|
அரசியல்
குறித்து பல்வேறு வகையான
பார்வைகள் உண்டு. இதில் எது
சரி அல்லது எது பிழை என்பதை,
குறிப்பிட்ட அரசியல்
நிலைப்பாடு நிலை
கொண்டிருக்கும் சூழலே
தீர்மானிக்கும். ஒரு
குறிப்பிட்ட சூழலில்
குறிப்பிட்ட அரசியல் பார்வை
முதன்மைபெற ஏனையவை
பின்னுக்குத் தள்ளப்படும்
அல்லது நிலைபெறும் தகுதியை
இழந்து உருக்குலைந்து போகும்.
சூழலையும்
மக்களின் உணர்வு நிலையை யும்
விளங்கிக் கொண்டு தம்மை மறு
பரிசீலனை செய்து கொள்ளு வோரின்
அரசியல் வாதங்கள் நிலைபெற
ஏனைய வை உருச்சிதைந்து
அழிகின்றன. இதனை பாம்பு தனது
சந்ததியை பாதுகாப்பதற்காக
செட்டை கழற்றிக் கொள்வதுடன்
ஒப்பிடலாம். பாம்பு செட்டையை
கழற்றுவதால் அதன் தனித்துவத்தை
இழந்து விடுவதில்லை. மாறாக அது
செட்டையைக் கழற்றிக் கொள்
வதால்தான் தனித்துவத்தைப்
பேணிக்கொண்டு உயிர் வாழும்
ஆற்றலையே பெறுகிறது. இப்பத்தி
இதனை அரசியல் அர்த்தத்தில்
தக்கனப் பிழைக்கும் அரசியல்
என்று வரையறுக்கும்.
நமது சூழலில் இந்த ‘அரசியலில்
தக்கனப் பிழைத்தல்’ –
(Survival of the fittest)
என்பதை எவ்வாறு நோக்கலாம்?
நமக்கு சுமார் அறுபது
வருடங்களுக்கு மேற்பட்ட
போராட்ட அரசியல் வரலாறுண்டு.
இதில் இடதுசாரி, வலதுசாரி
என்று பிரிந்து நின்று
மோதியிருக்கின்றோம். பின்னர்
மிதவாதிகள் – (ஆயுதரீதியான)
போராளிகள் என்று பிரிந்து
நின்று இயங்கியிருக்கிறோம்.
ஆனால் எங்களுக்கான அரசியல்
அடைவு (Politicle Archivment)
என்று பார்த்தால் நாம் கையை
விரிக்கும் நிலையில்தான்
இருக்கிறோம்.
இதற்கு யார் பொறுப்பு என்பது
குறித்து விவாதிப்பதை விடுத்து
ஆக்கபூர்வமாக என்ன செய்யலாம்
என்று சிந்திப்பதுதான் இன்றைய
நிலைக்கு அவசியமானதாகும். இது
குறித்து நாம் சிந்திக்க
வேண்டுமாயின் முதலில் அரசியலை
சகிப்புணர்வுடன் நோக்கத்
தயாராக இருக்க வேண்டும்.
அத்தகையதொரு பண்புநிலை நோக்கி
நம்மால் சிந்திக்க
முடியுமானால் மட்டுமே,
அனைவரும் நமக்குத் தேவை என்று
சிந்திக்க முடியும். நாம்
எதிரி என்று ஒருவரை வரையறுத்து
அரசியல் செய்யும் பழைய கெட்ட
பார்வையை புறம்தள்ளி
சிந்திக்கும் நிலைக்கு நம்மைத்
தரமுயர்த்திக் கொள்ள முடியும்.
சமீபத்தில் புதிய திசைகள்
என்னும் புலம்பெயர் அமைப்பு
ஒழுங்கு செய்திருந்த
(10-04-2011- மேற்கு லண்டன்)
கலந்துரையாடலில் ஒரு
வேண்டுகோள்
விடுக்கப்பட்டிருந்ததாக ஒரு
செய்தி வெளியாகியிருந்தது.
