|
|
| செய்தி்
புதுப்பிக்கப்பட்ட
நாள்: 29 ஜுலை, 2008
|
|
|
|
சிவாஜியை விட பல மடங்கு அதிக
எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது குசேலன்:
ரஜினியைக் கொண்டாடும் அமெரிக்கர்கள்!!
சிவாஜியை விட பல மடங்கு அதிக
எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது
சூப்பர்ஸ்டார் ரஜினியின் குசேலன்
திரைப்படத்துக்கு, இங்கு மட்டுமல்ல...
அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான்
போன்ற வெளிநாடுகளிலும்.
தமிழகத்தில் கூட இந்த அளவு
குசேலனுக்குக் கொண்டாட்டங்கள்
நடக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பும்
வகையில் அமெரிக்காவின் பல நகரங்களில்
ரஜினிக்கு கட் அவுட், அன்னதானம்,
சிறப்பு நிகழ்ச்சிகள் என குசேலன்
திருவிழா களைகட்டி வருகிறது.
அமெரிக்காவின் வர்த்தகத் தலைநகர்
எனப்படும் நியூயார்க்கின் நியூ ஜெர்ஸி
பகுதியில் குசேலன் வெளியாகும்
திரையரங்கின் முன் ரஜினியின் மிகப்
பெரிய வினைல் கட் அவுட்
வைக்கப்பட்டுள்ளது. இதை ஒரு அதிசயம்
போல் பார்த்துச் செல்லும்
அமெரிக்கர்கள், ஆர்வம் மிகுதியில்
இந்த கட் அவுட்டுகளுக்கு முன் நின்று
புகைப்படம் எடுத்துக் கொள்வதும்
நடக்கிறது.
சிகாகோவில் நண்பர்களுக்கு
விருந்து!!
குசேலன் திரைப்படம் இரு
நண்பர்களுக்கிடையிலான நெகிழ்ச்சியான
நட்பைச் சொல்லும் கதை என்பதால்
சிகாகோவில் ரஜினி ரசிகர்கள் இணைந்து
தங்கள் நெருங்கிய நண்பர்களையெல்லாம்
வரவழைத்து விருந்தளித்த சுவாரஸ்யமான
நிகழ்ச்சி நேற்று பிற்பகல் நடந்தது.
சிகாகோவின் முக்கிய வீதியான
நேபர்வில்லேயில் ரஜினியின் 25 அடி நீள
வினைல் பேனர் தொங்க விடப்பட்டுள்ளது.
சிகாகோவில் குசேலனுக்கு டிக்கெட்
முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட சில
மணிநேரங்களில் முழுவதுமாக விற்றுத்
தீர்ந்து போயுள்ளது. இந்த
டிக்கெட்டுகளுடன் குசேலன் ஆடியோ
சிடிக்களை இலவசமாக விநியோகித்துள்ளர்.
இதில் அதிசயம் என்னவென்றால், முதல்
நாள் ஷோவுக்கு டிக்கெட்
வாங்கியவர்களில் கணிசமான
அமெரிக்கர்களும் உண்டு என்பதுதான்.
ஒரு காலத்தில் நாம் அவர்களுடைய சூப்பர்
ஸ்டார்கள் அர்னால்ட்
ஷ்வார்ஸ்நெக்கரையும் ஸ்டெல்லோனையும்
கொண்டாடினோம். இப்போது அவர்கள் முறை...
நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியைக்
கொண்டாடுகிறார்கள்.
ரசித்து மகிழ்வோமே! |
|
|
இதுவரை
விளம்பரப் படங்களில் மட்டுமே நடித்து
வந்த சச்சின் டெண்டுல்கர் பிள்ளையார்
படத்தில் நடிக்க ஒப்புதல்.
இதுவரை விளம்பரப் படங்களில் மட்டுமே
நடித்து வந்த உங்கள் சச்சின்
டெண்டுல்கர் முதல் முறையாக வெள்ளித்
திரையிலும் தனது நடிப்பாற்றலைக் காட்ட
வருகிறார்.
