கிருஷ்ணாவின் பேச்சு தமிழர்களை
ஏமாற்றும் திட்டமிட்ட நாடகமாம்: சீமான்
சீற்றம்.
வெளியுறவிச்
செயலாளர் எஸ்.எம்.கிருஷ்ணாவின்
தீர்வுப் பேச்சு தமிழர்களை
ஏமாற்றும் திட்டமிட்ட நாடகம்
என்று நாம் தமிழர் கட்சி
வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சீமான்
வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இலங்கை அரசமைப்பில் திருத்தம்
செய்து தமிழர்கள் பிரச்சனைக்கு
நிரந்தரத் தீர்வு காண
அந்நாட்டு ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்
என்று கொழும்பு பயணத்தை
முடித்துக் கொண்டு நாடு
திரும்பியுள்ள கிருஷ்ணா
கூறியுள்ளது, ஈழத் தமிழர்களை
ஏமாற்றும், திசை திருப்பும்
நாடகமாகும்.
தமிழர்களுக்கு எதிரான இனப்
படுகொலைப் போரை நிகழ்த்தி
ஒன்றே முக்கால் இலட்சம்
தமிழர்களை கொன்று குவித்த
சிங்கள பெளத்த இனவாத அரசின்
தலைவர் தமிழர்களுக்கு சம உரிமை
அளிக்க இந்திய அயலுறவு
அமைச்சர் வலியுறுத்துவதும்,
அதற்கு செவிசாய்ப்பதுபோல்
ராஜபக்ஷவும், இலங்கை
அரசமைப்புச் சட்டத்தில் 13வது
திருத்தத்திற்கும் அதிகமாகச்
சென்று தீர்வுத் திட்டத்தை
அளிக்கப் போகிறேன் என்று
கூறுவதும் தமிழர்களை
மட்டுமல்ல, உலக நாடுகளையும்
ஏமாற்ற இந்திய மத்திய அரசும்,
இனவாத சிங்கள அரசும் இணைந்து
அரங்கேற்றிவரும் கபட
நாடகமாகும்.
அதுமட்டுமல்ல, அதிகாரப்
பகிர்வுத் தொடர்பாக அரசின்
திட்டம் என்ன என்பதை
விளக்கிடுமாறு தமிழ்த் தேசிய
கூட்டமைப்பு கேட்டதற்கு,
அதைப்பற்றியெல்லாம்
அறுதியிட்டுக் கூற முடியாது
என்று மறுத்தது ராஜபக்ஷ அரசு.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே
சென்று பேசிய இனவெறியன்
கோத்தபய ராஜபக்ச, விடுதலைப்
புலிகளை அழித்துவிட்டோம்,
இதற்கு மேல் தமிழர்களுக்கு
தீர்வு என்று கூறுவதற்கு
ஏதுமில்லை என்று
பட்டவர்த்தனமாகத்
தெரிவித்துள்ளார்.
இன்றைக்கு வெளிவந்த கொழும்புச்
செய்திகளில் கூட, 13வது
திருத்தம் பிளஸ் என்றால்
என்னவென்று கேட்டதற்கு,
நாடாளுமன்ற மேலவையை அமைத்து
தமிழர்களுக்கு கூடுதல்
பிரதிநிதித்துவம் அளிப்பதே
என்று இலங்கை அரசின் பேச்சாளர்
கேகலிய ரம்புக்வெல்ல
கூறியுள்ளார்.
தமிழர்கள் கேட்பது சம உரிமை,
முழுமையான அதிகாரப் பகிர்வு.
ஆனால் இலங்கை அரசு பேசுவது
வெற்று பிரதிநிதித்துவம்!
அதுமட்டுமல்ல, காங்கிரஸ்
கட்சியும் இன்றைய மத்திய
அரசும் வலியுறுத்தும் 13வது
திருத்தத்தின் அடிப்படையிலான
தமிழர் மாகாணங்கள் இணைப்பு
என்பது ஏற்கனவே அந்நாட்டு
உச்ச நீதிமன்றத்தால்
நிராகரிக்கப்பட்ட ஒன்று.
அதனை நன்கு அறிந்த பின்னரும்,
திரும்பத் திரும்ப அதைப்
பற்றியே மத்திய அரசு
வலியுறுத்துவது ஏன்? அது
இலங்கைத் தமிழர்களை மட்டுமல்ல,
உலகத் தமிழர்கள் அனைவரையும்
ஏமாற்றவும், உலக நாடுகளை திசை
திருப்பவுமே என்பதை
புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழர்களை இனப் படுகொலை செய்த
இலங்கை அதிபர் ராஜபக்ஷவையும்,
இலங்கை அரசையும் சர்வதேச மனித
உரிமை நீதிமன்றத்தில் நிறுத்த,
பன்னாட்டு விசாரணைக் குழுவை
நியமிக்க வேண்டும் என்ற
தமிழர்களின் கோரிக்கைக்கு உலக
நாடுகளின் ஆதரவு பெருகி வரும்
நிலையில், இரண்டு அரசுகளும்
சேர்ந்து இப்படிப்பட்ட ஏமாற்று
நாடகத்தை அரங்கேற்றுகின்றன
என்பதை தமிழர்கள் உணர்ந்து
கொள்ள வேண்டும்.
உள்நாட்டுப் போர் முடிந்து
இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட
நிலையிலும் நம் சொந்தங்களுக்கு
எதிரான இனப் படுகொலையும்,
கடத்தல்களும், கற்பழிப்புகளும்
இன்றும் நமது மற்றொரு தாய்
மண்ணில் தொடர்ந்து நடந்து
வருகிறது.
அவர்களின் துயரை உலகின்
பார்வைக்குக் கொண்டு வரவே ஒரு
பன்னாட்டு பார்வையாளர்கள்
குழுவை ஐ.நா. இலங்கைக்கு
அனுப்ப வேண்டும் என்று நாம்
வலியுறுத்துகிறோம்.
எனவே, இலங்கைத் தீவில்
சமஉரிமையுடனும், முழுச்
சுதந்திரத்துடன் தமிழர்கள்
வாழ வேண்டுமெனில் அதற்கு தனித்
தமிழ் ஈழம் அமைப்பதே ஒன்றே
நிரந்தரத் தீர்வாகும் என்ற
உறுதியான இலக்கை நோக்கி நாம்
தொடர்ந்து போராட வேண்டும்
என்று நாம் தமிழர் கட்சி
எச்சரிக்கிறது.