யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக்
கண்காட்சி நிகழ்வின் பிரதம விருந்
தினரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை நிகழ்வின் பிரதம விருந்தினரான பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிரதாயப்பூர்வமாக நாடாவை வெட்டி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
துரையப்பா விளையாட்டரங்கில் இலங்கை கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து யாழ்ப்பாண தொழிற்துறை மன்றம் ஏற்பாடு செய்த 2012ம் ஆண்டுக்கான சர்வதேச வர்த்தகக் கண்காட்சியையே அமைச்சர் அவர்கள் தொடக்கி வைத்தார்.
முன்பதாக பொது நூலகத்திலிருந்து பிரதம விருந்தினர் உள்ளிட்டோர் மங்கல வார்த்தியம் சகிதம் பிரதான வீதிவழியாக துரையப்பா விளையாட்டரங்கை வந்தடைந்ததுடன் கண்காட்சிக் கூடங்களுக்கான பிரதான வாயில் திறந்து வைக்கப்பட்டது.
அமைச்சர் அவர்கள் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு காட்சிக் கூடங்களுக்கும் விஜயம் செய்து துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடி அவை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாகவும் இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் 250க்கும் மேற்பட்ட வர்த்தக தொழிற்துறை நிறுவனங்களின் காட்சிக் கூடங்கள் அமையப் பெற்றுள்ளதுடன் இவற்றில் கட்டிடப் பொருட்கள் அலங்கார அழகியல் சாதனங்கள் விளையாட்டுப் பொருட்கள் கனரக இயந்திர சாதனங்கள் இலத்திரனியல் பொருட்கள் கைத்தொழில் உபகரணங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் விற்பனைக்கான பொருட்களும் வைக்கப்பட்டள்ளன.
இல்வர்த்தக சந்தையில் இலங்கை மட்டுமல்லாது இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் உற்பத்திகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் எதிர்வரும் 22ம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சி நாள்தோறும் காலை 10.00 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ள நிலையில் இதனை பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் வர்த்தகர்கள் எனப் பெருமளவானோர் பார்வையிடுவதுடன் பொருட்களையும் கொள்வனவு செய்வதையும் காணக் கூடியதாகவுள்ளது.
இவ் வர்த்தகக் கண்காட்சி மூலம் வடபகுதிக்கும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களுக்கும் வர்த்தகத் தொடர்புகளை தரப்படுத்துவதே இதன்நோக்கம் எனவும் இன்றும், நாளையும் கொழும்பு அக்னி இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் துரையப்பா வளையாட்டரங்கில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.