கடவுள் கணேசரின் திருவிளையாடல்களை
விளக்கும் பாலிவுட் படம் ஒன்றில்
நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின்
டெண்டுல்கர் கேமியோ ரோலில்
நடிக்கவுள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் சினிமாவிலும்
அவ்வப்போது தலை காட்டுவது சகஜமாகி
வருவது. அந்த வகையில் சச்சின்
டெண்டுல்கரும் நடிக்க வருகிறார்.
விக்னஹர்த்த ஸ்ரீ சித்திவிநாயக் என்று
பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில்
கிரிக்கெட் வீரராகவே சச்சின்
நடிக்கிறார். இதுகுறித்து இப்படத்தை
தயாரிக்கும் ராஜீவ் சிங்வி கூறுகையில்,
சிறிய ரோலில் சச்சின் நடிக்கிறார் ஒரு
பாடல் காட்சியிலோ அல்லது கிரிக்கெட்
விளையாடுவது போன்றோ சச்சின் நடிப்பார்.
சச்சின் விநாயகரின் பக்தர். எனவே இந்த
கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று
கேட்டதும் அவர் ஒப்புக் கொண்டார்
இலவசமாக நடித்துத் தரவும் ஒப்புக்
கொண்டுள்ளார் என்றார் சிங்வி.
இப்படத்தை மும்பையில் உள்ள பிரபல
சித்திவிநாயக் கோவில் அறக்கட்டளை
தயாரிக்கிறது.
அறக்கட்டளை தலைவர் சுபாஷ் மேயகர்
கூறுகையில், சித்திவிநாயக் கோவிலுக்கு
பல வருடங்களாக சச்சின் வந்து
செல்கிறார். தனது கிரிக்கெட்
வாழ்க்கைக்கு விநாயகர் பல வழிகளிலும்
உறுதுணையாக இருப்பதால் இந்த படத்தில்
நடிக்க அவர் மனமுவந்து ஒத்துக்
கொண்டார் என்றார்.
தற்போது இலங்கை டெஸ்ட் பயணத்தில்
இருக்கும் சச்சின் அதை முடித்துக்
கொண்டு நாடு திரும்பியதும்
ஷூட்டிங்குக்குப் போகிறாராம். அடுத்த
மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு
தொடங்குகிறது படத்தில் அமிதாப் பச்சன்
தனது குரலை கொடுக்கவுள்ளாராம்.
சச்சினை 'பெப்சி' கைவிட்டாலும் 'பிள்ளையார்'
கைவிடவில்லை. சச்சின், நல்லா நடிங்க,
அப்படியே ஆட்டத்தையும்
பார்த்துக்குங்க! |
|
|
அமோகமாக வரவேண்டும் என்ற ஆசையில் அமோஹா
என்ற பெயர் சூட்டிக் கொண்டு ஜே.ஜே.
படத்தில் திறமை.
அமோகமாக வரவேண்டும் என்ற ஆசையில் அமோஹா
என்ற பெயர் சூட்டிக் கொண்டு ஜே.ஜே.
படத்தில் திறமை காட்டினாரே... ஒரு
டெல்லி அழகி, நினைவிருக்கிறதா?
தமிழ் கைவிட்ட கடுப்பில் மும்பைக்குப்
போனவரின் மீது ராம் கோபால் வர்மாவின்
பார்வை விழ, அவரது ஆஸ்தான நடிகை ஆனார்.
பல படங்களில் ஒரிஜினல் பெயரான நிஷா
கோத்தாரி என்ற பெயரிலேயே நடிக்க
வைத்துப் பார்த்தார்.
ஆனால், தேறவில்லை நிஷா. இதையடுத்து
அப்படியே தெலுங்குக்கு வந்தார்.
பாலகிருஷ்ணாவுடன் ஒரு படம் நடித்தார்.
