|
நுவரெலியா
மாவட்டத்தில் மதுப்பாவனையை
இல்லாதொழிக்கும் மக்கள் சேவையில்
இ.தொ.கா.வின் பொதுச் செயலாளரும்
கால்நடை,கிராமிய மற்றும் சமூக
அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன்
தொண்டமானுடன் இணைந்து செயற்பட ஜனநாயக
மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன்
விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை இன்று
வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கை வருமாறு:
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக்
கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டத்துக்கு அமைச்சர் ஆறுமுகன்
தொண்டமான் தலைமை தாங்கி உள்ளார்.அவர்
மலையகத்தில் அதிகரித்துள்ள மதுபாவனை
தொடர்பாக அங்கு கவலை
தெரிவித்திருக்கின்றார்.
மலையகத்தில் உள்ள வழிபாட்டுத்
தலங்கள்,பாடசாலைகள் ஆகியவற்றுக்கு
அருகில் அமைந்திருக்கும் மது விற்பனை
நிலையங்களின் பெயர்கள்,விபரங்கள்
ஆகியன குறித்த அறிக்கை ஒன்றை அடுத்து
வரும் இரண்டு வார காலத்துக்குள்
அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று
அதிகாரிகளுக்கு பணிப்புரையும்
விடுத்துள்ளார்.
அமைச்சர் தொண்டமான் வழிபாட்டுத்
தலங்கள்,பாடசாலைகள் ஆகியவற்றுக்கு
அருகில் அமைந்துள்ள அனைத்து மதுபான
விற்பனை நிலையங்களையும் அகற்றும்
நடவடிக்கையை முன்னெடுப்பராக இருந்தால்
அவரின் நடவடிக்கையை நாம்
வரவேற்கின்றோம்.எமது முழுமையான
ஒத்துழைப்பை அவருக்கு வழங்கத் தயாராக
உள்ளோம். நுவரெலியா மாவட்டம் வறுமை
நிலைக் கணிப்பீட்டில் 32 சத வீதத்தை
தொட்டு இலங்கையிலேயே வறுமையில் முதலாம்
இடத்த்தில் உள்ளது.
அதே போல் மது பாவனையிலும் நுவரெலியா
மாவட்டம் முதலாமிடத்தில்தான் உள்ளது.
இந்த இரண்டுக்கும் இடையில் நேரடியான
சம்பந்தம் இருக்கின்றது.
வழிபாட்டுத்
தலங்களுக்கும்,,பாடசாலைகளுக்கும்
அருகில் மதுச்சாலைகளும்,மது விற்பனை
நிலையங்களும் அமைக்கப்படக்கூடாது என
சட்டம் கூறுகின்றது. ஆனால் இச்சட்டம்
நுவரெலியா மாட்டத்திலே மீறப்பட்டு
இருக்கின்றமை கண்கூடான உண்மையாகும்.
பெருந்தொகையான சட்டவிரோத மது
நிலையங்கள் மலையகத்தின்
தொழிற்சங்கவாதிகளாலும்,அரசியல்வாதிகளாலும்
ஊக்குவிக்கப்படுகின்றன என்கிற பொதுவான
குற்றச்சாட்டும்
இருக்கின்றது.உழைக்கும் தொழிலாளிகளின்
உடல் நலத்தையும்,உழைப்பையும் இந்த
மதுபானம் மலையகத்தில் அட்டையாய்
உறிஞ்சி விடுகின்றது.
இந்நிலையில் அமைச்சர்
வெளியிட்டிருக்கும் கருத்தை நான்
வரவேற்கின்றேன். கிடைக்கவிருக்கும்
அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு சட்ட
விரோதமான அனைத்து மது விற்பனை
நிலையங்களையும்,மதுச்சாலைகளையும்
நுவரெலியா மாவட்டத்தில் அமைச்சர் மூடி
விட வேண்டும் என கேட்டுக்
கொள்கின்றேன்.அமைச்சரின் நடவடிக்கையை
எங்களுடன் சேர்ந்து முழு மலையகமும்
அவதானித்துக்கொண்டு இருக்கின்றது.
நுவரெலியா மாவட்டத்தில்
மட்டுமன்றி,பெருந்தோட்டத் தொழிலாளர்கள்
வாழும் பதுளை,
கண்டி,மாத்தளை,இரத்தினபுரி, கேகாலை,
களுத்துறை,ஆகிய ஏனைய மாவட்டங்களிலும்
நடைமுறையில் இருந்து வரும் மதுபாவனை
ஒழிக்கப்பட வேண்டும்.அமைச்சரின்
நடவடிக்கை இதற்கு முன்மாதிரியாக
அமையட்டும். |