|
தமிழ்
மக்களின் விடுதலைக்கான ஆயுதப்
போராட்டத்தை முன்னெடுத்த ஆரம்பகால
போராட்ட தலைவர்களில் ஒருவரான
க.உமாமகேஸ்வரன(முகுந்தன்)படுகொலைசெய்யப்பட்டு
இன்றுடன் 21.வருடங்கள் நிறைவு
பெற்றுள்ளன.
தமிழீழ மக்கள்
விடுதலைக்கழகத்தின்(புளொட்)செயலதிபரும்
ஜனநாயக மக்கள் விடுதலை
முன்னணியின்(டி.பி.எல்.எவ்)
ஸ்தாபகருமான அமரர் க.உமாமகேஸ்வரன்
1989.ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16.ஆம்
திகதி கொழும்பு பம்பலப்பிட்டி
கடற்கரையோரத்தில் வைத்து படுகொலை
செய்யப்பட்டார்.
நிலஅளவையாளர் திணைக்களத்தின்
அதிகாரியாகக் கடமையாற்றிய உமாமகேஸ்வரன்
அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின்
கொழும்புக்கிளை செயலாளராகவும்
நீண்டகாலமாக செயற்பட்டவர்.
1976 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதிய
புலிகள் அமைப்பு New Tamil Tigers.
NTT தமிழீழ விடுதலைப் புலிகள்
Liberation Tigers of Tamil Eelam.
LTTE என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு
செயற்படத் தொடங்கிய போது அதன் முதற்
தலைவராக அமரர் க.உமாமகேஸ்வரன் தெரிவு
செய்யப்பட்டார்.
பலஸ்தீனத்தில் பயிற்சியை முடித்துக்
கொண்ட உமாமகேஸ்வரன் பலஸ்தீன போராட்ட
அமைப்புக்களுடன் நெருங்கிய உறவைக்
கொண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கான
இளைஞர்களை பயிற்சிக்காக
பலஸ்தீனத்திற்கு அனுப்பி வைத்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சுத்த
இராணுவக்
கண்ணோட்டத்தையும்,தாக்கிவிட்டுத்
தப்பியோடும் தாக்குதல் வழிமுறையையும்
நிராகரித்து நாடு தழுவிய மக்கள்
போராட்டத்தினூடாகவே தமிழ் மக்களின்
விடுதலையை வென்றெடுக்க முடியும் என்ற
புரிதலோடு சுந்தரம் முதலானோர் தமிழீழ
விடுதலைப் புலிகளிலிருந்து விலகி
புதியபாதை என்ற பெயரிலான பத்திரிகையை
ஆரம்பித்த போது சுந்தரத்துடன் இணைந்து
வெளியேறி வந்த உமாமகேஸ்வரன்
புதியபாதைக் குழுவில் இணைந்து
கொண்டார்.பின்னர் 1980ஆம் ஆண்டு
காலப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலை
கழகத்தை(புளொட்) தோற்றுவித்தார்.
பரந்துபட்ட மக்களை ஒன்றிணைப்பதன்
ஊடாகவும் நீண்டகால மக்கள் புரட்சியின்
ஊடாகவுமே மக்களுக்கான விடுதலையை
வென்றெடுக்க முடியும் என்பதன்
அடிப்படையில் மக்கள்
அமைப்பு,மாணவரமைப்பு,தொழிற்சங்க
அமைப்பு,கடற்றொழிலாளர் மற்றும்
விவசாயிகள் அமைப்புக்கள் என்றெல்லாம்
வெகுஜன இயக்கங்களை உருவாக்கி
வடகிழக்கில் ஒரு பலம் பொருந்திய
அமைப்பாக புளொட் அமைப்பை
உருவாகியிருந்ததோடு,தெற்கில் இடதுசாரி
அமைப்புக்களோடு உறவுகளை
வளர்த்திருந்ததோடு முஸ்லீம்,மற்றும்
மலையக இளைஞர்கள் ஆயிரக்கணக்கில்
இணைவதற்குமான வேலைத்திட்டங்களையும்
அவ்வமைப்பின் ஏனைய இடதுசாரி
சிந்தனையாளர்களுடன் இணைந்து
உருவாக்கியிருந்தார்.
குறிப்பாக புளொட் அமைப்பின் மத்திய
குழுவில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த
உறுப்பினர்கள் அங்கம்
வகித்திருந்தனர்.சந்ததியார்,வாசுதேவா,கண்ணன்
என்ற ஜோதீஸ்வரன் முதலானோர் மட்டத்தில்
முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும்
மத்திய குழுவில் முக்கியத்துவம்
வகித்ததோடு தளத்தின்
நிர்வாகக்கட்டமைப்பிற்கும் முஸ்லீம்
இளைஞர் ஒருவரே பொறுப்பாக இருந்த
நிலைமைக்கு புளொட் அமைப்பை
வளர்த்தெடுத்திருந்தார்.
தென்னிலங்கைச் சிங்கள மக்களுடைய
ஆதரவில்லாமல் தமிழ் மக்கள் தமது
விடுதலையை வென்றெடுப்பது சாத்தியமில்லை
என்பதால் தென்னிலங்கையின் சிங்கள
மக்களுக்கு தமிழ் மக்களின்
போராட்டத்தைப் புரிய வைக்கவும்,
அவர்களுடைய ஆதரவைப் பெற்றுக்
கொள்வதற்குமாக தமிழீழத்தின் குரல்
என்கிற வானொலியை மூன்று மொழிகளிலும்
ஆரம்பித்திருந்தார்.இதனால் கவரப்பட்ட
ஏராளமான சிங்கள இளைஞர்கள் புளொட்டுடன்
இணைய ஆரம்பித்திருந்தனர்.அமரர்
க.உமாமகேஸ்வரன் போன்றவர்களின் இழப்பு
இன்றுவரை ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். |