பெயர் ஒக்க மக்கடு.
பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் இதுவரை
பாலகிருஷ்ணாவுக்கு இப்படி ஒரு தோல்வி
கிடைத்ததில்லை என்று சொல்லுமளவுக்கு,
படுதோல்வியடைந்தது அந்தப் படம்.
ஆனாலும் அம்மணிக்கு அடுத்த வாய்ப்பும்
கிடைத்தது, ஹரி ஓம் படத்தில். இது
சின்ன பட்ஜெட் படம்.
இனி தெலுங்கு வேலைக்காகாது எனப்
புரிந்து கொண்ட நிஷா, மீண்டும்
இந்தியில் நுழைந்து கவர்ச்சியில்
களேரம் செய்து வருகிறார், பெரும்பாலும்
ராம் கோபாலின் படங்களில்...
இந் நிலையில் கோலிவுட் பக்கமாய் கதவைத்
தட்டிப் பார்த்தால் நிஷா, அவரது நல்ல
நேரம் உடனே திறந்து கொண்டது கதவு.
கைமேல் பலனாக இரு பட வாய்ப்புகளும்
கிடைக்க, இப்போது தி.நகர் பக்கம்
ஏதாவது வீடு வாடகைக்குக் கிடைக்குமா
என தேடிக்கொண்டிருக்கிறார் நிஷா.
தயாரிப்பாளர் அடி வயிற்றில் கைவைத்து
விட்டார் என அலறிக்கொண்டு ஓடினாரே
மாளவிகா, அதே கார்த்திகை படத்தில்,
மாளவிகாவுக்குப் பதில் நடிக்கப்
போகிறவர் இந்த நிஷா கோத்தாரிதானாம் (அது
சரி... இந்தப் படத்தில் நமீதா
நடிப்பதாகச் சொன்னாரே இயக்குநர்,
என்னாச்சு? அவருக்கும் அதே பிரச்சினையோ!!).
இதைத் தவிர விஜய் நடிக்கும் வில்லு
படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம்
போடும் வாய்ப்பும் கிடைத்துள்ளதாம்.
செகன்ட் இன்னிங்ஸ் வெயிட்டா இருக்கும்
போலிருக்கே! |
|
|
ஒருவழியாக
கர்நாடகத்தில் குசேலன் திரைப்படத்தை
எவ்வித பிரச்சினையும் இல்லாமல்
வெளியிட
க்ரீன்
சிக்னல்!!
ஒருவழியாக கர்நாடகத்தில் குசேலன்
திரைப்படத்தை எவ்வித பிரச்சினையும்
இல்லாமல் வெளியிட கர்நாடக
பிலிம்சேம்பர் அனுமதியளித்துள்ளது.
ஆனாலும் பெங்களூர் நகரில் மட்டும் 13
திரையரங்குகளில் 10 பிரிண்டுகள்
மட்டுமே வெளியிட வேண்டும் என்ற ஒரு
நிபந்தனையோடு இந்த அனுமதியை
வழங்கியுள்ளது கர்நாடக பிலிம்சேம்பர்.
ஒகேனக்கல் பிரச்சினையில் தமிழகத்துக்கு
ஆதரவாகக் குரல் கொடுத்ததோடு, இந்தப்
பிரச்சினையை கர்நாடகத் தலைவர்கள்
அரசியலாக்குகிறார்கள் என கண்டித்துப்
பேசினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இதனால் ஆத்திரமடைந்த கன்னட ரக்ஷன
வேதிகே தலைவர் வாட்டாள் நாகராஜ்,
ரஜினியின் படங்களை இனி கர்நாடகாவில்
திரையிட விடமாட்டோம் என ஆர்ப்பாட்டம்
நடத்தினார். ரஜினியோ, என் படம்
கர்நாடகாவில் வெளியாகாவிட்டால் எனக்கு
ஒரு நஷ்டமும் இல்லை, என்று பதிலுக்குக்
கூறி அமைதியாகிவிட்டார்.
