|
தேர்தல்
பிரசாரத்தின்போது பல
விசித்திரங்களை மக்கள்
பார்த்திருப்பர்.இந்த
விசித்திரங்களின் உண்மை நிலை
பற்றி மக்களில் எத்தனை பேர்
அசை போட்டிருப்பர் என்பது
கேள்விக்குறியே.அது
மாத்திரமல்ல.மக்களுக்கு
தெரிந்தும் தெரியாமலும்
அரங்கேறிய நாடகங்களும் பல
தேர்தல் பிரசாரங்களால்
அரசியல்வாதிகள் மக்களை திக்கு
முக்காட வைத்துள்ளனர்.
இன,மத,பேதங்களுக்கு அப்பால்
தன்னை தெரிவு செய்யுங்கள்
என்று பல பெரும் பான்மையின
வேட்பாளர்கள் நின்றதை தேர்தல்
களத்தில்
பார்த்திருப்பீர்கள்.சிறுபான்
மையினங்களின் ஒற்றுமை கருதி
வாக்களியுங்கள் என்று ஒரு
சிலர் கோரி நின்றனர்.எமது
தனித்துவம் இந்தத் தேர்தலில்
நிலைநாட்டப்பட வேண்டும் என்ற
கோஷத்துடன் உங்கள் முன் பலர்
வந்திருப்பர்.இதற்கும் அப்பால்
தேசியத்தைக்காக்க ஓரணியில்
திரளுங்கள் என ஒரு சாரார்
கோரிக்கை விட்டதையும்
அவதானித்திருப்பீர்கள்.
இவையனைத்தும் பொதுத்
தேர்தலுக்கான மாகாண
சபைகளுக்கான கோஷங்கள்.இவ்
வாறான கோஷங்கள் வடக்கு
கிழக்கில் உள்ளூராட்சி
சபைகளுக்கான தேர்தலின் போதும்
ஒலித்ததை நாம்
கேட்டிருந்தோம்.மக்களும்
தேசியத்திற்காக தமிழ் மக்களின்
தனித்துவத்திற்காக
வாக்களித்ததை மறந்திருக்க
மாட்டார்கள்.ஆனால் இந்த
தேர்தல் முடிவுகள் பெரிதாக
ஒன்றையும் கொண்டு வரவில்லை
என்பதையும் மக்கள்
அறிவார்கள்.ஆனால் விசித்திரம்
என்னவென்றால் வடக்கு
கிழக்குக்கு வெளியில் தற்போது
நடந்து முடிந்துள்ள
உள்ளூராட்சி தேர்தலிலும்
மேற்கூறிய கோஷங்கள்
ஒலித்ததுதான்.கொழும்பு மாநகர
சபைக்கான தேர்தலில்
தனித்துவத்தைப் பேணி தேசியத்தை
முன்னிறுத்தி தமிழ்
மக்களுக்காக என்ன சாதிக்கப்
போகிறார்கள் என்பது
தெரியவில்லை.
தேர்தல் காலத்தில் இதனை
எழுதியிருந்தால் சில வேளைகளில்
துரோகிகள் என்று கூறியிருப்பர்.
தேர்தல் முடிந்துவிட்டது.
தேர்தலில்
வேட்பாளராக கையெழுத்திடும்
முன்பே தனித்துவத்தையும்
தமிழ்த் தேசியத்தையும் வைத்து
தமிழ் மக்களின் காதுகளில்
பூச்சுற்றி வெற்றி பெற்று
அந்த வெற்றியை விலை பேசி கட்சி
மாறிவிடலாம் என்ற கொள்கையுடன்
தேர்தல் களத்தில் புகுந்த கதை
மக்கள் அறியார்.தேர்தல்
முடிவுடன் எத்தனைக் காய்கள்
கையூட்டுடன் கட்சி மாறும்
என்பதை பொறுத்திருந்து
பார்ப்போம்.
இன்னுமொரு
வேடிக்கை.பேரினவாதிகள் என
கூச்சலிடுவோர் தேர்தலின்போது
அதே பேரினவாதிகளுடன் கை
கோர்த்து தேர்தலில் நிற்பதும்
தனித்துவம் பேசிவிட்டு
வெற்றியின் பின் தாம் கூறிய
பேரினவாதிகளுடன் கைகோர்த்து
நிற்பதும் கடந்தகால காட்சிகளே.