கடந்த காலத்தில் எமது
மக்களுக்காக செயற்பட்டு
உயிர்நீத்த பத்மநாபா, உமா
மகேஸ்வரன், சிறி சபாரத்தினம்,
அமிர்தலிங்கம், ஒபராய் தேவன்,
விஸ்வானந்த தேவன், போன்ற
இன்னும் பல தலைவர்களின் படமும்
ஒரே மேடையில் வைக்கப்பட்டு
மரியாதை செலுத்தப்பட வேண்டும்.
அதற்கு நீங்கள் தயாராக
இருந்தால் கடந்தகாலத்தை மறந்து
உங்களுடன் பணியாற்றுவது
குறித்து நாம் யோசிக்கலாம்
என்றவாறு அங்கிருந்தவர்கள்
யாரோ கூறியிருக்கின்றனர்.
என்னளவில் இந்தக் கோரிக்கை
தவறான ஒன்றல்ல. இதனை
சகிப்புணர்வுடன் நோக்க நாம்
முயற்சிப்போமாயின் அதுதான்
நாம் பழைய நமது
பார்வையிலிருந்து
தரமுயர்வதற்கான முதற்படி.
நம்மில் சிலர் நினைப்பது
போன்று அரசியல் என்றால்
எதிர்ப்பது மட்டும்தான் என்பது
பொருளல்ல. துரதிஸ்டவசமாக நமது
கடந்தகாலம் முழுவதும்
அத்தகையதொரு செல்வாக்கிற்கு
உட்பட்டிருந்ததாலோ என்னவோ அது
நம்மை தொடர்ந்தும்
அலைக்கழித்துக்
கொண்டிருக்கிறது. உலக அரசியல்
நகர்வுகளை விளங்கிக் கொண்டு
எப்போது எதிர்ப்பது? எப்போது
அமைதியாக இருப்பது? எப்போது
இணங்கிப் போவது? என்னும்
அரசியல் அணுகுமுறை (Political
Approach) நமக்கு அவசியம்.
இவற்றை விளங்கிக் கொண்டு
செயற்பட முடியாதவர்களாக
இருந்ததன் விளைவுதான் இன்றைய
நமது நிலைமைக்குக் காரணம்.
இங்கு ஒரு விடயத்தை நாம்
குறித்துக் கொள்ள வேண்டும் –
சமரசமற்று எதிர்ப்பரசியலை
தொடர்ச்சியாக
மேற்கொண்டுவருவதன் ஊடாக நாம்
எதிர்பார்க்கும் ஒரு விடயத்தை
அடைய முடியுமென்றால், நாம்
அதனை எப்போதோ அடைந்திருக்க
வேண்டும். நிட்சயமாக எம்மால்
அடைய முடிந்திருக்கும். ஆனால்
அப்படி ஏதும் நிகழவில்லை.
உலக வரலாற்றில் புலிகள்
காட்டியளவிற்கு வீரத்தை
எந்தவொரு அமைப்பும் இதுவரை
காட்டியதில்லை. புலிகள்
நிகழ்த்தியது போன்று
சாதனைகளையும் எவரும்
நிகழ்த்தியதில்லை.
அப்படியிருந்தும் பதினொராயிரம்
பேரின் சரணடைவுடன் அந்த
அமைப்பின் கதை முடிவுக்கு
வந்திருக்கிறது. இது சொல்லும்
செய்தி என்ன? உங்களது பழைய
எதிர்ப்பரசியல் பாணி மீள்
பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட
வேண்டியது என்பதைத்தானே!
இதற்காக அரசின் காலில் போய்
விழுமாறு இந்தப் பத்தி
வாதிடவில்லை. நமது பார்வையை
மறுபரிசீலனை செய்து கொள்ள
வேண்டும் என்றே வாதிடுகின்றது.
அத்தகையதொரு சுய பரீசீலனையே
நமக்கான புதிய வழியைக்
கண்டடைய ஒரே வழி.
