஐக்கியத்துக்கான
பாக்கீர்மாக்கார் நிலையத்தின்
ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை கொழும்பு
வெள்ளவத்தை மெøரன் டிரைவ் கிராண்ட்
ஹோட்டலில் முன்னாள் அமைச்சரான
பேராசிரியர் கருணாசேன கொடிதுவக்கு
தலைமையில் நடைபெற்றது.
காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையில்
சுமார் ஐந்து மணிநேரம் இடம்பெற்ற
இந்தச் செயலமர்வில் ஆளும்தரப்பு
எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளின்
முக்கிய பிரமுகர்கள் பலரும்
கலந்துகொண்டு இன்றைய அரசியல் நிலைமைகள்
அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறை
மாற்றம் என்பன தொடர்பில் நிறையவே
கருத்துகளை வெளியிட்டனர்.
இவர்கள் அனைவருமே அரசியலமைப்பு
மாற்றமும் தேர்தல்முறை மாற்றமும்
இன்றைய காலகட்டத்தில் மிக
அவசியமானதென்பதை வலியுறுத்தியமை இங்கு
குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
இச்செயலமர்வில் கருத்துத்
தெரிவிப்பதற்காக
அழைக்கப்பட்டிருந்தவர்களில் அமைச்சர்
பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் சார்பில்
பாராளுமன்ற உறுப்பினர் சரவண பவனும்
கலந்துகொள்ளாமை ஒரு இடைவெளியாகவே
அமைந்தமை
சுட்டிக்காட்டப்படவேண்டியதொன்றாகும்.
ஏனெனில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின்
தலைவராக இருக்கின்றார். அவரிடமிருந்து
நிறையவே தகவல்களைப் பெற்றுக்கொள்ள
முடியும் என்ற எதிர்பார்ப்பு
அனைவரிடமும் காணப்பட்டது. அதேபோன்று
தமிழ் மக்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பிடமிருந்து தமிழ்
மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளை
அறிந்துகொள்வதற்கான வாய்ப்பும்
கைநழுவிப் போனமையானது கவலை
தரக்கூடியதாகும்.
அரச தரப்பிலிருந்து பங்கேற்கவிருந்த
அமைச்சர் டலஸ் அழகப்பெரும முக்கிய
பணிகளின் நிமித்தம் கலந்துகொள்ள
முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து தமது
கட்சியினதும் அரசினதும் நிலைப்பாடு
எவ்வாறானது என்பதை விளக்கும் உரையின்
எழுத்துப் பிரதியை அனுப்பி
வைத்திருந்தார். அந்த உரையினை சிரேஷ்ட
ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம்
மீடியோ போரம் தலைவருமான அல்ஹாஜ்
என்.எம்.அமீன் சபையில் வாசித்தார்.
தேசத்தை ஐக்கியப்படுத்தும் ஜனநாயக
அரசியலமைப்பை நோக்கி... எனும்
கருப்பொருளிலான இந்தச் செயலமர்வின்
முக்கியத்துவம் அவசியத்தன்மைகள்
குறித்துத் தேசிய ஐக்கியத்துக்கான
பாக்கீர் மாக்கார் நிலையத்தின் தலைவர்
இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
ஆரம்பத்தில் விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து முதலில் உரையாற்றிய
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்
செயலாளரும் புனர்வாழ்வு, சிறைச்சாலைகள்
மறுசீரமைப்பு அமைச்சருமான டியூ
குணசேகர தமதுரையில் தெரிவித்ததாவது;
அரசியலமைப்பு முழுமையாக
மாற்றப்படவேண்டுமென்பதே எமதுகட்சியின்
நிலைப்பாடாகும். அவ்வாறன்றி திருத்தம்
கொண்டு வந்தால் போதுமென்று நினைத்தால்
அதில் நிறையவே மாற்றங்கள்
கொண்டுவரப்படவேண்டும். நிறைவேற்று
அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது அதில்
பிரதானமானதொன்றாகும். நிறைவேற்று
அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து அந்த
அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்படலாம்
அல்லது பாராளுமன்றத்துக்கு
வழங்கப்படலாம். ஆனால், பெயரளவில் பதவி
மாற்றம் எந்த விதத்திலும்
ஏற்புடையதல்ல. ஜனாதிபதிக்கோ,
பிரதமருக்கோ அதிகாரங்கள்
குவிக்கப்படக்கூடாது முழுமையான
அதிகாரம் மக்கள் மன்றமான
பாராளுமன்றத்துக்கே இருக்க வேண்டும்.
