முறையான நடைமுறைகளை பின்பற்றுவதன்
மூலம் நிறைவான வருமா னத்தை பெறமுடியும்
- ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்
சந்திரகுமார்.
எல்லா விதமான சுயதொழில் முயற்சிகளிலும் அதற்கே உரிய முறையான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நிறைவான வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கல்லாறு கடல் நீரேரியில் இன்று (22) பத்து இலட்சம் இறால் குஞ்சுகளை விடும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமே 25 இலட்சம் இறால் குஞ்சுகளை தட்டுவன்கொட்டி ஆனையிறவு நாகேந்திரபுரம் கல்லாறு கடல் நீரேரிகளில் விடும் திட்டமாகும். இதன் மூலம் இறால் இருப்பு மட்டம் அதிகரிக்கப்பட்டு கடற்றொழிலாளர்கள் கடந்த காலங்களிலும் பார்க்க இரட்டிப்பான வருமானத்தை பெறமுடியும் அதன் முதற்கட்டமாக இன்று பத்து இலட்சம் இறால் குஞ்சுகள் கல்லாறு கடல் நீரேரியில் விடப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் மிகுதி இறால் குஞ்சுகளும் மேற்படி கடல் நீரேரியில் விடப்படும். இதற்காக வடமாகாண சபை 13.65 மில்லியன் ரூபாய்களை செலவு செய்துள்ளது. இதன் மூலம் பதினைந்து கடற்றொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 1300 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பாடடைகிறது.
மேலும் இந்த இறால் குஞ்சுகள் அனைத்தும் விடப்பட்டு மூன்றரை மாதங்களின் பின் இறால் தொழிலில் ஈடுபடும் போது ஒட்டுமொத்தமாக 250,000 தொடக்கம் 300,000 கிலோ வரை இறால்கள்; பிடிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு அக்காலப் பகுதியில் இறாலுக்கான நியாயமான சந்தை வாய்ப்பினையும் எம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். வலைகள் உள்ளிட்ட கடற்றொழில் உபகரணங்களை ஜம்பது வீத மானியத்தில் கடற்றொழில் அமைச்சின் ஊடாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு சுண்டிக்குளம் வரையான வீதியும் புனரமைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
எந்த தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் முறையான நடைமுறைகளை அனைத்து தொழிலாளர்களும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் இத்திட்டத்தின் முழுப்பயனையும் பெற்றுக் கொள்ள முடியும். நவீனமுறைக்குள் கொண்டு சொல்லப்பட்டுள்ள இறால் வளர்ப்புத் தொழிலானது அதே நவீன தொழிநுட்ப ஆலோசனைக்கு அமைவாகும் தொழிலாளர்கள் தொழிலை மேற்கொள்ளவும் வேண்டும். இது மிக முக்கியமான விடயம். தவறும் பட்சத்தில் இதற்காக செலவு செய்த பணமும் இத்திட்டமும் பயனற்றதாகிவிடும். எனவே நடைமுறைகளை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
நீரியல் வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் சலீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்; தேசிய நீரியல் வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நிமல் சந்திரட்ன அந்நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி.அசோகா கிங் அக்வா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தயாபரன் வடமாகாண மீன்பிடித் திணைகளப் பணிப்பாளர் மயூரன் கிளிநொச்சி மாவட்ட அரச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் கேதீஸ்வரன் மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கனேசமூர்த்தி கூட்டுறவு உதவி ஆணையாளர் தவராசா சமாச பொது முகாமையாளர் கனேசபிள்ளை ஈ.பி.டி.பி.யின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் மற்றும் கடற்றொழிலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இறால் குஞ்சுகளை கடல் நீரேரியில் விட்டனர்.