புலிகளின்
முடிவோடு, புலிகள் காலத்து
எதிர்ப் பரசியல் பாணியும்
முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த இடத்தில் புலிகள் காலத்து
எதிப்பரசியலின் தன்மை
குறித்தும் சிறிது நோக்குவது
நல்லது. புலிகளின் காலத்தில்
இலங்கை அரசின் மீதான எதிர்ப்பு
என்பதற்கு அப்பால் இந்திய
எதிர்ப்பு அரசியலையும்
புலிகளின் அரசியல் உட்கொ
ண்டிருந்தது. மேலும் பல்வேறு
சந்தர்ப்பங்களில் தமது
ஆதரவாளர்களுக்கு ஊடாக மேற்கு
– எதிர்ப்பு அரசியலையும்
புலிகள் வெளிப்படுத்தியே
வந்திருக்கின்றனர். இலங்கையில்
தமிழ் மக்கள் கௌரவத்துடன்
வாழ்வதற்கான ஒரு தீர்வு
எட்டப்படாதவரையில் இலங்கை
அரசின் மீதான எதிர்ப்புணர்வு
தொடரவே செய்யும். அதனை இந்தப்
பத்தி ஏற்றுக் கொள்கின்றது.
ஆனால் இந்திய
எதிர்ப்பரசியலுக்கு என்ன தேவை
இருக்கின்றது?
உண்மையில் ஈழத்
தமிழர்களுக்கான சர்வதேச
அரசியல் என்றால், அது முதல்
அர்த்தத்தில் இந்திய
அரசியலாகவே இருக்கின்றது
என்பதை நாம் மறந்துவிடக்
கூடாது. இந்தியாவின்
பிராந்திய நலன்களை
புறம்தள்ளும் சர்வதேச அரசியல்
காய்நகர்த்தல் என்பது எம்மைப்
பொருத்தவரையில் சாத்தியமற்ற
ஒன்று. இது ஈழத் தமிழர்களுக்கு
மட்டுமல்ல இலங்கை அரசிற்கும்
இதே நிலைமைதான்.
ஈழத் தமிழர்களைப்
பொறுத்தவரையில் இந்தியாவைத்
தவிர்த்து அல்லது ஓரம்கட்டி
எந்தவொரு அரசியல்
முன்னேற்றமும் இலங்கையில்
ஏற்படும் என்பது
விவாதங்களுக்கு வேண்டுமானால்
நன்றாக இருக்கலாம், சிலர்
வாயளவில் புரட்சிவாதிகளாக
இருப்பது போன்று. ஆனால் அது
யதார்த்தமல்ல.
அப்படியொன்றிற்கு சாத்தியம்
இருந்திருப்பின் புலிகள்
வலுவாக இருந்த காலத்தில் அது
நிகழ்ந்திருக்க வேண்டும்.
நோர்வே ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் என்ன
நடக்கின்றது என்பதை,
பதுடில்லிக்குத்
தெரியப்படுத்திக்
கொண்டிருந்ததை நாம் நினைவில்
கொள்ள வேண்டும்.
இந்தியாவை ஈழத் தமிழ்
மக்களுக்கு எதிராக கையாளுவதில்
சிங்கள ராஜதந்திரம் வெற்றி
பெற்றதாக நம்மிடம் ஒரு
கருத்துண்டு. இது பற்றி ஒரு
முறை மூத்த ஆய்வாளர்
திருநாவுக்கரசு கூறும் போது,
ஜெயவர்த்தனவின் ராஜதந்திர
ஆற்றலே இந்தியாவையும் ஈழத்
தமிழர்களையும்
எதிரியாக்கியதாகக்
குறிப்பிட்டிருந்தார்.
கௌடில்யர் (சாணக்கியன்) இரண்டு
எதிரிகள் இருந்தால் ஒரு
எதிரியை நன்பனாக்கி இன்னொரு
எதிரியுடன் மோதவிடு – ஈற்றில்
இரண்டு எதிரியும் இல்லாமல்
போவான் – என்னும் சூத்திரத்தை
உள்வாங்கியே ஜே.ஆர், இந்தியாவை
எங்களுக்கு எதிராக
மாற்றியதாகக்
குறிப்பிட்டிருந்தார்.
ஆய்வாளர் திருநாவுக்கரசு, யாழ்
வீரசிங்கம் மண்டபத்தில்
நடைபெற்ற ‘மானுடத்தின் தமிழ்க்
கூடலில்’ இதனைக்
குறிப்பிடும்போது
பார்வையாளர்கள் வரிசையில்
இருந்தவர்களின் நானும் ஒருவன்.