அத்துடன் அரசியலமைப்பு மாற்றமானது
சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்களுக்கு
நம்பிக்கையூட்டுவதாக அமையவேண்டும்.
அதனைத் தேசிய ஒருமைப்பாட்டின்
அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படவேண்டும்.
எமது நிலைப்பாட்டின் படி
நிறைவேற்றதிகாரம் பாராளுமன்றத்துக்கு
வழங்கப்படுவதோடு ஜனாதிபதி பதவி
சம்பிரதாயபூர்வமாக இருந்தால்
போதுமானதாகும்.
நாடு சுதந்திரமடைந்த வேளையில்
உருவாக்கப்பட்டிருந்த சோல்பரி
அரசியலமைப்பில் ஜனநாயக உரிமைகள்
பாதுகாக்கப்படவேண்டுமென
வலியுறுத்தப்பட்டிருந்தபோதிலும் அது
பெரும்பாலும நடைமுறைச்
சாத்தியமாகவில்லை என்றே கூற வேண்டும்.
அதன் பின்னர் 72 இலும் 77 இலும்
கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிலும்
குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் நலன்களை
மையமாக வைத்தே தயாரிக்கப்பட்டன. 1948
முதல் இன்று வரையில் சிறுபான்மை தமிழ்
பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கத்
தீர்வுகாண்பதற்கான உறுதியான திட்டங்கள்
எதுவுமே முன்வைக்கப்படவில்லை. அதன்
காரணமாகவே தமிழ் மக்கள் தனிநாட்டுக்
கோரிக்கையை முன்வைத்தனர்.
அதன்பின்னர் தமிழ் இளைஞர்கள் ஆயுதப்
போராட்டத்தையும் தொடங்கினர். தமிழ்
மக்களின் ஆயுதப் போராட்டத்தைத்
தடுப்பதற்கு பலவழிகள் அன்று இருந்த
போதிலும் அரசுகள் அதனைச் செய்வதில்
கவனம் செலுத்தத் தவறினர் என்றே
சொல்லவேண்டும்.
78 இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு
இதுவரையில் 17 தடவைகள்
திருத்தப்பட்டுள்ளன. இந்த அரசிலமைப்பு
மாத சஞ்சிகை போன்று அடிக்கடி
மாற்றத்துக்குள்ளாகியுள்ளது. இதனால்
அரசியலமைப்புக்குரிய பெறுமானத்தைக்
கூட அது இழந்துள்ளது.
இன்று அரசிலயமைப்பை மாற்றுவது அல்லது
திருத்தம் கொண்டுவருவது பற்றிப்
பேசப்படுகின்றது. அது எவ்வாறான மாற்றம்
அல்லது திருத்தம் என்பது பற்றி எனக்கு
எதுவுமே தெரியாது. எமது நிலைப்பாடு
அரசியலமைப்பானது தேசிய
ஒருமைப்பாட்டுடன் கூடியதாக
உருவாக்கப்பட வேண்டுமென்பதே ஆகும்.
குறிப்பிட்ட சிலருக்காக அரசியல்
கட்சிகள் மட்டும் பேசி அது
உருவாக்கப்படக்கூடாது. அனைத்துத்
தரப்புகளையும் உள்ளடக்கிய தேசிய
ஒருமைப்பாட்டின் கீழ் ஏற்படுத்தப்பட
வேண்டும். அதன் மூலமே தேசிய
ஐக்கியத்துக்கான வழி காட்ட முடியும்.
தமிழ் மக்களுக்கு நம்பிக்கை
தரக்கூடியதாக அது அமையவேண்டும். பதவிப்
பெயர்கள் மாறுவதால் எந்தவித பயனும்
இல்லை. அதிகாரம மட்டுப்படுத்தப்பட
வேண்டும். பழைய பாராளுமன்ற முறையே எமது
நாட்டுக்குப் பொருத்தமானது. நிறைவேற்று
அதிகார ஜனாதிபதிமுறை
ஒழிக்கப்படவேண்டும். ஜனாதிபதி பதவி
சம்பிரதாய பூர்வமானதாக இருந்து
விட்டுப்போகலாம்.
எமது அரசியல் கலாசாரம் மோசமான
நிலைக்குத் தள்ளப்படுவதற்கு இன்றைய
தேர்தல் முறையும் ஒரு காரணமாகும்.