உண்மையில்
மடையர்களாக்கப்பட்டவர்களாக
மக்களே உள்ளனர்!
மக்கள் இன,மத,ரீதியில்
கூறுபோடப்பட்டு தேர்தல்
காலங்களிலேயே விலை பேசி
விற்கப்பட்டு விடுகின்றனர்
என்ற உண்மை மக்களுக்கு
தெரியாமல் போய்
விடுகின்றது.தேர்தல்
காலங்களில்
மாத்திரமல்ல,தேர்தலுக்குப்
பின்னரும் மக்கள் விலை பேசி
விற்கப்
படுகின்றனர்.மொத்தத்தில்
மக்கள் வெறும்""வாக்களிப்பு
இயந்திரங்களே''என்பதை
அரசியல்வாதிகள் நிரூபித்து
விடுகின்றனர்.இந்த ஒரு நிலை
வடக்குகிழக்கு மக்களுக்கு
ஏற்பட்டுவிடக்கூடாது.ஏனெனில்
அவர்கள் அனைத்தையும் இழந்து
அனாதைகளாக நின்றபோதும்.
ஆனால் கொழும்பிலும் ஏன் இந்த
கோஷம் என்று
தெரியவில்லை.வடக்கு கிழக்கு
மக்களைப் பொறுத்து அரசியல்
தீர்வு நோக்கிய பயணத்தை
துரிதப்படுத்துங்கள்.அரசியல்
தீர்வை பெற்றுத் தாருங்கள்
என்ற ஆணையையே தமிழ் மக்கள்
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புக்கு
வழங்கியுள்ளனர்.
மக்களின் இந்த
ஆணையை கூட்டமைப்பு எந்தளவுக்கு
முன்னெடுத்துச் செல்லும் என்று
தெரியவில்லை.ஆனால் தொடர்ந்தும்
கூட்டமைப்பினரிடம் இருந்து
உறுதிமொழிகள் வந்த வண்ணம்
உள்ளன.
அரசாங்கத்துடன் ஏற்கனவே
நடைபெற்ற பல சுற்றுப்
பேச்சுவார்த்தைகள் பலன்
தரவில்லையென பகிரங்கமாக
அறிவித்த கூட்டமைப்பு மீண்டும்
அடுத்த சுற்றுப்
பேச்சுவார்த்தையில்
இறங்கியுள்ளது.இரண்டாவது
சுற்றுப் பேச்சுவார்த்தையின்
முதல் சந்திப்பே அண்மையில்
இடம்பெற்றுள்ளது. எதிர்காலப்
பேச்சுக்கள் எவ்வாறு அமையும்
என்பது பற்றி கூறத் தேவையில்லை.
நம்பிக்கையுடன் பேசுவோம் என
கூட்டமைப்பு கூறுவதை
மறுப்பதற்கில்லை.ஆனால்
வெளிநாட்டு இராஜதந்திரி
ஒருவருக்கு பதிலளித்த
கூட்டமைப்பின் முக்கியஸ்தர்
ஒருவர் பேச்சுவார்த்தை மிகவும்
சுமுகமாக போவதாக
தெரிவித்துள்ளமை ஆச்சரியத்
தையளிப்பதாக இராஜதந்திர
வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.தமிழ்
மக்களிடம் ஒரு முகமும் இராஜ
தந்திரிகளிடம் வேறு
முகத்தையும் காட்ட வேண்டிய
தேவை தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புக்கு ஏன் வந்தது?
கூட்டமைப்புக்கு இருவேறுபட்ட
முகங்கள் இருப்பது தமிழ்த்
தேசிய பயணத்திற்கு
நல்லதல்ல!கூட்டமைப்பினரின்
நம்பிக்கையை எவரும் குறைத்து
மதிப்பிடவில்லை. ஆனால் தமிழ்
மக்களின் எதிர்பார்ப்பை
பூர்த்தி செய்யுமா?என்ற
உறுதிமொழியை கூட்டமைப்பு
வழங்க வேண்டும்.
வி.தேவராஜ்
|