உதவிகளை சரியாகப் பயன்படுத்தி இலக்கை
எட்ட முயற்சிக்க வேண்டும். -
ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்
மு.சந்திரகுமார்.
முகம்தெரியாத உறவுகள் எமக்கு வழங்கும் மனிதாபிமான உதவிகளை சரியாகப் பயன்படுத்தி எமது இலக்கை எட்ட முயற்சிக்க வேண்டும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று (26) செல்வாநகர் அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தினையும் அதனோடிணைந்த சிறுவர் பூங்காவினையும் திறந்து வைத்து நீர்விநியோக செயற்பாட்டினையும் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலத்தில் செல்வாநகர் பாடசாலை இடிந்த கட்டடங்களிலேயே இயங்கி வந்தது. ஆனால் இன்று கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு ஏற்ற வசதிகளைக் கொண்ட கட்டடத்தில் இயங்குவதையிட்டு நாம் மன நிறைவடைகின்றோம். இதன் மேம்பாட்டுக்கு பக்கதுணையாக நின்று செயற்பட்ட மக்களின் கல்விசார் ஆர்வத்தையும் நாம் பாராட்டுகின்றோம். மேலும் சைல்பண்ட் எனும்; நிறுவனம் கொரியா அரசாங்கத்தின் ஆதரவுடன் இன்று திறக்கப்பட்ட இக்கட்டடத்தினையும் சிறுவர் பூங்கா மற்றும் நீர் விநியோக வசதிகளையும் 23 லட்சத்து ஐம்பதாயிரம் ருபா செலவில் அமைத்து தந்துள்ளனர்.
எனவே முகம்தெரியாத அந்த உறவுகள் எமக்கு வழங்கும் இந்த மனிதாபிமான உதவிகளை நாம் சரியாகப் பயன்படுத்தி எமது இலக்கை எட்ட முயற்சிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை செல்வாநகர் பாடசாலை மாணவர்கள் நீண்ட தூரம் பயணித்து கற்க வேண்டியிருப்பதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் நோக்கில் குறித்த பாடசாலையினை அடுத்து வரும் ஆண்டில் தரம் எட்டு வரை தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அவர் பாடசாலைக்கான சுற்று மதிலை அமைத்து தருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுகளில் சைல்பண்ட் நிறுவனத்தின் கொரியநாட்டு பிரதிநிதி சான் மி மூன் வலைப்பின்னல் முகாமையாளர் கீர்த்தி கொஸ்வத்தை கிளிநொச்சி கோட்டக்கல்வி அதிகாரி அமிர்தலிங்கம் ஈ.பி.டி.பி.யின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் சைல்பண்ட் நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர் மதிவண்ணன் மற்றும் கல்விசார் அதிகாரிகளும் ஆசிரியர்களும் பெற்றார்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.