இந்தத் தேர்தல் முறை உடனடியாக
மாற்றப்பட வேண்டும். கலப்புத் தேரதல்
முறைதான் மிக அவசியமானது. அடுத்தது
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம
வழங்கப்படுவதை நாம் முற்றாக
எதிர்க்கின்றோம். அரசியலமைப்பில் அது
குறிப்பிடப்பட்டிருப்பினும் அதனை
வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
முடிந்தால் அரசியலமைப்பிலிருந்து அந்த
விதியை நீக்கவிட வேண்டும்.
பொலிஸ் ஆணைக் குழு உள்ள நிலையில்
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்
வழங்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
அமைச்சர் டலஸின் கருத்து
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில்
இளைஞர் விவகார விவகார வேலைவாய்ப்பு
அமைச்சர் டலஸ் அழகப்பெரும
தெரிவித்திருக்கும் கருத்தில் நாட்டின்
அரசியலமைப்பை அவசர அவசரமாக
மேற்கொள்ளப்படலாகாது. அதேபோன்று
திருத்தங்கள் விடயத்திலும அவசரம்
காட்டக்கூடாது.
அரசியலமைப்பு மாற்றமோ, திருத்தமோ
திருட்டுத்தனமாக, இரகசியமாக,
மறைக்கப்பட்ட நிகழ்ச்சி
நிரலுக்குட்பட்டதாக இருந்து
விடக்கூடாது. அது நாட்டு மக்களுக்கு
பகிரங்கமானதொன்றாக அமையவேண்டும்.
அதனை மேற்கொள்வதற்கு இன்று அரசியல்
இணக்கப்பாடொன்று எட்டப்பட்டுள்ளது.
புதிய ஆரம்பமொன்றுக்கான கதவுகள்
திறக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக்
கட்சி இந்தச் செயற்பாட்டுக்குக்
கூடுதல் அவதானத்தை வெளிப்படுத்தியுள்ள
நிலையில் சில தீய சக்திகள் இந்த
முயற்சியை சீர்குலைப்பதில்
முனைப்புக்காட்டுகின்றனர்.
தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு
தனிநாடு தீர்வாக அமைய முடியாது.
தனிநாட்டுப் போராட்டம் தவறானதொன்றாகும்.
கடந்த காலத் தவறுகளை இன்னொரு தடவை
செய்ய தமிழ் மக்களோ வேறு எவருமோ
முனையக்கூடாது. அதனால் ஏற்பட்ட
பலாபலன்களை நாம் அனுபவித்ததை ஒருபோதும்
மறந்து விடக்கூடாது எனக்
குறிப்பிட்டிருக்கிறார்.
ரவூப் ஹக்கீம் பேச்சு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
ரவூப் ஹக்கீம் தமதுரையின் போது
தெரிவித்ததாவது;
போருக்குப் பின்னரான சூழ்நிலையில்
சிறுபான்மை மக்கள் முழுமையான
அரசியலமைப்பு மாற்றம் ஒன்றையே வேண்டி
நிற்கின்றனர். அத்துடன் கூடுதலான
அதிகாரப் பகிர்வையும் அவர்கள்
எதிர்பார்க்கின்றனர். மாறாக
அரசாங்கத்தின் சொந்தத் தேவைகளைப்
பூர்த்தி செய்யும் அரசியலமைப்பு
மாற்றத்தை சிறுபான்மை மக்ளகள்
ஒருபோதும் விரும்பவில்லை.
அதிகாரப் பகிர்வு விடயத்தில் அரசாங்கம்
அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.
அரசியலமைப்புத் திருத்த விவகாரத்தில்
கூட அரசாங்கம் தமக்குத் தேவையான
விடயங்களை உட்புகுத்திக் கொள்வதிலேயே
ஆர்வம் காட்டிவருகின்றது. அரசியலமைப்பு
மாற்றம் தொடர்பாக மூடிய அறைகளுக்குள்
மாத்திரம் அல்லது முக்கிய அரசியல்
கட்சகிகளுடன் மாத்திரமோ
கலந்துரையாடல்களை நடத்துவதை விட அதனை
ஒருபொதுவான பேசு பொருளாக்குவதே
சிறப்பானதாகும். ஊடகங்கள் மத்தியிலும்
இவ்விடயம் கலந்துரையாடலுக்கு
விடப்பட்டு அவற்றிலிருந்து பெறப்படும்
கருத்துகளை ஆராய்ந்தே இறுதி முடிவு
எட்டப்படவேண்டும்.
