கடந்த
முப்பது வருடகால யுத்தமே எம்மக்களை
வறுமைக் கோட்டிற்குள் தள்ளியுள்ளது! -
ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினர்
சந்திரகுமார்.
கடந்த முப்பது வருட கால யுத்தமே எம்மக்களை வறுமைக்கோட்டிற்குள் தள்ளியுள்ளது. எனவே இன்று உருவாகியுள்ள இயல்புச் சூழலில் மக்களை அதிலிருந்து மீட்பதற்காக நாம் உழைத்து வருகின்றோம். இதற்காக அரசிடமிருந்து பெறக்கூடிய அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொள்ள வேண்டுமென ஈ,பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று (21) உடுவில் மகா சங்கத்திற்கான கட்டத் தொகுதிக்கு அடிக்கலை நாட்டி வைத்தபின் மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் 60 வீதமான மக்கள் சமுர்த்தி உதவிகளைப் பெறுகின்றனர். ஆனால் இது பெருமைக்குரிய விடயமல்ல. ஏனெனில் வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களே சமுர்த்தி உதவியினை பெறுகின்றனர். எனவே சமுர்த்தி உதவி பெறுபவர்களின் தொகை அதிகரிப்பானது மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்குட்பட்டவர்களின் தொகை அதிகரித்திருப்பதனையே சுட்டிக் காட்டுகின்றது.
ஆகவே இம்மாவட்டத்திலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் இதனூடாக உணரப்படுகின்றது. இதற்கான செயற்திட்டங்கள் பல நடைமுறையில் இருக்கின்றன. எனவே அவற்றை மேலும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
கடந்த கால யுத்தமே எம் மக்களின் வறுமையை மேலும் அதிகரிக்கச் செய்தது. இந்நிலையை இன்று உருவாகியுள்ள இயல்புச் சூழலில் மாற்றியமைக்க வேண்டுமென்ற நோக்குடன் நாம் தொடர்ந்தும் உழைத்து வருகின்றோம். அதற்காக அரசிடமிருந்து பெறக்கூடிய அனைத்து உதவிகளையும் பெற்று மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நாம் தயாராகவுள்ளோம்.
ஏனெனில் இன்று ஏற்பட்டிருக்கும் இவ்வரிய சந்தர்ப்பமும் தவறவிடப்படுமிடத்து எமது எதிர்காலச் சந்ததியினரும் வறுமையின் பிடிக்குள் சிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையினை எதிர்கொள்ள நேரிடும்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலும் சமுர்த்தித் திட்டத்தினை இவ்வாண்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. மாவட்டத்தின் 30 வீதமான மக்கள் இவ் உதவியினை பெறுகின்றனர். இவர்களில் பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு யுத்த பாதிப்பிலிருந்து மக்களை துரிதமாக மீட்டெடுப்பதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆயிரம் கோடி ரூபாய்களை வடமாகாணத்தின் செயற்பாடுகளுக்கு ஒதுக்கியுள்ளது. இவற்றை சரியாகப் பயன்படுத்தி நலிவுற்ற எமது சமூகத்தை மீளவும் வளம்பெறச் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
இங்கு ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) அவர்கள் உரையாற்றும் போது எதிர்ப்பு அரசியல் ஊடாக எதனையும் பெற்றுக் கொள்ள முடியாது எனவும் அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கப் பெறுகின்ற பல்வேறுபட்ட வாழ்வாதார உதவிப் பொருட்களை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தி தமது வாழ்வை மேம்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.
கடந்த 30 வருட கால யுத்தத்தால் அழிக்கப்பட்ட எமது பிரதேசத்தினை மீளக் கட்டியெழுப்புவதற்காகவும் எமது உரிமையினைப் பெற்றுக் கொள்வதற்குமாகத் தான் எமது கட்சியும் எமது செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் அரசிற்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
எமது பிரதேசங்களில் அமைதி நிலவுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விரும்புவதில்லையெனவும். கடந்த காலத் தவறுகளை எதிர்வரும் காலங்களில் சரியாகப் பயன்படுத்தி ஒளிமயமான வாழ்வுக்காக உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
எமது கட்சியினால் நீண்டகாலமாக கூறி வருகின்ற 13வது அரசியல் அமைப்புக்கு அப்பால் சென்று தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அப்போது மறுத்திருந்த அரசியல் வாதிகள் இப்போது அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் எனவும் கமலேந்திரன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
உடுவில் பிரதேச செயலகத்தில் பலர் சமுர்த்தி உதவிகளைப் பெற்று வந்த போதும் அங்கு இதுவரை சமுர்த்தி மகா சங்கத்தினை அமைப்பதற்கான கட்டடம் இருக்கவில்லை. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்ளின் முயற்சியால் சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டத் தொகுதியினை அமைப்பதற்கான நிதியினை சமுர்த்தி அதிகார சபை வழங்கியுள்ளது.
அத்தோடு இந்நிகழ்வில் அப்பகுதி விவசாயிகளுக்கான வாழ்வாதார உதவியாக 75 தெளிகருவிகளையும் நீர் இறைக்கும் இயந்திரங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் வழங்கினார். மேலும் 10 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உடுவில் பிரதேச உதவி பிரதேச செயலர் திருமதி நேசரட்ணம் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) யாழ் மாவட்ட சமுர்த்தித் திட்ட இணைப்பாளர் ரகுராஜன் உடுவில் பிரதேச உதவித் திட்டப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரன் ஈ.பி.டி.பி.யின் வலிகாமம் பிரதேச இணைப்பாளரும் வலிமேற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜீவன் உடுவில் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஹரிகரன் இராசசேகரம் ஈ.பி.டி.பி.யின் வலி தெற்கு பிரதேச இணைப்பாளரும் வலிவடக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அன்பு சமுர்த்தி முகாமையாளர்கள் பொதுமக்கள் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.