இதைத் தொடர்ந்து ரஜினியின் சமீபத்திய
படமான குசேலன் கர்நாடகாவில் வெளியாகுமா
என்ற கேள்வி எழுந்தது.
கர்நாடகத் திரயுலகில் உள்ள ரஜினியின்
நெருங்கிய நண்பர்கள் பிரச்சினைக்குத்
தீர்வு காண தீவிர முயற்சி மேற்கெண்டனர்.
கர்நாடக பிலிம்சேம்பர் தலைவர் நடிகை
ஜெயமாலாவும் இதற்கான முயற்சிகளில்
இறங்கினார்.
கன்னட மக்களையும் அரசியல்வாதிகளையும்
இழிவாகப் பேசிய ரஜினி வெளிப்படையாக
மன்னிப்புக் கேட்டால் மட்டுமே படத்தை
வெளியிட அனுமதிப்போம் என வாட்டாள்
நாகராஜ் கூறிவிட்டார். ஆனால் ரஜினி
கடைசி வரை மன்னிப்புக் கேட்க முடியாது
எனக் கூறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து நிலைமையைப்
பரிசீலித்த பிலிம்சேம்பர், கன்னட
ரக்ஷன வேதிகேவால் படத்துக்கு எந்த
பாதிப்பும் வராமல் பார்த்துக்
கொள்வதாகவும், பெங்களூரில் 13
திரையரங்குகளில் 10 பிரிண்டுகள் வரை
குசேலனைத் திரையிடலாம் என்றும் பச்சைக்
கொடி காட்டியுள்ளது.
இதுகுறித்து ஜெயமாலா
கூறியதாவது:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு
மிகப்பெரிய நடிகர். அவரை மன்னிப்புக்
கேட்கச் சொல்வது தேவையற்றது. அவர்
கேட்கவும் மாட்டார். கன்னட
திரைப்படத்துறைக்கு ரஜினி செய்துள்ள
உதவிகளையும் நாங்கள் மறந்துவிடவில்லை.
அவரால் இந்த அமைப்பின் எத்தனையோ
உறுப்பினர்கள் நல்ல நிலைக்கு
வந்திருக்கிறார்கள். இப்போது குசேலன்
படத்தை வாங்கியிருப்பவரும் இந்த
பிலிம்சேம்பர் உறுப்பினர்தான்.
தென்மாநில மொழிகளுக்குள் ஒருங்கிணைப்பை
ஏற்படுத்தும் விதத்தில், தன்னுடைய
தமிழ்ப் படத்தில் கன்னடத் திரையுலகின்
தந்தை எங்கள் ராஜ்குமார் பெயர் மற்றும்
படத்தைக் காட்டியுள்ளார் சூப்பர்ஸ்டார்.
நான்கு மாநிலங்களின் திரையுலக
மேதைகளையும் கவுரவப்படுத்தும்
விதத்தில் நடந்துகொண்டுள்ள அவரைப் போய்
மன்னிப்புக் கேட்கச் சொல்லி
அவமானப்படுத்த முடியுமா? என்றார்.
இந்தப் படத்தின் கர்நாடக உரிமையை
ரூ.1.90 கோடி கொடுத்து வாங்கியுள்ள
நிரஞ்சன் கூறுகையில், ரஜினி
படங்களுக்கு யாராலும் தடை போட முடியாது.
அவரால் கன்னடத் திரையுலகுக்கே
பெருமைதான். அவர் தவறாக எதையும்
கூறிவிடவில்லை.
மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர்
பாலச்சந்தர், கன்னடத் திரையுலகுக்கு
ஆற்றிய பணி சாதாரணமானதல்ல. இப்படத்தின்
இயக்குநர் வாசு எங்களில் ஒருவர். எனவே
இந்தப் படத்தை எந்தத் தடையும்,
பிரச்சினையுமில்லாமல் கர்நாடகா
முழுவதும் ரிலீஸ் செய்கிறோம்.
