|
|
|
|
|
 |
|
அரசியலமைப்பு
திருத்த பிரேரணை அடுத்த வாரம் அவசரமாக
சபைக்கு சமர்ப்பிப்பு அமைச்சரவை
ஏகமனதாக அங்கீகாரம் |
|
|
உத்தேச
அரசியலமைப்பு திருத்த யோசனைகளுக்கு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான
அமைச்சரவை நேற்று திங்கட்கிழமை
ஏகமனதாக
அங்கீகாரமளித்திருக்கிறது.அலரிமாளிகையில்
ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற
விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தேச
திருத்த நகல் வரைபை பிரதமர்
டி.எம்.ஜயரட்ண சமர்ப்பித்ததாக அரசாங்க
வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
திருத்த யோசனைகளை அமைச்சர்கள்
ஒருமனதுடன் அங்கீகரித்திருப்பதாகவும்
அவசர சட்டமூலப் பிரேரணை
பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படவிருப்பதாக அரசாங்க
பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான
கெஹலிய ரம்புக்வெல
கூறியுள்ளார்.நிறைவேற்று அதிகார
ஜனாதிபதியின் பதவிக்காலம் இரு தடவைகள்
மட்டுமே என்ற 1978அரசியலமைப்பு
ஏற்பாட்டை திருத்தும் அதாவது
ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை
முறையாகிலும் போட்டியிடக்கூடிய புதிய
ஏற்பாட்டுடனான திருத்தமும் உத்தேச
அரசியலமைப்பு திருத்தத்தில்
உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,17ஆவது திருத்தத்திலும்
மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக
அமைச்சர்களை மேற்கோள்காட்டி செய்திகள்
வெளியாகியுள்ளன.அரசியலமைப்பில்
எந்தவொரு திருத்தத்தை
மேற்கொள்ளவேண்டுமானாலும்
225.உறுப்பினர்கள் கொண்ட
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு
பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு
தேவைப்படும் நிலையில் அந்தப்
பெரும்பான்மை பலத்தை தற்போது ஆளும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
திரட்டியுள்ளது.
2010ஏப்ரலில் இடம்பெற்ற தேர்தலில்
ஐ.ம.சு.மு.வுக்கு 144எம்.பி.க்கள்
கிடைத்திருந்தனர். சபாநாயகரை தவிர்த்து
143.எம்.பி.க்களைக் கொண்ட அரச தரப்பில்
ஐ.தே.க.வில் போட்டியிட்டு வெற்றிபெற்ற
பிரபாகணேசன்,திகாம்பரம் ஆகிய இருவரும்
அரசிற்கு ஆதரவளித்த நிலையில் ஆளும்
தரப்பின் பலம் 145 ஆக அதிகரித்திருந்த
நிலையில் கடந்த வார இறுதியில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
8.எம்.பி.க்கள் குழு அரசுக்கு
ஆதரவளித்ததால் அரசின் பாராளுமன்ற பலம்
153 ஆக அதிகரித்திருக்கிறது.
சபாநாயகரை தவிர்த்து எமக்கு சபையில்
154.எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது.கண்டி
மாவட்ட ஐ.தே.க.எம்.பி.ஏ.காதர் ஏற்கனவே
அரசிற்கான ஆதரவை
வெளிப்படுத்தியிருக்கிறார் என்று
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று
தெரிவித்தார்.பிரதான எதிர்க்கட்சியான
ஐ.தே.க.வின் பாராளுமன்ற பலம் தற்போது
50.ஆக குறைவடைந்துவிட்டது.மற்றொரு
எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புக்கு 14 ஆசனங்களும்
ஜே.வி.பி.யை பிரதான பங்காளியாக கொண்ட
ஜனநாயக தேசிய கூட்டணிக்கு
7.ஆசனங்களும் உள்ளன.
உத்தேச அரசியலமைப்புத்திருத்த
பிரேரணைகளை விசேட அமைச்சரவை சுமார்
ஒன்றரை மணிநேரமாக ஆராய்ந்த பின்னரே
சிறு திருத்தங்களுடன் ஏகமனதாக
அங்கீகரித்துள்ளனர்.இந்த
அரசியலமைப்பைத் திருத்துவதன் மூலம்
நீண்டகாலமாக காணப்படக்கூடிய
பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு
காணக்கூடியதாக இருக்கும் என பிரேரணையை
சமர்ப்பித்துக் கருத்துத் தெரிவித்த
பிரதமர் டி.எம். ஜயரட்ண கூறினார்.
தற்போது அரசுக்குக்கிட்டியிருக்கும்
2/3பெரும்பான்மைக்கும் கூடுதலான
பலத்தைக் கொண்டு அங்கீகரித்த
அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தை
அவசர பிரேரணையாக
உயர்நீதிமன்றத்துக்கும்
பாராளுமன்றத்துக்கும் சமகாலத்தில்
அனுப்பப்படும். உயர்நீதிமன்றத்தின்
தீர்ப்பு 24மணிநேரத்துக்குள் பிரதம
நீதியரசரால் பாராளுமன்ற
சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும்
அறிவிக்கப்படும்.உயர்நீதிமன்றத்தின்
அனுமதியை அடுத்து செப்டெம்பர் மாதம்
7ஆம் திகதி கூடவிருக்கும் பாராளுமன்ற
அமர்வின்போது அவசரச்சட்டமூலம்
தொடர்பில் விவாதம் வாக்கெடுப்புக்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். |
|
|
|
|
|