பாடசாலை போசாக்கு திட்டத்தை வடக்கில்
வலுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
திட்டம்!
வெளிநாடுகளிலும் பார்க்க இலவசக் கல்வியை வழங்குகின்ற நாடுகளில் இலங்கை முன்னுதாரணமாக விளங்கி வருகின்றது என்பதுடன் மாணவர்களை பாடசாலைக் கல்வியோடு இணைந்த ஆரோக்கியமான சமூகமாக வளர்த்தெடுக்க வேண்டுமென்பதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளதென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வல்டெ;டித்துறை சிவகுரு வித்தியாலயத்தில் இன்றைய தினம் (19) இடம்பெற்ற பாடசாலைப் போசாக்கு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரையான நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள தேசிய போஷாக்கு நிகழ்ச்சித் திட்டத்தை வல்வெட்டித்துறையில் தொடக்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
எமது நாட்டில் நான்கு மில்லியன் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை மேற்கொண்டு வருகின்றனர் என்பதுடன், சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதங்கள் இல்லாது அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
இதனூடாக பாடசாலைக் கல்வியோடு இணைந்த உடல் உள ரீதியில் வளர்ச்சியடைந்த ஆரோக்கியமான சமூகமாக எமது மாணவர்களை வளர்த்தெடுக்க வேண்டுமென்பதே ஜனாதிபதி அவர்களினது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இதன் அடிப்படையில்தான் நிதித்துறை திறைசேரி யுனிசெப் உள்ளிட்ட ஏனைய துறைசார்ந்த திணைக்களங்களின் ஊடாக 2006ம் ஆண்டு முதல் ஜனாதிபதியால் போசாக்கு தேசிய நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் 2012ம் ஆண்டில் இத் திட்டத்தினூடாக தரம் ஒன்று முதல் தரம் ஒன்பது வரை கல்வி கற்கும் 10 இலட்சம் மாணவர்கள் பயன்பெறவுள்ளனர்.
இந்நாட்டில் நிலவிய கொடிய யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது இங்கு நல்லதொரு எதிர்காலம் உருவாகியுள்ளதுடன் இலவச சீருடை இலவசக் கல்வி மற்றும் போசாக்கு தேசிய நிகழ்ச்சித் திட்டம் என்பவை குறித்து உலகின் பல நாடுகளும் ஆச்சரியம் அடைந்துள்ளன.
இதன் பிரகாரம் இலவசப் பாடப் புத்தகம் சீருடை உணவு என்பனவற்றுடன் உரிமைகளைப் பாதுகாக்கின்ற நாடாக விளங்குவதுடன், நாடளாவிய ரீதியில் 5000 ஆரம்பப் பாடசாலைகளும் 1000 இடைநிலைப் பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் வடமாகாணத்தில் ஆயிரம் பாடசாலைத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கல்வியமைச்சு ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியிடம் நிதியை வழங்கியுள்ளதாகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் தலைமையில் வடமாகாணத்தில் சேதமடைந்துள்ள நிலையில் காணப்படும் அனைத்து பாடசாலை மலசலகூடங்களும் புனரமைக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.
வடபகுதி மாணவர்கள் தென்பகுதிக்கும் தென்பகுதி மாணவர்கள் வடபகுதிக்கும் சென்றுவருவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கடந்தாண்டு நடைபெற்ற ஜி.சீ.ஈ உயர்தர பரீட்சை முடிவுகள் தாமதமாவதை சிலர் அரசியலாக்க முயற்சித்தமையும், யாழ் மாவட்ட மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தமை பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும் போது இந்தத் தேசிய போசாக்கு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் வறிய மாணவர்களின் கல்வி மட்டுமல்லாது அவர்களது ஆரோக்கியத்தையும் வளர்த்தெடுப்பதற்கு உதவியாக அமையும் என்பதுடன் அந்த வகையில் எமது மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தை சிறப்பானதாகவும் தரமுள்ளதாகவும் கொண்டு வருவதற்கு தாம் முழுமையான பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் இதன்போது உறுதிபடத் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் வடக்கில் இத்திட்டத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக பிரதான வீதியிலிருந்து பாடசாலை மாணவர்களின் இசை அணிவகுப்புடன் அமைச்சர்கள் உள்ளடங்கிய விருந்தினர்கள் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு பாடசாலை அதிபர் சிவநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாண்டுக்கான பாடசாலைப் போசாக்கு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை அமைச்சர்கள் சம்பிரதாயப் பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
இதனிடையே சிவகுரு வித்தியாசாலையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் பாடசாலை சுகாதார மேம்பாட்டு இணையத்தளத்தையும் கல்வியமைச்சர் தொடக்கி வைத்தார்.
அத்துடன் கடந்தாண்டு வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற உடுப்பிட்டி அமெரிக்க மிசன் பாடசாலை மாணவன் கமலவாசனுக்கும் தேசிய ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட யாழ் பரியோவான் கல்லூரி மாணவன் சஞ்சேஜனுக்கும் கல்வியமைச்சர் மடிக்கணினிகளை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கல்வியமைச்சின் மேலதிகச் செயலாளர் பிரேம திலக்க, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க உள்ளிட்ட திணைக்களங்களின் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.