பெங்களூரில் மட்டும் 10 பிரிண்டுகள்,
13 தியேட்டர்களில் வெளியாகிறது. மற்ற
பகுதிகளின் விவரங்களை பின்னர்
தெரிவிப்போம் என்றார். |
|
|
நடிக்க வந்து 8 ஆண்டுகளாகியும்
சங்கத்தில் உறுப்பினராகாமல் இருந்த
நடிகை ஜெனிலியாவுக்கு தடை- நடிகர்
சங்கம் அதிரடி!!
நடிக்க வந்து 8 ஆண்டுகளாகியும்
சங்கத்தில் உறுப்பினராகாமல் இருந்த
நடிகை ஹரிணி என்ற ஜெனிலியா
டிசூசாவுக்கு தடை விதிக்க நடிகர்
சங்கம் முடிவு செய்துள்ளது.
ஒரு வாரத்துக்குள் உடனடியாக
உறுப்பினராகாவிட்டால் அவர் எந்த
தமிழ்ப் படத்திலும் நடிக்க முடியாத
அளவுக்கு தடை விதிக்கப்படும் என்றும்
அறிவித்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக பதில்
அளிக்குமாறு ஜெனிலியாவுக்கு நடிகர்
சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் கடிதம்
அனுப்பியுள்ளனர்.
பாய்ஸ் படத்தில் ஹரிணி எனும் பெயரில்
ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்
ஜெனிலியா. கோவாவைச் சேர்ந்த இவர்
தற்போது தெலுங்கு, இந்திப் படங்களிலும்
பிஸியான நடிகையாக உள்ளார்.
ஆரம்பத்தில் வெளியான இவரது தமிழ்ப்
படங்கள் எதுவும் சரியாக ஓடாததால்,
ராசியில்லா நடிகையாகப்
பார்க்கப்பட்டார்.
ஆனால் சமீபத்தில் இவர் நடித்து
வெளியான சந்தோஷ் சுப்பிரமணியம் மிகப்
பெரிய வெற்றியைப் பெற்று ஜெனிலியாவின்
மார்க்கெட்டை தமிழில் உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தில்
உறுப்பினராகாமல் உள்ள நடிகர்
நடிகைகளின் பட்டியலை நேற்று
வெளியிட்டனர் சங்க நிர்வாகிகள்.
இதில் நட்சத்திர நடிகையான ஜெனிலியாவின்
பெயரும் இடம் பெற்றுள்ளது. மேலும்,
சென்னை-28 படத்தில் நடித்த யாரும்
இன்னமும் சங்கத்தில் உறுப்பினராக இல்லை.
சங்கத்தில் உறுப்பினராக
இல்லாதவர்களுக்கு எந்த ஒத்துழைப்பும்
இனி தரப்பட மாட்டாது என்றும்,
குறிப்பிட்ட தேதிக்குள்
உறுப்பினராகாவிட்டால், அவர்கள்
தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்கத்
தடை விதிக்கப்படும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை
நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. |
|
|
பெல்காம் அழகி லட்சுமிராயின் நீண்ட
நாள் கனவு ஒருவழியாக நிறைவேறிவிட்டது!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்
என தென் மொழிப் படங்களில் திறமை காட்டி
வந்த லட்சுமிராய்க்கு எப்படியாவது
பாலிவுட்டில் கால்பதித்துவிட வேண்டும்
என்ற தீராத ஆசை.
இதற்காக கடந்த 4 மாதங்களாக அவர் கடும்
முயற்சி செய்து வந்தார். இந்திப் படம்
ஒன்றில் அவர் நடிக்கப் போவதாக கடந்த
மாதமே செய்தி வெளியானது. ஆனாலும்
லட்சுமி ராய் அதுகுறித்து
அதிகாரப்பூர்வமாகக் கூறாமல் அமைதி
காத்து வந்தார்.
