|
சீனா
மற்றும் ஜப்பானுக்கு இடைப்பட்ட
பகுதியில் அமைந்துள்ளது தென் கொரியா,
வடகொரியா.இந்த இரு நாடுகளும் பரம்பரை
பகை நாடுகளாக உள்ளன.
இதில் தென்கொரியாவுக்கு அமெரிக்கா
ஆதரவாக உள்ளது.வடகொரியாவுக்கு
ரஷியா,சீனா ஆகிய நாடுகள் ரகசிய ஆதரவு
அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தென் கொரியாவை மிரட்டும்
வகையில் வடகொரியா அணுகுண்டுகளை
தயாரித்து வருகிறது.இவற்றை ஏவும் சக்தி
கொண்ட அதிநவீன ஏவுகணைகளையும் உருவாக்கி
வருகிறது.
அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி
வட கொரியா இந்த ஆயுதங்களை தயாரித்து
வருகிறது.இது தென்கொரியாவுக்கு பெரும்
அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த நிலையில் தென் கொரியா போர் கப்பல்
கடந்த மார்ச் மாதம் வடகொரியா எல்லை
அருகே உள்ள கடல் பகுதியில் மர்மமாக
மூழ்கியது.இதில் தென்கொரிய வீரர்கள்
46பேர் பலியானார்கள்.
தென்கொரியா அந்த கப்பலை மீட்டு கப்பல்
மூழ்கியது பற்றி ஆய்வு நடத்தியது.அதில்
நீர்மூழ்கி ஏவுகணை மூலம் கப்பல்
தகர்க்கப்பட்டு இருந்தது தெரிந்தது.
வடகொரியாதான் ஏவுகணை மூலம் தாக்கி
கப்பலை மூழ்கடித்ததாக தென்கொரியா
குற்றஞ்சாட்டியது. ஆனால் வட கொரியா
இதற்கு மறுப்பு தெரிவித்தது.
இந்த பிரச்சினையால் இரு நாடுகளுக்கும்
இடையே மேலும் பகை அதிகரித்தது.
இருநாடுகளும் போரில் குதிக்கலாம் என்ற
சூழ்நிலை உருவானது.
இந்த நிலையில் தென்
கொரியாவும்,அமெரிக்காவும் கூட்டு போர்
ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.தென்
கொரியாவில் கிழக்கு பகுதியில் உள்ள
ஜப்பான் கடல் பகுதியில் இந்த ஒத்திகை
நடந்து வருகிறது. நேற்று முன்தினம்
ஒத்திகை தொடங்கியது.
இதில் அமெரிக்க நாசகாரி விமானம் தாங்கி
கப்பலான ஜார்ஜ் வாஷிங்டன் பங்கேற்று
உள்ளது.இத்துடன் 20 போர்கப்பல்கள்,200
விமானங்கள்,8.ஆயிரம் வீரர்கள் போர்
பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். முதல்
நாளில் கடற்படை விமான பயிற்சி நடந்தது.
நேற்று நீர்மூழ்கி கப்பல்கள் போர்
பயிற்சியில் ஈடுபட்டன.
இந்த போர் பயிற்சி வடகொரியாவை
மிரட்டும் வகையிலேயே நடப்பதாக
கூறப்படுகிறது. இதற்கு வடகொரியா கடும்
எதிர்ப்பு தெரிவித்தது.அதையும் மீறி
போர் பயிற்சி நடப்பதால் வடகொரியா கடும்
ஆத்திரத்தில் உள்ளது.
அமெரிக்காவும்,தென் கொரியாவும் எங்களை
மிரட்டும் செயலில் ஈடுபடுகின்றன.இது
தொடர்ந்தால் போர் தொடுப்பதை தவிர வேறு
வழி இல்லை.போர் வந்தால் அணு ஆயுதங்களை
பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று
வட கொரியா எச்சரித்து உள்ளது
ஆனால் இதுபற்றி கவலைப்படாமல் கூட்டு
போர் பயிற்சி தொடர்ந்து நீடித்து
வருகிறது.
இதனால் வடகொரியா,தென் கொரியா மீது போர்
தொடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போர்
தொடுத்தால் அதை எதிர்கொள்ளும் வகையில்
தென்கொரியா படைகளும் தயார் நிலையில்
வைக்கப்பட்டு உள்ளன. |