ஆனால், இன்று அவ்வாறான
முன்னெடுப்புகளுக்குப் பதிலாக அவசர
அவசரமாக அரசியலமைப்பு மாற்றத்தை
ஏற்படுத்த அரசு முனைவதையே காணமுடிகிறது.
இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
இந்த விடயத்தில் போதிய கால அவகாம்
வழங்கப்படவேண்டும். நாட்டு மக்களின்
கருத்துகளும் கேட்டறியப்படவேண்டும்.
தனிநபரிடம் அதிகாரம்
குவிந்துகிடப்பதைத் தவிர்த்து
பாராளுமன்றத்தை பலமுள்ளதாக ஆக்கும்
வகையில் அதிகாரம் பகிடப்வேண்டும்
என்பதே எமது நிலைப்பாடாகும்.
உதய கம்மன்பில
ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை
வகுப்பாளரும் மேல் மாகாண அமைச்சருமான
உதய கம்மன்பில கருத்துத்
தெரிவிக்கையில்;
மாகாணங்களுக்கு அதிகாரம்
பரவலாக்கப்படுவதை நாம் எதிர்க்கின்றோம்.
அதேசமயம் அதிகாரப் பரவலாக்கத்துக்கு
நாம் ஒருபோதும எதிர்ப்புக்காட்டவில்லை.
அதிகாரப் பரவலாக்கம் தொடர்பிலான எமது
நிலைப்பாட்டை சிலர் தவறாகப்
புரிந்துகொண்டிருக்கின்றனர். கிராமிய
மட்டத்துக்கு அதிகாரம்
பரவலாக்கப்படவேண்டும் என்பதை எமது
நிலைப்பாடாகும்.
இன்று உயர்மட்டத்தினர் அதிகாரங்களைத்
தமது கைகளுக்குள் வைத்திருப்பதோடு.
அதனை நன்கு
அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.
பதிலாக கிராமிய மட்டத்தில் ஜனசபாக்கள்,
கிராம சேவையாளர் பிரிவு மட்டத்தில்
அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.
மாறாக மாகாண சபைகளுக்கு அதிகாரம்
பரவலாக்கப்படுவது இன்னொரு
உயர்மட்டத்துக்கு அதிகாரத்தைப்
பெற்றுக்கொடுப்பதாகவே நாம்
கருதுகின்றோம். இதனை நாம் ஒருபோதும்
விரும்பவில்லை.
விஜித ஹேரத்
ஜனநாயகத் தேசிய முன்னணியின் செயலாளரும்
பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத்
தெரிவிக்கையில்;
அரசியலமைப்பு முழுநாட்டினதும் மக்களது
உரிமைகளைப் பாதுகாப்பதாக அமையவேண்டும்.
ஒருசிலருக்கோ, ஒருபிரிவினருக்கோ நன்மை
பயப்பதாக அது அமைந்து விடக்கூடாது.
சிங்களம் மட்டும் சட்டம், பௌத்த
சமயத்துக்கு மாத்திரம் முன்னுரிமை
எமுது நாட்டுக்குப் பொருந்தக்
கூடியதல்ல.
இலங்கை பல்லின பலமத மக்களைக் கொண்ட
நாடு இங்கு எல்லோரதும் உரிமைகள்
சமமாகப் பேணப்படவேண்டும். 1956 இல்
கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும்
சட்டம் காரணமாகவே நாட்டில்
பிரிவினையும் இனமோதல்களும் ஏற்படக்
காரணமாக அமைந்தது.
1972 அரசியலமைப்பின் தரப்படுத்தல் முறை
காரணமாகவே வடக்கு, கிழக்கு தமிழர்கள்
ஆயுதமேந்தும் நிலை உருவானமை தற்கால
அரசியலமைப்புத் திருத்தத்தை விட
நிரந்தரமானதொரு அரசியலமைப்பு
மாற்றத்தையே நாட்டு மக்கள்
விரும்புகின்றனர். இது தொடர்பிலான
யோசனைகளை அரசு முதலில் முன்வைக்க
வேண்டும். அதனடிப்படையில் நாம் ஒன்று
கூடிப் பேச முடியும். அரசு கண்களைக்
கட்டி முட்டி உடைக்கும் விளையாட்டைக்
காட்ட முனையக்கூடாது எனத்
தெரிவித்தார். |
|
|
|