இப்போது சதீஷ் கவுசிக் இயக்கத்தில் ஹே
குஜ்ஜூ எனும் இந்திப் படத்தில் ஹிமேஷ்
ரேஷம்மியாவுக்கு ஜோடியாக இரண்டு பாடல்
காட்சிகளில் நடித்து முடித்த பிறகு,
தன் பாலிவுட் பிரவேசத்தை
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து லட்சுமி ராய் கூறுகையில்,
கடந்த 6 வருடங்களாக பல படங்களில்
நடித்தாலும், இப்போதுதான் என்னை ஒரு
முழுமையான நடிகையாக உணர முடிந்தது
இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில்
உருவாகிறது. என் முதல்படமே
பிரமாண்டமாய் அமைந்ததில் சந்தோஷம்.
இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கக்
காரணம் என்னுடைய தோற்றம் பஞ்சாபிப்
பெண்களைப் போல இருப்பதுதான் இந்தப்
படத்திலும் நான் பஞ்சாபிப்
பெண்ணாகத்தான் நடிக்கிறேன்.
அதே நேரம், இந்திப் படங்களில் வாய்ப்பு
கிடைப்பதால், தென் மாநில மொழிப்
படங்களில் நடிக்க மாட்டேன் என்று
அர்த்தமல்ல எனக்கு தென்மாநில மொழிப்
படங்கள்தான் முக்கியம் அனைத்து
மொழிகளிலும் கலக்குவதே என் லட்சியம்
என்கிறார் லட்சுமி ராய்.
கலக்குங்க, யார் வேணாம்னு தடுக்கப்
போறாங்க! |
|
|
ஜூலை 31-ம் தேதியன்று வெளியாகவிருக்கும்
ரஜினியின் குசேலன் திரைப்படத்துக்கு முன்னோட்டமாக
பஸ்-ஓட வைத்த நயன்!
ஜூலை 31-ம் தேதியன்று
வெளியாகவிருக்கும் ரஜினியின் குசேலன்
திரைப்படத்துக்கு முன்னோட்டமாக,
குசேலன் விளம்பரங்கள் மற்றும்
ரஜினியின் அரிய புகைப்படங்கள் அடங்கிய
தனி பஸ் ஒன்று ஒடவிடப்பட்டுள்ளது.
இன்று காலை அந்த பஸ்ஸை கொடியசைத்துத்
துவக்கி வைத்தார் குசேலன் படத்தில்
ரஜினியின் நாயகியாக நடித்துள்ள
நயன்தாரா. இந்த நிகழ்ச்சியில் படத்தின்
இயக்குநர் பி.வாசு, தயாரிப்பாளர்
புஷ்பா, அவரது கணவர் கந்தசாமி மற்றும்
பிக் ஆடியோ நிறுவனத்தினர் உள்பட பலர்
கலந்து கொண்டனர்.
படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ள
பிக் மியூசிக் நிறுவனத்தின்
கோடம்பாக்க அலுவலகத்திலிருந்து
புறப்பட்ட அந்த பஸ் இன்று முதல் சென்னை
மற்றும் புற நகர்களில் ஓடிக் கொண்டே
இருக்கும். ரஜினி ரசிகர்கள் அனைவரும்
இந்த பஸ்ஸில் ஏறி, தங்கள் தலைவரின்
அரிய புகைப்படங்களைப் பார்த்து
மகிழலாம்.
இந்த பஸ் தொடர்பான பல சிறப்புப்
போட்டிகளையும் பிக் எஃப்எம் வானொலி
தினசரி ஒலிபரப்ப உள்ளது. சரியாக பதில்
சொல்வோருக்கு குசேலன் டிக்கெட்
உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என
பிக் எஃப்எம் அறிவித்துள்ளது.
ரசிக மகா ஜனங்களே... ரெடி ஜூட்...! |
|
|
<<முன்னைய
பதிவுகள்>> |
|
|
|