|
இன்று மன்னார் இலுப்பைக்கடவை பிரதேசத்தை
பாதுகாப்புப்படையினர் தமது முழுக்கட்டுப்பாட்டின்கீழ்
கொண்டுவந்துள்ளனர்.
மன்னார் இலுப்பைக்கடவை பகுதியினை படையினர்
நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவ
பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார
தெரிவித்தார். விடத்தல் தீவுப் பகுதியில்
நிலைகொண்டிருந்த படையினரே 10 கிலோமீற்றர்
வடக்கில் முன்னேறி இலுப்பைக்கடவையினை
முழுமையாக கட்டுப்பாட்டிக் கீழ கொண்டுவந்துள்ளதாகவும்
அவர் கூறினார். இது குறித்து பிரிகேடியர்
மேலும் தெரிவித்ததாவது
மன்னார் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்
பிரதேசத்தை நோக்கிய முன்னகர்வு முயற்சியினை
மேற்கொண்டு வரும் இராணுவத்தின் 58 ஆம்
இலக்கப் படையணியினராலேயே இலுப்பைக்கடவை
முழுவதும் கைப்பற்றப்பட்டது. நேற்று
முன்தினம் முழுவதும் மேற்கொண்ட முன்னகர்வு
முயற்சியின் பயனாகவே அப்பகுதி முழுவதும்
நேற்று காலை கைப்பற்றப்பட்டது.
கடந்த 16ஆம் திகதி படையினரால் கைப்பற்றப்பட்ட
விடத்தல் தீவுப் பகுதியிலிருந்து முன்னகர்ந்த
படையினர் விடத்தல் தீவுக்கு வடக்கில்
10 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள
இலுப்பைக்கடøவயினைக் கைப்பற்றும் முயற்சியில்
ஈடுபட்டிருந்தனர். கடந்த 21 வருட காலமாக
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்
கீழ் இருந்த இந்தப்பகுதி கடற்புலிகளின்
படையெடுப்பு நடவடிக்கைகளுக்கான பிரதான
நகராகக் காணப்பட்டது.
குறித்த பிரதேசத்தினைக் கைப்பற்றுவதற்காக
படையினர் மேற்கொண்ட தாக்குதல்களின்
போது விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட
சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரையில்
வெளியாகவில்லை.
தற்போது இலுப்பைக்கடவை பகுதியில்
முகாமிட்டுள்ள படையினர் அங்கிருந்து
சுமார் 2 கிலோமீற்றர் முன்னோக்கி நகர்ந்து
வருகின்றனர். |