இது குறித்து ஆழ்ந்து
யோசிக்கும் போது, இந்தியாவை
கையாளுவதில் நாம் விட்ட தவறினை,
பின்னர் நாமே பிறிதொருவரின்
ஆற்றலாகக் காட்ட விழைகின்றோம்.
சமீபத்தில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்மந்தன் நேர்காணல்
ஒன்றில் குறிப்பிட்டிருந்த
விடயம் இங்கு கவனம்
கொள்ளத்தக்கது –
‘இந்தியா குறித்து பல்வேறு
அபிப்பிராயங்கள் இருக்கலாம்
ஆனால் எமது பிரச்சனைக ளுக்காக
குரல் கொடுத்த முதல் நாடும்,
ஒரேயொரு நாடும் இந்தியா
மட்டுமே என்பதை நாம்
மறந்துவிடக் கூடாது. எமது
பிரச்சனையை தீர்த்துவைக்க
வேண்டுமென்பதற்காக தங்களது
உதவியை தருவதற்கு தாம் தயார்
என்பதை பகிரங்கமாகக்
கூறியதுடன், அப்போதைய இந்தியப்
பிரதமர் திருமதி இந்திராகாந்தி,
தமது நிலைப்பாட்டை இலங்கை அரசை
ஏற்கும்படியான சூழலையும்
ஏற்படுத்தியிருந்தார்’
மேலும் சம்மந்தன் இவ்வாறு
கூறுகின்றார் – ‘எமது
போராளிகள் பிரேமதாச அரசாங்
கத்துடன் இணைந்து செயற்பட்டதன்
விளைவாக இந்திய அமைதிப்படை
வெளியேற வேண்டிய சூழல்
உருவாகியது. இதன்
தொடர்ச்சியாக அதுவரை
பங்காளியாக இருந்த இந்தியா
பார்வையாளர் நிலைக்குத்
தள்ளப்பட்டது. பின்னர் ராஜீவ்
காந்தியின் கொலை இடம்பெற்றது’
– (புதினப்பலகை)
எனவே நாம் ஒரு விடயத்தை
குறித்துக் கொள்ள வேண்டும் –
அது, நாம் விளங்கிக் கொள்ள
முடியாமல் அல்லது கையாளத்
தெரியாமல் விட்ட இடைவெளிகளை
எதிர்ப்பரசியல் சுலோகம் கொண்டு
நிரப்பிக் கொள்ள
முற்பட்டிருக்கின்றோம். நமது
இந்திய எதிர்பரசியலின்
அடிப்படை இதுதான். இதுவே இன்று
வரை நம் மத்தியில் தொடர்கிறது.
இந்தியா தனது நலன்களில்
இருந்துதான் நமது பிரச்சனையை
அணுகியது என்பதும் இனிமேலும்
அவ்வாறுதான் நடந்து கொள்ளும்
என்பதிலும் மாற்றுக்
கருத்துக்கள் இருக்க
வாய்ப்பில்லை. இந்தியா
மட்டுமல்ல எந்தவொரு நாடும்
அவ்வாறுதான் நடந்து கொள்ளும்.
அதனை முறையாக விளங்கிக் கொண்டு,
கையாளுவது நமது பொறுப்பே அன்றி
அவர்களுடையதல்ல. நாங்கள்
தவறினால் அவர்கள் இன்னொருவரை
தெரிவு செய்து கொள்வர்.
இந்தியா விடயத்திலும் இதுதான்
நடந்தது. இது போன்று இன்னும்
பல்வேறு விடயங்கள் எமது
அரசியல் பரப்பில் புதிர்களாகக்
கிடக்கின்றன. அனைத்தும்
அவிழ்க்கப்பட வேண்டுமாயின் நம்
மத்தியில் தேவையற்ற விடயங்களை
புறம்தள்ளி உரையாடும்
முதிர்ச்சி தேவை. இத்தகையதொரு
உரையாடல் மூலம்தான் நாம்
அரசியலில் ‘தக்கனப் பிழைக்கும்’
கலையை கற்றுக்கொள்ள முடியும்.
பொங்குதமிழ், யதீந்திரா |