விவசாயிகளினது நலனும் அவர்களது
பிள்ளைகளின் கல்வி மேம்பாடும்
பேணப்படும்! - அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா
யாழ் மாவட்ட விவசாயிகளினது அபிவிருத்திக்கும் அவர்களது பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காகவும் முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் இன்றைய தினம் (22) இடம்பெற்ற வறிய விவசாயிகளினது பிள்ளைகளுக்கு வங்கிப் புத்தகங்கள் கையளித்தல் மற்றும் ஆதரவற்ற சிறார்களின் பராமரிப்பு இல்லங்களுக்கு சொட்டு நீர்ப்பாசன தொகுதிகளை கையளிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வருடந்தோறும் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இத்திட்டமானது வரவேற்கத்தக்கது என்பதுடன் வழங்கப்படும் இத்தொகை போதுமானதாக இல்லாவிட்டாலும் இதனை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
யாழ் மாவட்டத்தை மேம்படுத்துவனூடாக விவசாயிகள் அடையக் கூடிய நன்மைகள் தொடர்பிலும் கவனம செலுத்தப்படும் அதேவேளை, 2011ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு புறம்பாக வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கென 1000 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்நிதியிலிருந்து ஒரு தொகை மாவட்ட விவசாய மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்படும் எனவும் உறுதிமொழி வழங்கினார்.
இதனிடையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்கிடையில் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளதாகவும் அப்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறிப்பாக கால்நடைகள் சார்ந்த பிரச்சினைகள் மின்சாரம் உள்ளிட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படுமெனத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் தற்போது இங்குள்ள மின்சாரத் தடை மற்றும் மின்வலுக்குறை போன்ற பிரச்சினைக்கு லக்சபான மின்விநியோகத் திட்டம் மூலம் தீர்வு காண முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
இதனிடையே இன்றுள்ள அமைதிச் சூழலை குழப்பும் வகையில் சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகத் தெரிவிதததுடன் 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தமது நிலைப்பாடு தொடர்பாக தம்முடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்று காலை தொலைபேசி வாயிலாக உரையாடியதையும் அங்கு அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
யாழ் மாவட்ட கமநல சேவைகள் அபிவிருத்தி உதவி ஆணையாளர் பற்றி நிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் உரையாற்றும் போது மாவட்டத்தின் அபிவிருத்தி மேம்பாடு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் அதன் பிரகாரம் இன்றுள்ள அமைதிச் சூழலைப் பெற்றுத் தந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இந்நிலையில் இம்மாவட்டத்தின் கல்வி நிலை மேலோங்கியுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் 20 மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் வீதம் வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகங்களுக்கான ஆவணங்கள் அமைச்சர் உள்ளிட்டோரால் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஆதரவற்ற சிறுவர் முதியோர் இல்லங்களான சிவபூமி முதியோர் இல்லம் நவீல்ட் செவிப்புலன் வழிப்புலன் இழந்தோர் பாடசாலை சைவ வித்தியா விருத்திச் சங்கம் சிறீ பரமானந்தா சிறுவர் முதியோர் இல்லம் மற்றும் யாழ் விதை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்கென 12 இலட்சம் ரூபா பெறுமதியான சொட்டு நீர்ப்பாசன தொகுதிகளும் அவற்றின் துறைசார்ந்த உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) உள்ளிட்ட விவசாயத் திணைக்களத்தினதும் கமநல சேவைகள் சம்மேளனத்தினதும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.